மூடுவிழாவை நோக்கித் தள்ளப்படும் கபூரியா அரபுக் கல்லூரி

0 359

ஏ.ஆர்.ஏ.பரீல்

நாட்டின் அர­புக்­கல்­லூ­ரி­களில் 92 வருட காலம் பழைமை வாய்ந்த மஹ­ர­கம கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி திட்­ட­மிட்டு மூடு­வி­ழாவை ­நோக்கி நகர்த்­தப்­பட்­டு­ வ­ரு­கின்­றமை சமூ­கத்தை கண்­க­லங்கச் செய்­துள்­ளது.

கபூர் ஹாஜி­யா­ரினால் வக்பு செய்­யப்­பட்டு பல­த­சாப்­தங்கள் சீராக இயங்கி வந்த கபூ­ரிய்­யா­வுக்கா இன்று இந்த நிலைமை என்று வியக்கும் அள­வுக்கு நிலைமை மோச­ம­டைந்­துள்­ளது.

இன்று அல்­லாஹ்வை மறந்து, அல்­லாஹ்­வுக்குப் பயப்­ப­டாமல் கபூ­ரிய்யா வக்பு சொத்­தல்ல– அது குடும்ப சொத்து, குடும்ப நிதியம் (Family Trust ) என்று வாதி­டு­வது அல்­லாஹ்வை மறந்­து­விட்ட செய­லாகும்.

கல்­லூ­ரியில் க.பொ.த (சாதா­ரண தரம்) க.பொ.த. (உயர்­தரம்) படிக்கும் மாண­வர்­களை பலவந்தமாக வெளி­யேற்­றி­விட்டு கல்­லூ­ரியை மூடி­வி­டு­வ­தற்கு மேற்­கொள்ளும் முயற்சி எந்த அடிப்படையிலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தாகும். கபூ­ரிய்யா ஒரு தனியார் நிதியம் அல்ல. பொது நிதியம் (Public Trust ) என்று வக்பு சபை தீர்ப்பு வழங்­கி­யுள்ள நிலையில் திட்­ட­மிட்டு கபூ­ரிய்­யாவை ஒரு குடும்பச் ெசாத்­தாக மாற்­றிக்­கொள்­வ­தற்­கான நகர்­வு­கள் மேற்­கொள்­ளப்பட்டு வருகிறது.

மாவட்ட நீதி­மன்றின் தீர்ப்பு
கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி தொடர்பில் மாவட்ட நீதி­மன்றின் விசா­ர­ணையின் கீழ் இருந்த வழக்கில் மாவட்ட நீதி மன்றம் கடந்த 15 ஆம் திகதி தீர்ப்­பொன்­றினை வழங்­கி­யி­ருந்­தது. கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூ­ரியின் அதிபர் பத­வி­ வி­லகி கல்­லூ­ரி­யி­லி­ருந்தும் வெளி­யேற வேண்­டு­மென்­பதே அந்த உத்­த­ர­வாகும்.

கபூ­ரிய்­யாவில் அதிபர் ஒருவர் பத­வியில் இருக்­கும்­போது புதிய அதிபர் ஒருவர் கல்­லூ­ரியின் நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்­க­ளினால் நிய­மிக்­கப்­பட்டார். அப்­பு­திய அதிபர் பத­வியில் இணைந்து ஒரு தினத்­திலே வெளி­யே­றி­விட்டார். இந்­நி­லையில் பழைய அதி­பரே பத­வி­வ­கித்தார். இந்த அதி­ப­ருக்கே கல்­லூ­ரி­யி­லி­ருந்தும் வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நீதி­மன்றின் உத்­த­ர­வுக்குப் பின்பு அதிபர் பதவி விலகிச் சென்று விட்டார். ஆனால் மறு­தினம் 16 ஆம் திகதி, 17 ஆம் திக­தி­களில் சிலர் கல்­லூ­ரிக்கு வந்து மாண­வர்­களும் கல்­லூ­ரி­யி­லி­ருந்து வெளி­யேற வேண்டும் என்று உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ள­தாகக் கூறி மாண­வர்­களை வெளி­யேற்­றி­யுள்­ளார்கள். மாண­வர்­களை வெளி­யே­று­மாறு அச்­சு­றுத்­தி­யுள்­ளார்கள். இத­னை­ய­டுத்து பயத்­தினால் மாண­வர்கள் வெளி­யேறி தங்­க­ளது வீடு­க­ளுக்கு இர­வோ­டி­ர­வாகச் சென்­றுள்­ளனர். தற்­போது 52 மாண­வர்­களில் 12 பேரே கல்­லூ­ரியில் எஞ்­சி­யுள்­ளனர்.

ஜனா­தி­பதி உட­ன­டி­யாகத் தலை­யி­ட­வேண்டும்
கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூ­ரியை திட்­ட­மிட்டு மூடி­வி­டு­வ­தற்கு சூழ்ச்சி நடை­பெ­று­கி­றது. மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கைகள் ஸ்தம்­பிதம் அடைந்­துள்­ளன. எனவே ஜனா­தி­ப­தியும், அர­சாங்­கமும் இது விட­யத்தில் உட­ன­டி­யாகத் தலை­யிட வேண்டும் என மேல்­மா­காண முன்னாள் ஆளுனர் அசாத்­சாலி குறிப்­பிட்­டுள்ளார்.

கடந்த வியா­ழக்­கி­ழமை கொழும்பு– நிப்போன் ஹோட்­டலில் கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி தொடர்பில் ஊடக மாநா­டொன்று இடம் பெற்­றது. இம்­மா­நாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

“கபூ­ரிய்­யா­வையும், அதன் வளங்­க­ளையும் காப்­பாற்­று­வோம்”­என்ற தலைப்­பிலே குறிப்­பிட்ட ஊடக மாநாடு இடம் பெற்­றது.

ஊடக மாநாட்டில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில், கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூ­ரிக்கு வரு­மா­னத்தை ஈட்­டிக்­கொள்­வ­தற்­காக கபூர் ஹாஜி­யா­ரினால் வக்பு செய்­யப்­பட்ட கொழும்பு 14 இல் உள்ள முன்னாள் சுலைமான் வைத்­தி­ய­சாலை இயங்­கி­வந்த காணியும் வேறு நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. 744 மில்­லியன் ரூபாய்­க­ளுக்கு அக்­கா­ணியை ஆசி­ய­ன் ஜெம் மார்­கட்டிங் நிறு­வ­னத்­துக்கு வழங்­கப் பட்டது.

நோலிமிட் நிறு­வ­னத்­துடன் செய்து கொண்ட உடன்­ப­டிக்­கை அல்­லாஹ்­வுக்குப் பயந்து அதன் உரி­மை­யா­ளரால் ரத்துச் செய்து கொள்­ளப்­பட்­டது. பின்பு 1160 மில்­லியன் ரூபாய்­க­ளுக்கு வேறு நிறு­வ­னத்­துக்கு வழங்­கப்­பட்­டது. ஒரே நாளில் மூன்று மாற்­றங்கள் இடம்­பெற்­றன.

கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி மற்றும் அதன் வக்பு சொத்­துக்கள் தொடர்பில் நீதிவான் நீதி­மன்று, மாவட்ட நீதி­மன்றம் ,மேல் நீதி­மன்றம்,மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் மற்றும் வக்பு ட்ரிபி­யுனல் ஆகிய நீதி­மன்­றங்­களில் வழக்­குகள் விசா­ர­ணையின் கீழ் உள்­ளன.
கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி தொடர்பில் உரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக ஜனா­தி­பதி ஆலோ­சனைச் சபை­யொன்­றினை நிறுவ வேண்டும். கபூ­ரிய்யா விவ­கா­ரத்தில் பொலி­ஸாரும் பக்­கச்­சார்­பா­கவே நடந்து கொள்­கின்­றனர். இவ்­வா­றான பொலிஸார் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்டும்.

கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி தொடர்பில் கல்­லூ­ரிக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் அடா­வ­டித்­த­னங்கள் தொடர்பில் கடந்த வருடம் செப்­டெம்பர் மாதம் 23 ஆம் திகதி சி.ஐ.­டிக்கு முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. ஆனால் சி.ஐ­.டி­யினர் இது­வரை அது தொடர்பில் எந்த விசா­ர­ணையும் முன்­னெ­டுக்­க­வில்லை. வக்பு சொத்­தான கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூ­ரியும் அதன் காணியும் உட­மை­களும் கல்­லூரி நம்­பிக்கை பொறுப்­பா­ளர்­களின் தனிப்­பட்ட சொத்­தாக மாறி­வி­டக்­கூ­டாது.

கபூ­ரிய்யா பழைய மாண­வர் சங்கம்
கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூ­ரியின் வளாகம் 17 ½ ஏக்கர் பரப்­ப­ளவைக் கொண்­டது. இங்­கு வி­டுதி, நூலகம் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு என்­ப­வற்றை நிறு­வு­வ­தற்கு பழைய மாணவர் சங்­கமே உதவி செய்­தி­ருக்­கி­றது. சுய­தொழில் பயிற்­சிக்­கூ­டமும் பழைய மாணவர் சங்­கத்­தி­னாலே நிறு­வப்­பட்­டது. ஆனால் இன்று கல்­லூ­ரியின் நூலகம் மூடப்­பட்­டுள்­ளது.

பழைய மாணவர் சங்கம் கல்­லூரி வளா­கத்தில் 300 தென்­னங் ­கன்­று­களை நட்­டி­யுள்­ளது. ஆனால் கல்­லூரி நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்­சபை பழைய மாண­வர்கள் கபூ­ரிய்­யாவின் பெயரில் நிதி சேக­ரிப்­ப­தாக பொய்­குற்றம் சாட்டி வரு­கி­றார்கள் என பழைய மாணவர் சங்­கத்தின் செய­லாளர் ஐ.எல்.டில்சாத் தெரி­வித்­துள்ளார்.

கல்­லூ­ரியின் தேவை­க­ளுக்­காக, மாண­வர்­களின் தேவை­க­ளுக்­காக நிதி சேக­ரிக்­கப்­பட்­டி­ருந்தால் அதற்­கான ஆவ­ணங்கள் எம்­மிடம் இருக்­கின்­றன என்றும் அவர் கூறி­யுள்ளார்.
இதே­வேளை கல்­லூ­ரிக்குள் இயங்கி வந்த பழைய மாணவர் சங்­கத்தின் காரி­யா­லயம் உடைக்­கப்­பட்டு அங்­கி­ருந்த ஆவ­ணங்கள் திரு­டப்­பட்­டி­ருக்­கின்­றன.. இது தொடர்பில் பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

முஸ்லிம் எம்.பிக்கள் தலை­யி­ட ­வேண்டும்
கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூ­ரியில் தற்­போது சுமார் 12 மாண­வர்கள் மாத்­தி­ரமே எஞ்­சி­யி­ருக்­கி­றார்கள். அவர்­க­ளுக்கு பொலிஸ் மற்றும் கல்­லூரி பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­களால் கல்­லூ­ரியை விட்டு வெளி­யே­று­மாறு அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்­றன.
‘தற்­போது கல்­லூ­ரியில் ஆசி­ரி­யர்கள் இல்லை. பணி­யா­ளர்கள் இல்லை. சமை­யற்­காரர் இல்லை. எங்­க­ளது உணவை எம்மால் இய­லு­மா­ன­வரை நாங்­களே சமைத்து உண்­ணு­கிறோம். வரு­டக்­க­ணக்கில் கல்வி கற்ற எம்மால் வெறு­மனே வெளி­யேற முடி­யாது. இங்கு படிக்கும் மாண­வர்­க­ளுக்கு நியாயம் கிட்ட வேண்டும். சமூகம் எமது பிரச்­சி­னையில் உடன் தலை­யிட வேண்டும். முஸ்லிம் பாரா­ளு­மன்­ற உறுப்பினர்கள் மெளனம் களைய வேண்டும்’’ என தற்­போது கல்­லூ­ரியில் தங்­கி­யி­ருக்கும் மாண­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.
பொலிஸார் தினமும் வந்து எம்மை வெளி­யேறிச் செல்­லு­மாறு கட்­ட­ளை­யி­டு­கி­றார்கள். நாங்கள் மன அழுத்­தங்­க­ளு­டனே இருக்­கிறோம். எம்மால் கல்­வியை கைவிட முடி­யாது என்­கி­றார்கள் அந்த மாண­வர்கள்.

வக்பு சொத்­துக்­களை பாது­காக்க நட­வ­டிக்கை
நாட்டின் பல பகு­தி­க­ளிலும் சவால்­க­ளுக்­குள்­ளா­கி­யி­ருக்கும் வக்பு சொத்­துக்கள் மற்றும் கபூ­ரிய்யா அரபுக் கல்லுாரியை நம்­பிக்­கை­யாளர் சபை­யி­ட­மி­ருந்து பாது­காத்தல் தொடர்­பாக கடந்த திங்­கட்­கி­ழமை முஸ்லிம் சிவில் சமூ­க­ அ­மைப்­புகள் கொள்­ளுப்­பிட்­டியில் ஒன்று கூடி கலந்­து­ரை­யா­டின.

கலந்­து­ரை­யா­ட­லுக்கு சிரேஷ்ட ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா தலைமை வகித்தார். நிகழ்வில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா, தேசிய சூரா­ க­வுன்ஸில், ஸ்ரீலங்கா முஸ்லிம் லீக் வாலிப முன்­னணி, வை.எம்.எம்.ஏ., அல் முஸ்­லிமாத், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­னணிகள் சம்­மே­ளனம், முஸ்லிம் மீடியா போரம், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் என்­ப­வற்றின் பிர­தி­நி­திகள் கலந்து கொண்­டி­ருந்­தனர்.
மேலும் மேல்­மா­காண முன்னாள் ஆளுனர் அசாத்­சாலி, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் ஆகி­யோரும் பங்­கு­கொண்­டி­ருந்­தனர்.

கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி, கள்­எ­லிய முஸ்லிம் பெண்கள் அர­புக்­ கல்­லூரி, மாகொல அநாதை இல்லம் உட்­பட நாட்டின் பல்­வேறு பகு­தி­களில் சவால்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள வக்பு சொத்­துக்­களைப் பாது­காப்­ப­தற்கு சட்ட ரீதி­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு கலந்­து­ரை­யா­ட­லின்­போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பில் முஸ்லிம் சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் மூலம் உரிய சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு இணக்­கப்­பாடு எட்­டப்­பட்டுள்ளது. அத்­தோடு வக்பு சொத்­துக்­களைப் பாது­காப்­பது தொடர்பில் நாடெங்­கு­முள்ள பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கி­க­ளுக்கு தெளி­வூட்­டல்­களை வழங்­கு­வ­தற்கும் உத­விகள் வழங்­கு­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.
கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி விவ­காரம் பல்­வேறு நீதி­மன்­றங்­களில் விசா­ர­ணையின் கீழ் உள்­ளதால் அது தொடர்பில் சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

மாண­வர்­களை அழைத்து வர நட­வ­டிக்கை
கல்­லூ­ரியை விட்டு வெளி­யேறிச் சென்று வீடு­களில் தஞ்­ச­ம­டைந்­துள்ள சுமார் 40க்கும் மேற்­பட்ட மாண­வர்­களை மீண்டும் கல்­லூ­ரிக்கு அழைத்து வரும் நட­வ­டிக்­கை­களில் பழைய மாணவர் சங்கம் ஈடு­பட்­டுள்­ளது. சம்­பந்­தப்­பட்ட மாண­வர்­களின் பெற்­றோரைத் தொடர்பு கொண்டு அதற்­கான முன்­னெ­டுப்­பு­களில் ஈடு­பட்­டுள்­ளது என பழைய மாணவர் சங்­கத்தின் செய­லாளர் தெரி­வித்தார்.

வக்பு சொத்­தான கபூ­ரிய்­யாவை சூழ்ச்­சிக்­கா­ரர்­களின் கரங்­க­ளி­லி­ருந்தும் மீட்­டெ­டுப்­பதே எமது இலட்­சியம் என பழைய மாணவர் சங்கம் தெரி­விக்­கி­றது.

பெற்­றோர் நம்­பிக்கை பொறுப்­பாளர்களுடன் கலந்துரையாட முயற்சி
கடந்த திங்­கட்­கி­ழமை கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி மாண­வர்­களின் பெற்றோர் கல்­லூ­ரிக்கு நேரடி விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டு கல்­லூரி நம்­பிக்கை பொறுப்­பா­ளர்­களைச் சந்­தித்து கலந்­து­ரை­யாட முற்­பட்­டனர் என்றாலும் அது சாத்தியப்படவில்லை.
இந்­நி­லையில் மாண­வர்­களின் பெற்றோர் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு விஜயம் செய்து திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ளரைச் சந்­தித்து கோரிக்கை கடி­த­மொன்­றினைக் கைய­ளித்­தனர். மாண­வர்கள் கல்­வியைத் தொடர்­வ­தற்கு உறுதி செய்­யு­மாறு கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

கல்­லூ­ரியின் முகா­மைத்­து­வ­சபை என தங்­களைக் கூறிக்­கொண்டு சிலர் கல்­லூ­ரி­யினுள் பிர­வே­சித்து கடந்த 16 ஆம்­ தி­க­திக்கு முன்பு கல்­லூ­ரியை விட்டு வெளி­யே­று­மாறு மாண­வர்­க­ளையும் ஆசி­ரி­யர்­க­ளையும் மிரட்­டி­யுள்­ளனர். இதனால் அச்­ச­மே­லீட்டால் பெரும் எண்­ணிக்­கை­யி­லான மாண­வர்­களும் ஆசி­ரி­யர்­களும் கல்­லூ­ரியை விட்டும் வெளி­யே­றி­யுள்­ளனர் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதுடன் பணிப்­பா­ள­ரிடம் பின்­வரும் கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

எமது பிள்­ளை­களை முன் அறி­வித்­த­லின்றி வெளி­யேற்­றி­ய­மைக்­கான காரணம் என்ன? கடந்த பல வரு­டங்­க­ளாக கல்­லூ­ரியில் பயின்ற எமது பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைக்கு என்ன உத்தரவாதம்? வெளியேறாமல் கல்லூரியினுள் இருக்கும் எமது பிள்ளைகளின் பாதுகாப்பு, கல்வி, உணவு போன்­ற­வற்­றிற்­கான பொறுப்பு யாரு­டை­யது? எமது பிள்­ளை­க­ளோடு தொடர்­பு­பட்­ட­ வி­ட­யங்­களை கேட்­ட­றிந்து கொள்­வ­தற்கு நாம் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? நடை­பெற்று முடிந்­துள்ள மெள­லவி மற்றும் இறு­தி­யாண்டு பரீட்­சை­களின் முடி­வுகள் மற்றும் மெள­லவி சான்­றி­தழ்­களை நாம் எவ்­வாறு பெற்­றுக்­கொள்­வது எனும் வினாக்கள் பணிப்­பா­ள­ரிடம் கோரப்­பட்­டுள்­ளன.

பெற்­றோர்­க­ளா­கிய நாம் பொறுப்­புக்­கூற வேண்­டிய தங்­க­ளது திணைக்­க­ளத்­தி­னூ­டாக இவற்­றிற்­கான தீர்­வினை மிக அவ­ச­ர­மாக வேண்டி நிற்­கிறோம் எனவும் கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை ரமழான் விடு­மு­றைக்­கான அறி­வித்தல் ஒன்றும் கல்­லூ­ரியில் ஒட்­டப்­பட்­டுள்­ளது. மார்ச் 16 ஆம் திகதி முதல் 2023 மே 9 ஆம் திக­தி­வரை விடு­முறை வழங்­கப்­பட்­டுள்­ளது என அறி­வித்தல் தெரிவிக்கிறது. இவ்வறிவித்தல் கடந்த 20 ஆம் திகதியே ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.