இலங்கையில் புனித ரமழான் மாதம் நாளை முதல் ஆரம்பமாவதாக நேற்று மாலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாம் எல்லோரும் நாளை முதல் நோன்பு நோற்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். இந்த சந்தர்ப்பத்தில் நம்மோடு இணைந்து வாழ்கின்ற ஏழை எளிய மக்கள் குறித்தும் ஒரு கணம் சிந்திக்க வேண்டியது நமது கடப்பாடாகும்.
ரமழான் மாதத்தில் செய்யப்படுகின்ற கொடைக்கும் மற்ற மாதங்களில் வழங்கப்படுகின்ற கொடைக்கும் பெரிய வேறுபாடு இருக்கின்றது. ரமழான் மாதத்தில் வழக்கத்தை விட கூடுதலாக இறை வழிபாட்டில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவியளிக்க வேண்டும் என்பது மனதில் கொள்ள வேண்டிய அம்சமாகும்.
இஃதிகாஃப் இருப்போர், குர்ஆன் கற்க நாடுவோர், குர்ஆனையும் இறைமார்க்கத்தையும் கற்றுக் கொடுப்போர், ரமழானை சிறந்தமுறையில் பயன்படுத்திக் கொள்ள விழைவோர், இறையில்லப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வோர், முஸ்லிம் உம்மாவின் நலனுக்காக உழைப்போர் போன்றவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பணவுதவி செய்யவேண்டும்.
குறிப்பாக பள்ளிவாசல்களில் இமாம்களாகவும் முஅத்தின்களாகவும் சுத்திகரிப்பு ஊழியர்களாகவும் பணியாற்றுவோர் தொடர்பில் நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும். வெறுமனே ஒரு தொகை அரிசியோடு மாத்திரம் நமது உதவிகளை நிறுத்திவிடாது அவர்களது தேவைகளை ஓரளவேனும் பூர்த்தி செய்யும் வகையில் கூட்டாக உதவிகளை வழங்க வேண்டும்.
ஆக, உலக அளவில் தன்னுடைய நிலை எப்படியிருப்பினும் அதைக் கருத்தில் கொள்ளாமல் வசந்தமாய் வரும் அருள்பெரு ரமழானைப் பயன்படுத்தி தன்னுடைய மறுமை வாழ்க்கையை ஒளிரச் செய்யும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு கை கொடுப்பது தான் ‘ரமழான் கொடை’யின் முக்கிய நோக்கம் என்பதை மறந்துவிடக் கூடாது.
சுழன்றடிக்கும் சூறாவளிக் காற்றைப் போல் நபிகளார் செலவிட்டுள்ளார்கள் என படிக்கிறோம். பயானில் கேட்கிறோம். நபிகளார் என்ன பெரிய பணக்காரரா? சொத்தும் சுகமும் நபிகளாரிடம் கொட்டிக் கிடந்தனவா? கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
சாதாரண காலங்களில் செய்யப்படும் பொதுவான தான தருமங்களைப் போன்றே ரமழான் மாதத்து சதக்காக்களையும் நாம் எடைபோட்டு வைத்துள்ளோம். அதனால்தான் ஃபுகராக்களும் ஏழைகளும் ரமழான் மாதத்தில் வீதிதோறும் திரிந்து கொண்டிருக்கும் அவல நிலை நிலவுகின்றது.
இவ்வரிசையில்தான் நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க உதவுதலும் வருகின்றது. இதை ஏதோ பொதுவான நற்செயல் என வகைப்படுத்தாமல் நோன்பு நோற்றும் சரியான முறையில் நோன்பைத் திறக்கும் வசதியற்றோருக்கான உதவி என்னும் கோணத்தில் பார்க்கவேண்டும். பள்ளிக்கு வந்து நோன்பு திறக்கும் ஆண்கள் மட்டும்தான் இதற்கு தகுதியானவர்களா? வீடுகளில் இருக்கும் ஏழை, எளிய பெண்கள் இவ்வுதவியைப் பெற தகுதியற்றவர்களா?
இறைவனின் திருப்திக்காக தன்னுடைய வருமானத்தை இழந்து இறை வழிபாட்டில் ஈடுபடும் இறையடியானுக்கு இறைவனின் புறத்தில் இருந்து உதவியும் ஒத்தாசையும் வருகின்றது. அது எங்கிருந்து வரும்? எவ்வடிவில் வரும்? என்பதையெல்லாம் யோசித்துப் பார்க்கவேண்டும்
நாம்தாம் அந்தக் கருவிகள். நம்மைப் பயன்படுத்தித்தான் நம் மூலமாகத்தான் இறைவன் அவர்களுக்கு உதவுகிறான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
இறைவனுடைய கருவிகளுள் நாமும் உள்ளோம் என்பதை உணர்ந்து நம் வழியாகவும் இத்தகையோருக்கு இறைவன் உதவக் கூடும் என்பதை ஏற்று உதவவும் ஒத்தாசை செய்யவும் முன்வரவேண்டும். நம்மால் இயன்றதை வழங்க வேண்டும். இத்தகையோரைத் தேடிக்கண்டறிந்து உதவ வேண்டும்.
நாட்டின் சமகால பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அதிகரித்த விலைவாசிக்கு மத்தியில் தான் நாம் இந்த ரமழான் மாதத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இந் நிலையில் ஆடம்பரமான இப்தார்கள், ஒன்றுகூடல்களைத் தவிர்த்து அதற்காக ஒதுக்கப்படும் பணத்தில் ஏழை மக்களுக்கு நிவாரணங்களை கிடைக்கச் செய்வதே காலத்திற்குப் பொருத்தமானதாகும்.- Vidivelli