ஆங்கிலத்தில் : சேனுகா ஜயகொடி
தனிப்பட்ட மன அழுத்தங்கள், வீட்டுக்குள் நிலவும் பிரச்சினைகள்,பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள தாய்மார்கள் தங்களதும் தங்களது பிள்ளைகளினதும் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த சில வாரங்களாக இடம் பெற்றுள்ள இவ்வாறான சம்பவங்கள் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளன.
கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி 31 வயதான தாயொருவர் வாழ்க்கையில் விரக்தியுற்று எடுத்த முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன் வேதனையில் ஆழ்த்தியது. அந்தத்தாய் பெந்தோட்டை பாலத்தில் தனது இரு பிள்ளைகளையும் அநாதரவாக விட்டு ஆற்றுக்குள் குதித்தார்.
தாயும் இரண்டு பிள்ளைகளும் ஊரகஸ்மன்ஹந்தியவிலிருக்கும் தமது தந்தையைப் பார்ப்பதற்குப் பயணமாகிக் கொண்டிருந்தனர். அவர்கள் அழுத்கமையைக் கடந்து பயணித்துக் கொண்டிருந்தவேளை இரு பிள்ளைகளின் தந்தை தன்னைச் சந்திக்கவோ, பார்க்கவோ வரவேண்டாமென பிள்ளைகளின் தாயான தனது மனைவிக்குத் தெரிவித்திருக்கிறார். இதனால் கவலை மேலீட்டால் அந்தத்தாய் தொடர்ந்தும் பயணிக்காது பெந்தோட்டை பாலத்திலிருந்து ஆற்றில் பாய்ந்துள்ளார். நீரில் குதிப்பதற்கு முன்பு இரு பிள்ளைகளையும் பாலத்திற்கருகில் இருக்கச் செய்துள்ளார்.
தான் நீரில் பாய்ந்து இறந்ததும், நீரில் குதிக்கும்படியும் மூத்த பிள்ளையிடம் கூறியுள்ளார். இளைய பிள்ளையுடன் நீரில் குதிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.
பின்பு அந்தத்தாய் ஒரு படகோட்டியினால் காப்பாற்றப்பட்டு பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிள்ளைகள் இருவரும் நீதிமன்றின் உத்தரவின்பேரில் அவர்களது பாட்டனாரிடமும் மாமாவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திகதியும் சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அன்று 20 வயதான தாயொருவர் தனது ஒன்றரை வயதான பிள்ளையை இறால் பண்ணை தாங்கிக்குள் வீசியுள்ளார். இச்சம்பவம் உடப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. தனது கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸார் அந்தப் பெண்ணைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்தினார்கள். நீதிமன்றம் அந்தத்தாயை 14 ஆம் திகதிவரை (நேற்று முன்தினம்) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
மற்றொரு சம்பவம் இங்கு குறிப்பிட்ட ஏனைய சம்பவங்களை விட விஞ்சியதாக சோகமயமானதாக அமைந்துள்ளது. அந்தத்தாய் கெப்பித்திக் கொல்லாவையைச் சேர்ந்தவள். அப்பெண் தனது மாற்றுத்திறனாளிகளாக இரு பிள்ளைகளுடன் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக கிணற்றில் பாய்ந்துள்ளார். இச்சம்பவம் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. தனது மாற்றுத்திறனாளிகளான இரு பிள்ளைகளின் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாமை மற்றும் வாழ்க்கைச் செலவுகளைத் தாங்கிக்கொள்ள முடியாததன் காரணமாகவே இந்தத்தாய் இந்த விபரீத முடிவினை எடுத்துள்ளார்.
இந்தச் சோக விபத்தில் 21 வயதான மாற்றுத்திறனாளியான மகன் உயிரிழந்துள்ளார். தாயும் 9 வயதான இளைய மகனும் காப்பாற்றப்பட்டுள்ளனர். காப்பாற்றப்பட்ட குறிப்பிட்ட மகன் காது கேட்பதில் குறைபாடுள்ளவர். இருவரும் கெப்பித்திக்கொல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பிட்ட பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டார். அப்பெண்ணுக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டது.
அத்தோடு கடந்த 7 ஆம் திகதி மற்றுமொரு சோக நிகழ்வு வவுனியாவில் பதிவாகியுள்ளது. வவுனியா குட்செட் வீதியில் வீடொன்றினுள் இரு பிள்ளைகள் மற்றும் அப் பிள்ளைகளின் தாய், தந்தையினது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இக்குடும்பத் தலைவன் இணைய வழியூடாக விசா பெற்றுக்கொடுக்கும் தொழிலை மேற்கொண்டு வந்தவர்.
இத்தொழில் காரணமாக அவர் பெரும் கடனாளியாக மாறியிருந்தார். இதே வேளை குடும்பத்தலைவி ஓர் ஆசிரியையாவார்.
இந்தக் குடும்பத்தலைவன் கடன் சுமை காரணமாக மன அழுத்தங்களுக்குள்ளாகி தனது மனைவியையும், பிள்ளைகளையும் கொன்றுவிட்டு தான் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர். கடன் தொல்லையே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் அண்மையில் செவனகல பிரதேச செயலாளர் காரியாலயத்துக்குச் சென்ற பெண் ஒருவரின் கதையும் மனதை நெகிழ வைக்கிறது. அண்மையில் 31 வயதான பெண் தனது இரு பிள்ளைகளுடன் செவனகல பிரதேச செயலாளர் காரியாலயத்துக்குப் படியேறினார்.
தனது கணவர் தன்னை சட்ட ரீதியாக வெளியேற்றிவிட்டதாகவும் தனக்கு காணியும், வீடொன்றும் பெற்றுத்தருமாறும் பிரதேச செயலாளரை வேண்டினார். செவனகல பிரதேச செயலாளர் ஆர்.பி.என்.ஆர்.பியசாந்த குறிப்பிட்ட பெண்ணுக்கு வீடொன்றினை நிர்மாணித்துக் கொடுப்பதற்காக காணியொன்று இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் வீடொன்றினை நிர்மாணித்து வழங்குவதற்கு சமூக சேவை திணைக்களத்திடம் நிதியில்லை என்றும் கூறினார்.
சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பஸ்குவல் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறான விசேட வேலைத்திட்டங்கள் எதுவும் எம்மிடம் இல்லை. அமைச்சு மக்களுக்கு தற்காலிகமான தீர்வுகளையே வழங்கி வருகிறது. குறிப்பாக வர்த்தகத்துக்கு உதவும் வகையில் ஒத்துழைப்புகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறான முறைப்பாடுகள் பிரதேச செயலகங்கள் மூலம் தேசிய சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்று வருவதாக அதன் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார். இவ்வாறான சம்பவங்களினால் பாதிக்கப்பட்டு வரும் சிறுவர்களுக்கு உளவியல் ரீதியான சேவைகள் வழங்கப்படவேண்டுமெனவும் அவர் கூறினார்.
இவ்வாறான சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் நிரந்தர வருமானமற்ற குடும்பங்களிடமிருந்தே கிடைக்கப்பெறுவதாகவும் அவர் கூறினார். இதற்குக் காரணம் குடும்பப் பிரச்சினைகளும் மன அழுத்தங்களுமேயாகும்.
பொறுக்க முடியாத தீர்த்துக்கொள்ள முடியாத பிரச்சினைகள் குடும்பத்துக்குள் நிலவினால் அவர்கள் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்து சிறுவர் மற்றும் பெண் பிரிவு பொலிஸ் பிரிவில் முறையிட வேண்டும் என நாம் ஆலோசனை வழங்குகிறோம் என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். அவர்கள் தங்களது பிள்ளைகளைக் கொலை செய்யாது இந்த வழி முறையைப் பின்பற்ற வேண்டுமெனவும் வேண்டிக் கொண்டார்.
இதேவேளை ‘கிராமங்களில் பெரும் எண்ணிக்கையான மக்கள் தங்களது தொழில்களை இழந்துள்ளனர். பலர் கடன் சுமையில் சிக்கியுள்ளனர். நிர்மாணத்துறை தொழிலாளர்கள் தொழில்களை இழந்துள்ளனர். விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோர் பசளைக்கு பெருந்தொகைப் பணத்தைச் செலவிட வேண்டியுள்ளது. அவர்களுக்கு அரசாங்கத்தினால் எவ்வித நிவாரணமும் வழங்கப்படுவதில்லை’ என இலங்கை கிராம அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் டப்ளியூ.ஜி. கமல் கித்சிறி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ‘இவ்விவகாரங்களில் எம்மால் தலையிட முடியாது என்றாலும் குடும்ப முரண்பாடுகளைத் தீர்த்து வைப்பதற்கான முயற்சிகளில் எம்மால் ஈடுபட முடியும்’ என்றார்.
ஸ்ரீலங்கா சுமித்ராயோ தலைவி சுரன்ஜனி விக்கிரமரத்ன தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் முதல் லுனுகம்வெஹர வரையுள்ள தங்கள் கிளைகளில் 270 தொண்டர்கள் பணிபுரிகிறார்கள்.
நாங்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறோம். கடந்த வருடத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எதிர்பாராத அளவுக்கு மக்களிடமிருந்து அழைப்புகள் கிடைத்து வருகின்றன. அவர்கள் கடனில் சிக்கியுள்ளனர். நிதி நிலைமையை அவர்களால் சமாளிக்க முடியாதுள்ளது எனவும் சுரன்ஜினி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
குடும்பங்கள் அழுத்தங்களுக்கு உட்படும்போது அவர்களால் நிலைமையை சமாளிக்க முடியாமற் போகிறது. இறுதியில் அவர்கள் இவ்வாறான கவலையான தீர்மானங்களை மேற்கொள்கின்றனர் என கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்ரீ ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இந்தப் பிரச்சினைகள் முளையிலே கிள்ளி எறியப்பட வேண்டும். சமூக அடிப்படையிலான கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அரச உத்தியோகத்தர்களான கிராம அதிகாரிகள் தங்கள் பகுதியிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மேலுமொரு அதிர்ச்சி தரும் சம்பவம் பதிவாகியுள்ளது. 17 வயதான யுவதியொருவர் அவரது வளர்ப்புத் தாயாரினால் தாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் ராகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. யுவதியின் தந்தை வெளிநாட்டில் பணி புரிகிறார். இவர் இந்தச் சம்பவத்தை சி.சி.ரி.வி. கெமரா பதிவு ஊடாக பார்வையிட்டுள்ளார்.
மற்றுமொரு சம்பவம் பக்கமுன பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஒருவர் வெளிநாட்டில் இருக்கும் தனது மனைவிக்கு வீடியோ பதிவொன்றினை அனுப்பி வைத்துள்ளார். மனைவியிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதற்காக மகளை தாக்கி அதனை வீடியோவாக அனுப்பியுள்ளார்.
இவ்வாறு நாட்டின் மோசமான பொருளாதார நிலைமை காரணமாக ஒவ்வொரு வீட்டிலும் பிரச்சினைகள் பூதாகரமாகியுள்ளன. இவற்றுக்குத் தீர்வு வழங்குவது கடினம் என்ற போதிலும் உயிரை மாய்த்துக் கொள்ளுமளவு பாதிப்புகளைச் சந்தித்துள்ள மக்களுக்காவது உடனடித் தீர்வுகளை வழங்குவதற்கான கட்டமைப்பு ஒன்றை அரசாங்கம் தாபிக்க வேண்டும். இன்றேல் இவ்வாறான சம்பவங்கள் தினம் தினம் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது போய்விடும்.
நன்றி: சன்டே டைம்ஸ்
-Vidivelli