ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் படுகொலைக்கு சவூதி இளவரசர் மொஹமட் பின் சல்மான்தான் பொறுப்பு எனும் அமெரிக்க செனட்டின் அதிரடித் தீர்மானத்திற்கு சவூதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் யெமனில் போரில் ஈடுபட்டுள்ள சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகளுக்கு வழங்கிவரும் இராணுவ உதவிகளை நிறுத்துவதற்கும் அமெரிக்க செனட்டில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட இத்தீர்மானம் பொய்யான குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தமது பிராந்திய மற்றும் சர்வதேச பங்கை குறைப்பதற்கான சதியெனவும் சவூதியின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் மாதம் இஸ்தான்பூல் சவூதி தூதரகத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளரின் படுகொலையில் இளவரசர் மொஹம்மட் பின் சல்மானின் ஈடுபாட்டை சவூதி அரசு தொடர்ந்து மறுத்துவருகிறது.
சவூதி அரேபியா ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் படுகொலை வருத்தத்திற்கு உரியது எனவும், இந்தப் படுகொலைக்கும் சவூதி அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் சவூதி வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜமால் கஷோக்ஜி கொலை வழக்கில் விசாரணை நியாயமாக நடத்தப்படுவதற்கு சவூதி தவறுவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.