எம்.ஐ.அப்துல் நஸார்
பாடசாலை மாணவிகள் நஞ்சூட்டப்பட்டமைக்கான அறிகுறிகளைக் காட்டும் முதல் சம்பவம் கடந்த வருடம் நவம்பர் பிற்பகுதியில் சமயரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நகரமான ஈரானின் கும் நகரில் பதிவானது. இதன்போது டசின் கணக்கான மாணவிகள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மார்ச் மாத ஆரம்பத்தில் தலைநகர் தெஹ்ரான் மற்றும் குறைந்தது இரண்டு நகரங்களுக்கு பரவுவதற்கு முன்னர் இதேபோன்ற பல சம்பவங்கள் அங்குள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப் பாடசாலைகளில் தொடர்ந்து இடம்பெற்றன.
ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் இந்த விவகாரம் ஊடக கவனத்தைப் பெற்ற பின்னர் ஈரான் முழுவதும் கடந்த ஒரு வாரமாக இச் சம்பவங்கள் அதிகரித்தன. வேண்டுமென்றே பெண் பிள்ளைகளை பாடசாலைக்கு சமுகமளிப்பதைத் தடுக்கும் நோக்கிலேயே இம் முயற்சிகள் இடம்பெறுவதாக சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அதிகாரிகளால் எவ்வித புள்ளிவிவரங்களும் வெளியிடப்படவில்லை. எனினும் பல்லாயிரக்கணக்கான மாணவிகள் நஞ்சூட்டலால் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதனால் பாதிக்கப்பட மாணவிகளுக்கு ஒரேவிதமான அறிகுறிகளே காணப்பட்டுள்ளன. பெரும்பாலும் மூச்சுத் திணறல், தலைவலி, குமட்டல், இதயப் படபடப்பு மற்றும் கை கால்கள் விறைப்பு உள்ளிட்ட அறிகுறிகள் அந்த மாணவிகளில் அவதானிக்கப்பட்டன. சில மாணவிகள் தமக்கு அழுகிய பழங்கள், கடுமையான வாசனை திரவியங்கள் அல்லது எரியும் வாசனை போன்ற விசித்திரமான துர்வாடைகள் வீசுவதாக தெரிவித்தனர். பெரும்பாலான சம்பவங்கள் ஆபத்தானவையாக இருக்கவில்லை. எனினும் மாணவிகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
31 மாகாணங்களுள் இருபத்தைந்து மாகாணங்களில் அண்ணளவாக 230 பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 5,000க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் சிறுவர்கள் நஞ்சூட்டப்பட்டுள்ளனர் என பாராளுமன்ற உண்மை கண்டறியும் குழுவின் உறுப்பினரான முகமது-ஹாசன அசபாரி திங்களன்று நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இதனிடையே, நவம்பர் மாத பிற்பகுதி தொடக்கம் 5,000 க்கும் மேற்பட்ட மாணவிகளை பாதித்த நஞ்சூட்டலோடு தொடர்புபட்ட முதலாவது கைது இடம்பெற்றுள்ளதாக ஈரான் செவ்வாய்க்கிழமை (07) அறிவித்தது.
பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ‘மன்னிக்க முடியாத குற்றத்தை’ செய்தவர்களை ‘ஈவிரக்கமின்றி’ கண்டுபிடிக்க வேண்டும் என ஈரானின் ஆன்மிகத் தலைவர் அயதுல்லா அலி கொமைனி திங்கட்கிழமையன்று வேண்டுகோள் விடுத்திருந்தார். மாணவியொருவரின் பெற்றார் ஒருவர் உட்பட அபாயகரமான பொருட்களை தயாரித்ததாக சந்தேகிக்கப்படும் ஆறு மாகாணங்களைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறையினர் பலரை கைது செய்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட முகவரகங்கள் முழு விசாரணை நடத்தி வருவதாகவும் ஈரானின் பிரதி உள்துறை அமைச்சர் மஜித் மிராஹ்மதி செவ்வாயன்று அரசாங்க தொலைக்காட்சியில் தெரிவித்தார்.
நஞ்சின் வகை மற்றும் நஞ்சூட்டப்பட்டமைக்கான காரணத்தை கண்டறிய பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எந்த வகையான நஞ்சு பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை எந்த குறிப்பிடத்தக்க தகவலும் பெறப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப் பெற்று வருகின்றன.
உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, குசெஸ்தான், மேற்கு அஜர்பைஜான், பார்ஸ், கெர்மன்ஷா, கொராசன் மற்றும் அல்போர்ஸ் மாகாணங்களில் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவர், தனது பிள்ளையினை நஞ்சூட்டல் செயற்பாட்டிற்கு பயன்படுத்தியுள்ளதோடு நோய்வாய்ப்பட்ட மாணவர்களின் வீடியோக்களை பதிவுசெய்து, ‘எதிர்த்தரப்பு ஊடகங்களுக்கு’ அனுப்பி ‘பயத்தை உருவாக்கி பாடசாலையினை மூட வைப்பதே அதன் நோக்கமாகும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயத்தையும் அவநம்பிக்கையையும் உருவாக்குவதற்காக எதிரிகள் மேற்கொண்ட சதி என அதனை வருணித்துள்ள ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கடந்த வாரம் உள்துறை மற்றும் உளவுத்துறை அமைச்சுக்களுக்கு நஞ்சூட்டப்பட்ட விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியான தகவல்களை தனக்கு வழங்க வேண்டும் எனப் பணித்துள்ளார்.
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட மாணவர்களுள் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான மாணவிகளுக்கே உடல்நலக்குறைவை ஏற்படுத்தக்கூடிய நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன’ என உள்துறை அமைச்சு திங்கட்கிழமை தெரிவித்தது.
‘அதிர்ஷ்டவசமாக, இதுவரை, மருத்துவ நிலையங்களுக்கு மாற்றப்பட்ட எந்த மாணவர்களிடமும் நச்சு அல்லது ஆபத்தான பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.’
பிரதி சுகாதார அமைச்சர் சயீத் கரீமி, ‘சுவாசிப்பதில் சிரமம், வயிற்று வலி, பலவீனம் மற்றும் சோம்பல்’ போன்ற அறிகுறிகள் காணப்பட்டதாகக தெரிவித்தார்.
‘இந்த உள்ளிழுக்கப்படும் பொருள் ஒரு வாயுவாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, தூள் அல்லது பசை அல்லது ஒரு திரவ வடிவில் இருக்கலாம், இது ஒரு ஹீட்டரின் மீது ஊற்றப்படும்போது அல்லது வெப்பத்தால் ஆவியாகும்போது அது சிக்கல்களை ஏற்படுத்தும்,’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஐ.எஸ்.என்.ஏ செய்தி நிறுவனத்தினால் அறிக்கையிடப்பட்ட அண்மைய சம்பவத்தில் அமைதியற்ற தென்கிழக்கு நகரமான ஸஹெடானில் கடந்த செவ்வாய்க்கிழமை 40 மாணவிகள் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர். இச் சம்பவம் தொடர்பில் பக்கச்சார் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என திங்களன்று வெள்ளை மாளிகை கோரிக்கை விடுத்தது.
அமீனிக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு பரவிய ஒரு மாதத்திற்குப் பின்னர் நஞ்சூட்டல் பாதிப்புக்கள் முதன்முதலாக ஈரானின் ஆன்மீகத் தலைநகரான கும்மில் நவம்பர்மாத கடைசிப் பகுதியில் பதிவாகியுள்ளன,
கடந்த செவ்வாய்கிழமை, பொய்கள் மற்றும் வதந்திகளைப் பரப்புபவர்களை எச்சரித்த தெஹ்ரான் சட்டத்தரணியான அலி சலேஹி, அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என நீதித்துறையின் மிசான்இணையதளம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், ஹம்மிஹான், ரூய்டாட் 24 மற்றும் ஷார்க் ஊடகங்களின் முகாமையாளர்கள்; மற்றும் பல தனிநபர்கள் மீது வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன,’ என்று சலேஹி மேலும் தெரிவித்தார்.-Vidivelli