உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் : சதி, குண்டு தயாரிப்பு குறித்து குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் சிறையில் மரணம்
(எம்.எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் போது பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 21 குண்டுகளை தயாரித்தமை, சதி செய்தமை தொடர்பில் 6 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், அவர்களில் ஒருவர் சிறையில் வைத்து சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ன மாரசிங்க முன்னிலையில் தொடுக்கப்பட்டுள்ள எச்.சி. 3886/22 எனும் வழக்கின் 6 ஆவது பிரதிவதியே இவ்வாறு சிறையில் மரணித்துள்ளார். மொஹம்மட் மொயினுத்தீன் மூசா அல்லது அப்துல்லாஹ் எனும் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 40 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவரது ஜனாஸா நேற்றுமுன்தினம் (7) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் போது பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 21 குண்டுகளை தயாரித்தமை தொடர்பில் மொஹம்மட் சிபான் சத்தார், செய்யத் அபூ மொஹம்மட் அஸ்ரப், மொஹம்மட் இஷாக் மொஹம்மட் நிலாப்தீன் அல்லது அர்ஷாத், குணசீலன் ரவீந்ரன் அல்லது மொஹம்மட் இஷாக், ஷெய்க் மொஹம்மட் பரீக் மொஹம்மட் பெளசி, மொஹம்மட் மொயினுத்தீன் மூசா அல்லது அப்துல்லாஹ் ஆகிய 6 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப் பகிர்வுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலின் தப்ரபேன் உணவகத்தில் தற்கொலை குண்டுதாரியாக குண்டை வெடிக்கச் செய்த, மொஹம்மட் இப்ரஹீம் இன்ஷாப் அஹமட்டின் ஆலோசனைக்கு அமைய கடந்த 2018 ஜனவரி முதலாம் திகதிக்கும் மார்ச் 30 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குண்டு தயாரித்துள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதால், பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு சட்ட மா அதிபரால் முன் வைக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்துள்ள பிரதிவாதி தொடர்பில், மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள ஏர்கனவே நீதிமன்றம் உத்தரவினை பிரப்பித்திருந்த பின்னணியில், சிறையில் வைத்து இந்த மரணம் சம்பவித்துள்ளது.- Vidivelli