எம்.எப்.அய்னா
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாசிமின் மனைவியான பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவித்து கடந்த15 ஆம் திகதி கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் அதிலிருந்து 48 மணி நேரம் கடந்த நிலையிலேயே அதாவது, 17 ஆம் திகதி மாலை 5.45 மணியளவிலேயே அவர் சிறையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார்.
வழக்கின் பின்னணி :
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதிக்கும் ஏப்ரல் 26 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சாரா ஜஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் என்பவர் வெடிபொருட்களை தயாரித்தமை மற்றும் அவற்றை சேகரித்து வைத்திருந்தமை தொடர்பில் நிந்தவூரில் வைத்து அறிந்திருந்தும் (சாரா )ஜெஸ்மின் தெரிவித்தன் ஊடாக அந்த தகவலை பொலிஸாருக்கு அறிவிக்காமை குறித்து பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் 5ஆம் அத்தியாயத்தின் அ, ஆ பிரிவுகளின் கீழ் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எச்.சி. 653/ 21 எனும் குறித்த குற்றப் பகிர்வுப் பத்திரம் கடந்த 2021 நவம்பர் 12 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த குற்றப் பகிர்வுப் பத்திரத்தில், கோட்டை முன்னாள் நீதிவான் ரங்க திஸாநாயக்க, சி.ஐ.டி. அதிகாரிகள், ஒரு இராணுவ வீரர் உள்ளடங்கலாக 30 சாட்சியாளர்கள் பட்டியலிடப்பட்டுள்ளதுடன், சான்றாவணமாக ஒரே ஒரு ஒப்புதல் வாக்கு மூலம் மட்டும் நிரலிடப்பட்டிருந்தது.
இந் நிலையில் இந்த வழக்கானது கடந்த 15 ஆம் திகதி கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கியின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது, வழக்கின் முன் விளக்க மாநாடு நிறைவு செய்யப்பட்டு சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
சட்டத்தரணிகளின் பிரசன்னம்:
வழக்கை நெறிப்படுத்த சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்சி ஹேரத் தலைமையில் அரச சட்டவாதிகளான சத்துரி விஜேசூரிய மற்றும் எம்.எஸ்.எம். லாபிர் ஆகியோர் வழக்குத் தொடுநருக்காக ஆஜராகினர்.பிரதிவாதியான ஹாதியாவுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைரின் வழிநடாத்தலில்,சிரேஸ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையில் சட்டத்தரணிகளான ரிஸ்வான் உவைஸ், வீ. அர்சாத் ஆகியோர் ஆஜராகினர்.
குற்றப் பத்திரிகையை திருத்த முன் வைக்கப்பட்ட கோரிக்கை :
இந் நிலையில், வழக்கு விசாரணை ஆரம்பத்திலேயே, குற்றப் பகிர்வு பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றுப் பொருட்கள் மற்றும் சாட்சியாளர்களின் பட்டியலை திருத்தி மேலும் சில சான்றுப் பொருட்கள் மற்றும் சாட்சியாளர்களை புகைப்படம், ஆவணங்கள் மற்றும் நபர்களாக உள்ளீர்க்க வழக்குத் தொடுநர் தரப்பின் பிரதி சொல்சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் கோரிக்கை முன் வைத்தார்.
எனினும் அந்த கோரிக்கைக்கு பிரதிவாதியின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் கடும் ஆட்சேபனம் வெளியிட்டார். அவசர அவசரமாக முழுமையற்ற குற்றப் பத்திரிகை ஒன்றினை தாக்கல்செய்துவிட்டு, இப்போது அடிக்கடி அதனை திருத்த முனைவதாகவும், இது குற்றப் பத்திரிகையில் தவறவிடப்பட்ட விடயங்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன் விளக்க மாநாடு முடிந்த அடுத்த கணம் இவ்வாறு சட்ட மா அதிபர் சார்பில் குற்றப் பத்திரிகையின் குற்றச் சாட்டினை திருத்தாது, சான்றாவணங்கள் மற்றும் சாட்சிப் பட்டியலை திருத்த விளைவது பிரதிவாதிக்கு அநீதியாக அமையும் என குறிப்பிட்டார்.
குற்றவியல் நடைமுறை சட்டக் கோவைக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட திருத்தம் ஊடாக உள்ளீர்க்கப்பட்டுள்ள 195 (அ) அத்தியாயம், குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 168, 169 ஆம் அத்தியாயங்கள், சாட்சிகள் கட்டளைச் சட்டத்தின் 24 ஆவது அத்தியாயம், பயங்கரவாத தடைச் சட்டத்தின் 16 ஆவது அத்தியாயம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளை மையப்படுத்தி இரு தரப்பினரும் நீண்ட சமர்ப்பணங்களை முன் வைத்தனர்.
இந் நிலையில், ஈற்றில் வழக்குத் தொடுநர் தரப்பின் கோரிக்கையை நியாயமானது என ஏற்றுக்கொண்ட நீதிபதி, திருத்தங்களுக்கு அனுமதியளித்தார்.
சாட்சி விசாரணை :
இதனையடுத்து சாட்சிக் கூண்டுக்கு முதல் சாட்சியாளராக , வழக்காவணத்தின் 30 ஆம் இலக்க சாட்சியாளராக குறிப்பிடப்பட்டிருந்த மேஜர் சுதுசிங்க அழைக்கப்பட்டு சாட்சியம் பெறப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர், பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கைகள், நிந்தவூர் பகுதியில் வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை மீட்ட போது அங்கு சென்று பாதுகாப்பளித்தமை, சாய்ந்தமருது – வெலிவேரியன் பகுதி வீட்டில் நடந்த வெடிப்பு சம்பவத்தை மையப்படுத்திய நடவடிக்கைகளில் பங்கேற்றமை தொடர்பில் மேஜர் சுதுசிங்க சாட்சியமளித்தார். அத்துடன் சாய்ந்தமருது வெடிப்பு சம்பவத்தின் பின்னர், ஹாதியாவையும், அவரது மகளையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க தான் முன்னெடுத்த கடமைகள், மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் பிரஸ்தாபித்தார்.
மகளை ஆரத் தழுவிய ஹாதியா:
இந் நிலையில் வழக்கு விசாரணைகள் மதிய போசன இடைவேளைக்கு நிறுத்தப்பட்ட போது, நீதிமன்ற சிறைக் கூண்டில் ஹாதியா தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அப்போது வழக்கு விசாரணைகளை அவதானிக்க ஹாதியாவின் குடும்ப உறுப்பினர்கள் நீதிமன்றுக்கு வந்திருந்த நிலையில், ஹாதியாவின் 5 வயது மகளும் அவர்களுடன் வந்திருந்தார்.
இடைவேளையில், தனது மகளை ஹாதியா, சிறைக் கூண்டின் கம்பிகளுக்கிடையே ஆரத் தழுவியமை உணர்வு பூர்வமாக இருந்தது.
மேஜரின் செல்பி :
இது இவ்வாறிருக்க, இடைவேளை நேரத்தில் ஹாதியாவின் மகளை அவதானித்த, சாட்சியாளர் மேஜர் சுதுசிங்க, அவருடன் செல்லமாக பேசியமையை காண முடிந்தது. குறிப்பாக தன்னை ஞாபகம் இருக்கின்றதா என கேட்டுக்கொண்டே, ஹாதியாவின் உறவினர்கள், மற்றும் ஹாதியாவின் அனுமதியையும் பெற்றுக்கொன்டு மேஜர் சுதுசிங்க அச்சிறுமியுடன் நீதிமன்ற அறைக்கு வெளியே செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
ஹாதியாவின் ஹிஜாபை கழற்ற முயன்ற வழக்குத் தொடுநர் தரப்பு :
இடைவேளையின் பின்னர் வழக்கு விசாரணைகள் ஆரம்பமான போது, சாட்சி நெறிப்படுத்தலை பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் தொடர்ந்தார். அப்போது சாய்ந்தமருதில் வைத்து மேஜர் சுதுசிங்க மீட்ட பெண் ஹாதியா தான் என ஆள் அடையாளத்தை நிரூபிக்க அவர் விளைந்தார்.
இதன்போது, அப்போது இருந்த தோற்றத்துக்கும் இப்போது இருக்கும் தோற்றத்துக்கும் இடையே வித்தியாசம் இருப்பதை மேஜர் சுதுசிங்க குறிப்பிட்டு, அடையாளம் காண்பது கடினம் என குறிப்பிட விளைந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத், அரச சட்டவாதி லாபிரின் ஆலோசனையை பெற்றதுடன், அவ்வாலோசனை பிரகாரம் ஹாதியா அணிந்திருந்த ஹிஜாபை கழற்றினால் அடையாளம் காண முடியுமா என சாட்சியாளரிடம் வினவினார்.
இந்த கேள்வி நீதிபதி உள்ளிட்ட நீதிமன்றில் இருந்த அனைவரையும் தர்மசங்கடத்துக்குள் தள்ளியதை ஒவ்வொருவரினதும் முகபாவனைகளின் ஊடாக காணக் கூடியதாக இருந்தது.
அக்கேள்வி கேட்கப்பட்டு மறுகணமே எழுந்த ஹாதியாவின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், மேஜர் சுதுசிங்க சாய்ந்தமருது வெலிவேரியன் வீட்டிலிருந்து ஹாதியாவை மீட்டமை தொடர்பான விடயத்தை, பிரதிவாதி தரப்பு ஆட்சேபனை இன்றி ஏற்றுக்கொள்வதாக (அட்மிட்டெட்) நீதிபதிக்கு அறிவித்தார்.
சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் அவ்வாறு அறிவித்ததை அடுத்து, ஹாதியாவை மேஜர் சுதுசிங்க பிரத்தியேகமாக அடையாளம் காட்டத்தேவை இல்லை என நீதிபதி அறிவித்ததால், ஹிஜாபை அகற்ற வேண்டிய தேவை இல்லாமல் போனது.
இந் நிலையில் சாட்சியாளர் மேஜர் சுதுசிங்கவிடம், பிரதிவாதி சார்பில் குறுக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அது மாலை வேளையில் இடை நிறுத்தப்பட்டது.
மாலையில் வழங்கப்பட்ட பிணை :
அதன்படி, நீதிபதி ஜெயராமன் ட்ரொஸ்கி, ஏற்கனவே ஹாதியாவின் சட்டத்தரணிகள் முன் வைத்த பிணைக் கோரிக்கைக்கு அமைவாக நீதிமன்றின் உத்தரவை அறிவித்தார்.
பிரதிவாதியின் சட்டத்தரணிகள் முன் வைத்த வாய்மொழி மூல மற்றும் எழுத்து மூல சமர்ப்பணங்கள், வழக்குத் தொடுநர் தரப்பு பிணையை ஆட்சேபித்து முன் வைத்த எதிர் வாதங்களை ஆராய்ந்து நீதிபதி ஜெயராமன் ட்ரொஸ்கி தனது பிணை குறித்த தீர்மானத்தை அறிவித்தார்.
பிணைக் கோரிக்கையில் முன் வைக்கப்பட்ட விடயங்களும் ஆட்சேபனைகளும் :
ஹாதியாவுக்கு பிணை கோரி முன் வைக்கப்பட்ட கோரிக்கை விண்ணப்பத்தில், அவரின் சட்டத்தரணிகள் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தனர். பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு புதிதாக கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் பிரகாரம் அச்சட்டத்தின் 15 பி பிரிவின் கீழ், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஒரு வருடத்துக்குள் வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்படாத விடத்து பிரதிவாதிக்கு பிணையளிக்க வேண்டும் என்ற விடயத்துக்கு அமைய பிணை கோரப்பட்டிருந்தது.
அத்துடன் ஹாதியாவின் உடல் ஆரோக்கியம், நீண்ட நாட்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடயங்கள் என்பனவும் ஹாதியாவின் சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.எனினும் அந்த காரணிகளுக்கு அமைய பிணையளிக்க சட்ட மா அதிபர் கடும் ஆட்சேபனை முன் வைத்திருந்தார்.
கல்முனை நீதிமன்ற வரலாற்றில் முதல் தடவை:
இந் நிலையில், ஹாதியாவின் பிணைக் கோரிக்கை தீர்ப்பை அறிவித்த கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி, முதலில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் புதிய திருத்தங்களுக்கு அமைய, மேல் நீதிமன்றுக்கு பிணையளிக்கும் அதிகாரம் உள்ளது என்பதை முதலில் திறந்த நீதிமன்றில் மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்க்கப்பட்ட வழக்குகளின் துணையுடன் முன் வைத்தார்.
அதன்படி கல்முனை மேல் நீதிமன்ற வரலாற்றில் முதல் தடவையாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்கொன்றில் பிரதிவாதிக்கு பிணையளித்து தீர்ப்பளிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
கொள்கை மாற்றம், மனித உரிமை நிலைவரங்களை ஆராய்ந்த நீதிபதி:
இலங்கையின் அண்மைக்கால கொள்கை மாற்றங்கள், சர்வதேச மனித உரிமை நிலைவரங்கள், தனி மனித சுதந்திரம் உள்ளிட்டவற்றை மிக ஆழமாக ஆராய்ந்து, மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நீல் இத்தவல, சட்டத்தரணி ஹிஜாஸ் ஒமர் ஹிஸ்புல்லாஹ் விவகார வழக்கில் (CA/PHC/APN/10/22) அளித்த தீர்ப்பை ஆழமாக உள்ளீர்த்து பிணையளிக்கும் தீர்மானத்துக்கு வந்ததாக நீதிபதி அறிவித்தார்.
ஹாதியாவுக்கு சிறுநீரக பிரச்சினை :
இதனிடையே ஹாதியாவின் ஆரோக்கிய நிலை தொடர்பில் அவரது சட்டத்தரணிகள் தொடர்ச்சியாக நீதிமன்றின் அவதானத்துக்கு கொண்டுவந்திருந்த நிலையில், அவருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள்,முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகள் குறித்தும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அதன்படி ஹாதியா தொடர்பிலான வைத்திய பரிசோதனை அறிக்கை கல்முனை நீதிமன்றுக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பிரகாரம் ஹாதியாவின் ஒரு சிறுநீரக செயற்பாடு தொடர்பில் பிரச்சினை இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையும் பிணை உத்தரவின் இடையே நீதிபதி மன்றுக்கு தெளிவுபடுத்தினார்.
நீண்டகால தடுப்பு :
இந் நிலையிலேயே சுமார் 4 வருடங்கள் அரசின் காவலில் (தடுப்பு மற்றும் சிறைச்சாலை) ஹாதியா தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்திய நீதிபதி, அதனை விசேட காரணியாக ஏற்றுக்கொண்டு, ஏனைய விடயங்களையும் விரிவாக ஆராய்ந்து உள்ளீர்த்து பிணையளிப்பதாக அறிவித்தார்.
அதன்படி 25 ஆயிரம் ரொக்கப் பிணை, 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் ஹாதியாவை செல்ல அனுமதித்த நீதிபதி, அவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதித்து, ஒவ்வொரு மாதமும் சி.ஐ.டி.யில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தார்.
நீதிமன்ற உத்தரவின்றி தடுத்து வைக்கப்பட்ட ஹாதியா:
கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கியின் பிணை உத்தரவின் பின்னரும், பாத்திமா ஹாதியா, தொடர்ந்தும் சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் விளக்கமறியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். ஹாதியாவை வேறு ஏதேனும் ஒரு வழக்கின் ஊடாக தொடர்ந்தும் தடுப்பில் வைத்திருக்க பாரிய முயற்சிகள் நடந்த நிலையில் அந்நடவடிக்கை பாரிய சந்தேகத்துக்குரியது. வேறு வழக்குகளில் ஹாதியாவுக்கு விளக்கமறியல் உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டிருந்தால், அது சிறைச்சாலை திணைக்களத்துக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அவ்வாறான நிலையிலேயே ஒவ்வொரு விடயமாக கூறி சிறைச்சாலை திணைக்களமும், சி.ஐ.டி.யும் ஹாதியாவை தடுப்புக்காவலில் வைத்திருக்க பாரிய முயற்சிகளை முன்னெடுத்தன.
கோட்டை நீதிமன்றில் உள்ள வழக்கில் அவரை ஆஜர் செய்ய வேண்டும் என்பதால் இவ்வாறு தடுத்து வைத்துள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் ஊடகங்களிடம் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், ஹாதியாவுக்கு வேறு வழக்குகள் எதுவும் இல்லை எனவும், கோட்டை நீதிமன்றில் இருக்கும் பி அறிக்கை பிரகாரம் தொடுக்கப்பட்ட வழக்கே கல்முனை மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டதாகவும் ஹாதியாவின் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
தடுத்து வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள்:
எவ்வாறாயினும் பாத்திமா ஹாதியா, சிறைச் சாலை பேச்சாளர் கூறியதைப் போல கோட்டை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவில்லை. மாற்றமாக அவரை L95839/21 எனும் வழக்கு கோவையின் கீழ் நீர் கொழும்பு நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகள் ஆஜர் செய்தனர்.
அந்த வழக்கிலக்கம், கட்டுவாபிட்டிய தேவாலயம் மீதான குண்டுத் தாக்குதல் குறித்த வழக்கிலக்கம் என்பதும், அவ்வழக்கு நீதிவான் நீதிமன்றில் நிறைவு செய்யப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்ற சிறப்பு ட்ரயல் அட்பார் அமர்வு முன்னிலையில் 24 பேருக்கு எதிராக வழக்கு விசாரணையின் கீழ் இருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
அந்த கோவையில் பாத்திமா ஹாதியா சந்தேக நபராகவோ பிரதிவாதியாகவோ பெயரிடப்பட்டிருக்கவில்லை.
சி.ஐ.டி.யின் இறுதி முயற்சியும் தோல்வி:
இந்நிலையில் கடந்த 17 ஆம் திகதி பாத்திமா ஹாதியா நீர் கொழும்பு நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது சி.ஐ.டி. அதிகாரி ஒருவரும் முன்னிலையாகியுள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த வழக்கில் ஹாதியாவை சந்தேக நபராக பெயரிடவும், அவருக்கு விளக்கமறியல் உத்தரவை பிறப்பிக்கவும் நீதிவான் மறுத்துள்ளார். இதனால் சி.ஐ.டி.யின் முயற்சி தோல்வியடைந்துள்ளது. வேறு வழக்குகள் தொடர்பிலும் ஹாதியாவை உள்ளீர்க்க முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவையும் தோல்வியடைந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.
மனித உரிமைகள் ஆணைக் குழுவும் களத்தில்:
இந்நிலையில் ஹாதியா, எந்த சட்ட ரீதியிலான உத்தரவுகளும் இன்றி 48 மணி நேரங்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவும் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் எழுத்து மூலம் விளக்கம் கோரியுள்ளது.
சட்டத்தரணிகளும் தொடர் போராட்டம்:
இந்நிலையில் ஹாதியாவின் சட்டத்தரணிகள் ஹாதியாவின் நலன் தொடர்பில் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். குறிப்பாக சிறைச்சாலை திணைக்களத்தினர் மற்றும் நீதிமன்றங்கள் ஊடாக அவர்கள் ஹாதியாவின் நலனுக்காக போராட்டங்களை தொடர்ந்தனர்.
முயற்சிகள் தோல்வியடைந்ததால் விடுவிக்க இணக்கம்:
இந்நிலையில், ஹாதியாவை தொடர்ச்சியாக தடுத்து வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததால், நிலைமை மோசமடைவதை உணர்ந்த சிறைச்சாலைகள் திணைக்களம் 17 ஆம் திகதி மாலை 5.45 மனியளவில் அவரை விடுவிக்க நடவடிக்கை எடுத்தது.
அடுத்த தவணை:
அதன்படி, ஹாதியா எந்த சட்ட ரீதியான உத்தரவுகளும் இன்றி 48 மணி நேரம் சிறைச்சாலை அதிகாரிகளால் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பாரிய போராட்டங்களின் பின்னர் சுமார் 4 வருடங்களின் பின்னர் கம்பிகளின் தடைகளின்றி தனது மகளை ஆரத் தழுவிக்கொள்ள சந்தர்ப்பத்தைப் பெற்று பிணையில் வீடு சென்றுள்ளார்.
ஹாதியாவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு, மேலதிக சாட்சி மற்றும் குறுக்கு விசாரணைகளுக்காக எதிர்வரும் மே 17, 18 ஆம் திகதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
-Vidivelli