கல்முனை மாநகர நிதி மோசடி விவகாரம்: விசாரணைக்குழு அறிக்கை கிழக்கு மாகாண பிரதம செயலாளரிடம் கையளிப்பு; நடவடிக்கைகள் தாமதம்
(றிப்தி அலி)
கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொண்ட குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த திங்கட்கிழமை கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிதி மோசடியில் ஈபடுபட்டவர்களின் பெயர் விபரம், அவர்களுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மோசடி செய்யப்பட்ட நிதித் தொகை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்த இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண கணக்காய்வுத் திணைக்களத்தின் பிரதம உள்ளக கணக்காய்வாளர் எச்.எம்.எம். றசீத் தலைமையிலான குழுவினராலேயே இந்த நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மக்களின் வரிப் பணம் கல்முனை மாநகர சபையின் உத்தியோகத்தர்களினால் கையாடப்பட்டுள்ள விடயம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமை மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தினை எழுப்பியுள்ளது.
இந்த நிதி மோசடியுடன் தொடர்புபட்டார்கள் என்ற அடிப்படையில் கல்முனை மாநகர சபையினால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஏ.ஆர்.எம். முஜாஹித் மற்றும் எம்.எம்.ஏ. நஸீம் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் அம்பாறையிலுள்ள விசேட குற்றப்புலன் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கல்முனை மாநகர சபையின் பெயரில் 2020.01.01 ஆம் திகதி தொடக்கம் 2023.02.15 ஆம் திகதி வரையான 38 மாதங்களுக்குள் வழங்கப்பட்ட சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான 2,709 பற்றுச்சீட்டுகள் உரிய அதிகாரிகளின் எந்தவித அனுமதியுமின்றி TaxMan எனும் மென்பொருளின் ஊடாக இரத்துச் செய்யப்பட்டுள்ள விடயம் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
அது மாத்திரமல்லாமல், உள்ளீடு செய்யப்பட்டு இரத்துச் செய்யப்பட்ட பற்றுச்சீட்டுக்களின் 830 தரவுகளில் வருமான வரிக்கோவை இலக்கங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் 892 புதிய வரிக் கோவைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கல்முனை மாநகர சபையில் நிதி மோசடியில் ஈடுபடுவதற்காக திட்டமிடப்பட்டு TaxMan எனும் இந்த மென்பொருள் கொள்வனவு செய்யப்பட்டுள்ள விடயமும் விசாரணைகளின் ஊடாக வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli