ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளை நேர்மையாக முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை
புத்தசாசன, சமய விவகார, கலாசார அமைச்சர் விதுர
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகளை எவ்வித குளறுபடிகளுமின்றி நேர்மையாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த காலங்களில் ஹஜ் விசாக்கள் பல இலட்சம் ரூபாய்களுக்கு விற்கும் நிலைமை காணப்பட்டது. இந்நிலைமையை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது. இதன் அடிப்படையிலே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் தனியான அலுவலகமொன்று திறந்து வைக்கப்பட்டது என புத்த சாசன, சமயம், மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் ஹஜ் விவகாரங்களுக்கென தனியான அலுவலகமொன்றினைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வுக்கு பணிப்பாளர் இஸட்.ஏ.எம். பைசல் தலைமை வகித்தார்.
குறிப்பிட்ட அலுவலகம் ஹஜ்முகவர்கள் சங்கம் மற்றும் இலங்கை ஹஜ் முகவர்கள் சங்கம் என்பனவற்றின் நிதி உதவியின் கீழ் அமைக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அலுவலகத்தை திறந்து வைத்து தொடர்ந்தும் உரையாற்றுகையில், இதுவரைகாலம் ஹஜ் விவகாரங்களுக்கென தனியான ஒரு காரியாலயம் இருக்கவில்லை. இதனால் ஹஜ் யாத்திரிகர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர். மக்களுக்கு சிரமங்களைத் தவிர்ப்பதற்காகவே காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து முஸ்லிம்களுக்கும் கட்சி வேறுபாடுகளின்றி அரசாங்கம் சேவைகளை வழங்கும், தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். முஸ்லிம் பள்ளிவாசல்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டியுள்ளன. அப்பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு முஸ்லிம்கள் சுதந்திரமாக வாழ ஏற்பாடு செய்யப்படும். சில முஸ்லிம் பிரதேசங்களில் பிரச்சினை காணப்படுகிறது. அவற்றிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
கடந்த வருடம் கொவிட் நிலைமை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக குறிப்பிட்ட சிறிய தொகையினருக்கே ஹஜ்வாய்ப்புக் கிட்டியது. இவ்வருடம் இலங்கைக்கு 3500 ஹஜ் கோட்டா கிடைக்கப்பெற்றுள்ளது.
ஹஜ் முகவர் நியமனத்துக்கான நேர்முகப்பரீட்சை தற்போது நடைபெற்று வருகிறது. நேர்முகப்பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் அடுத்தவாரம் ஹஜ்முகவர்கள் நியமனம் வழங்கப்பட்டு ஹஜ் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும். முகவர்கள் வழங்கும் சேவைக்கேற்ப ஹஜ் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும். இது தொடர்பான விபரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பைசல் காசிம், மர்ஜான் பளீல், முஷரப் முதுநபீன்,இஷாக் ரஹ்மான் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்றாஹிம் அன்ஸார் மற்றும் ஹஜ் முகவர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.எம்.ஹிஸாம் ஆகியோரால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார். நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம். பைசல், அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்றாஹிம் அன்ஸார் ஆகியோரும் உரை நிகழ்த்தினர். இதன்போது, சவூதி அரேபியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பேரீச்சம்பழம் ஒரு தொகுதி அமைச்சரினால் வாழைத்தோட்டம் நஜ்மி பள்ளிவாசலுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.– Vidivelli