கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
ஒரு மகத்தான போராட்டம்
கடந்த வருடம் காலிமுகத்திடலில் ஆரம்பமாகிய இளைய தலைமுறையின் போராட்டம் இடம்பெற்றிருக்காவிட்டால் ராஜபக்சாக்களே இன்னும் இந்த நாட்டை ஆண்டுகொண்டிருப்பர். மகிந்தவையும் கோத்தாபயவையும் விரட்டியடித்து ஏனைய ராஜபக்ச குடும்பத்தினரையும் பதவி துறக்கச் செய்து ரணில் விக்கிரமசிங்ஹவையும் தினேஷ் குணவர்த்தனவையும் முறையே ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகிக்கச்செய்தமைக்கு அந்த இளைய தலைமுறையினரின் போராட்டமே காரணம் என்பதை யார்தான் மறுப்பர்?
எனினும், அந்த மாற்றத்தையே குறிக்கோளாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட போராட்டமல்ல அது. அதன் முக்கிய குறிக்கோள் அதைவிட மகத்துவம் வாய்ந்தது. சுருக்கமாக் கூறினால், கடந்த ஏழு தசாப்தங்களாக இந்த நாட்டைக் கட்டியாண்ட அரசியல் பொருளாதார சமூக அமைப்பையும் அந்த அமைப்பின் அடித்தளமாக அமைந்த சிங்கள பௌத்த பேரினவாதத்தையும் களைந்தெறிந்து எல்லாரும் இந்நாட்டு மன்னர்களே என்ற அடிப்படையில் ஒரு புதிய ஜனநாயக சகாப்தத்தையும் ஊழலற்ற அரசாங்கத்தையும் அமைக்கத் துடித்த இளவல்களின் வரலாற்றுப் புகழ்மிக்க போராட்டமே அது என்றால் மிகையாகாது.
“அமைப்பை மாற்று”, “225 வேண்டாம்” என்ற அவர்களது இரு சுலோகங்களுக்குள் இரண்டாவதின் ஒரு சிறு விளைவையே ஆரம்பத்தில் கூறிய அரசியல் மாற்றங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் அதே 225 இன்னும் நாடாளுமன்றத்துக்குள் குந்திக் கொண்டிருக்கின்றன. அதேபோன்று பழைய அமைப்பே இன்னும் தொடர்கின்றது. ஆகவே புதிய அமைப்பு வேண்டி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் பூர்த்திபெறாமல் இடையிலே நின்று விட்டது. இல்லை, அது புதிய ஜனாதிபதியின் அராஜகத்தினால் படைகொண்டு நிறுத்தப்பட்டது. எனினும் அப்போராட்டத்தின் அடுத்த கட்டம் ஆரம்பமாக வேண்டிய சூழல் இன்று உருவாகியுள்ளது. அதைப்பற்றிய சில சிந்தனைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
பன்முகப் பிரச்சினை
இந்த நாட்டைப் பீடித்துள்ள பிரச்சினை பன்முகப்பட்டதொன்று. ஆங்கில வரலாற்றாசிரியர் ஒருவர் அதனை “polycrisis” என்று கூறியுள்ளார். அரசியல் கலாசாரம், பொருளாதாரர வங்குரோத்து, இனவாதம், மதவாதம், தொற்று நோய், சீரழியும் சுற்றுச் சூழல் என்றவாறு பிரச்சினைகளை ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டே போகலாம். அவற்றுள் இன்று முன்னிலையில் நிற்பது பொருளாதாரப் பிரச்சினை. ஆனால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தாயாக அமைந்துள்ளது பேரினவாத அரசியல் கட்டமைப்பு. அந்த அமைப்பை மாற்றாமல் ஏனைய பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியாது என்பதைத்தான் இளைஞர்களின் முதலாவது கோரிக்கை உள்ளடக்கி இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அப்போராளிகளிடையே ஒரு தலைமைத்துவம் உருவாகாததனால் அக்கோரிக்கையின் உள்ளடக்கத்தை விரிவாக விளக்கும் ஒரு வாய்ப்பை அவர்கள் இழந்து நின்றனர். எனினும் அந்தப் போராளிகளின் நடத்தையை உன்னிப்பாக அவதானித்தவர்களுக்கு அவர்களின் பக்கச்சார்பற்ற அரசியல் நிலைப்பாடும், சர்வ இனங்களையும் உள்ளடக்கிய ஒருமைப்பாடும், தற்புகழ் தேடா நிலைப்பாடும், அப்போராட்டத்தின் தூய நோக்கினையும் அவர்கள் கோரிய புதிய அமைப்பின் விழுமியங்களையும் நன்கு தெளிவுபடுத்தும். எனவே அமைப்பை மாற்றாமல் தனியே பொருளாதாரச் சிக்கலைமட்டும் முன்னிலைப்படுத்தி அதற்கொரு பரிகாரம் காண விளைவது நிரந்தரப் பயனளிக்காது என்பதே அவர்களது தலையாய வாதம் என்று கூறுவது பொருந்தும். ஆனால் ஒரு பன்முகப் பிரச்சினையைக் கூறுபோட்டு அதில் ஒன்றை மட்டும் முன்னிலைப்படுத்தி அதற்குப் பரிகாரம் தேட முனைகிறது ரணிலின் ஜனாதிபதி ஆட்சி.
பொருளாதாரப் பிரச்சினை
ஒரு தாயின் கர்ப்பப் பையிலே கோளாறு. அதனால் அவள் வயிற்றிலே தரித்த அத்தனை குழந்தைகளுக்கும் வெவ்வேறு விதமான நோய்கள். அந்தக் குழந்தைகளுள் ஒன்றுதான் பொருளாதாரம். அதன் நோய்க்கு வங்குரோத்து என்று பெயர். அதற்கு வைத்தியம் பார்க்கச் சர்வதேச நாணய நிதி என்ற வைத்தியரை வரவழைத்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ. அந்த நிதியின் பரிகாரங்களுள் வரிகளை உயர்த்துவதும், அரசாங்கச் செலவினங்களைக் குறைப்பதும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதும், ஊழல்களை ஒழிப்பதும், நாணய மதிப்பை சந்தைச் சக்திகளின் பொறுப்பில் விடுவதும் என்றவாறு பல அடங்கும். ஆனால் இந்தப் பொருளாதாரக் குழந்தையின் நோய் தாய்வழியிலே பிறந்த ஒரு பரம்பரை நோய். அது இந்தப் பரிகாரங்களால் மட்டும் தீருமா என்பதுதான் இக்கட்டுரையாளனின் கேள்வி.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது
நீண்டகாலமாகப் பொருளியலுடன் ஈடுபாடுடையோன் என்ற ரீதியில் பொருளியல்வாதிகளின் ஒரு குறுகிய நோக்கினை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. தனியே பொருளாதாரக் காரணிகளுக்கு மட்டும் முக்கிய இடம் கொடுத்து பொருளாதாரத்துக்கு அப்பாற்பட்ட மானிட காரணிகளை வெறும் எடுகோள்களாக மட்டும் கருதி, அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டுப் பொருளாதாரப் பிரச்சினைகளை ஒரு குறிப்பிட்ட மாதிரியின் எல்லைக்குள் நின்று அணுகியதால் மக்களின் வாழ்வையும் அவர்களின் அரசுகளின் திட்டங்களையும் எதிர்பாராத விதத்தில் தாக்கி கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை நாசமாக்கி அரசாங்கங்களின் நிதி நிலையையும் சுக்கு நூறாக்கிய பல சம்பவங்களை இப்பொருளியல் நிபுணர்களால் முன்கூட்டியே உய்த்துணர முடியவில்லை.
உதாரணமாக, 1970களில் ஏற்பட்ட எண்ணெய் வளநாடுகளின் சடுதி விலையேற்றம், 2009ல் ஏற்பட்ட உலக நாணய நெருக்கடி, 2021ல் ஏற்பட்ட கொரோனா கொள்ளை நோய் என்பனவற்றை எந்தப் பொருளியல் ஞானி எதிர்பார்த்து அரசுகளை எச்சரித்தான்? ஏனெனில் அவை ஒவ்வொன்றும் மானிட நடவடிக்கைகளால் ஏற்பட்டவை. பொருளியலாளரின் கணிதத் தேற்றங்களுக்குள் அவை அடங்கவில்லை. அதனாலேதான் அவர்களின் பரிகாரங்கள் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக மாறின. இந்த உண்மையை கருத்திற் கொண்டு சர்வதேச நாணய நிதியின் பொருளாதாரப் பரிகாரம் இலங்கையின் பன்முகப் பிணிக்கு நிரந்தரத் தீர்வாகுமா என்ற கேள்வியை அணுகுவோம்.
பேரினவாத அமைப்பின் பலிக்கடா பொருளாதாரம்
சுதந்திரம் கிடைத்த நாள் தொட்டு இன்றுவரை பல்லின மக்களைக் கொண்ட இந்த மாணிக்கத் தீவு சிங்கள பௌத்த பெரும்பான்மையினருக்கு மட்டுமே சொந்தம், ஏனையோர் அன்னியர், ஆதலால் இந்த நாட்டின் பொருளாதார வளங்களும் அவற்றின் வளர்ச்சியும் அந்தப் பெரும்பான்மையினரின் நலனுக்காகவே பயன்படவேண்டும் என்ற ஒரு பேரினவாதத் தாரக மந்திரமே நாட்டின் அரசியலையும் பொருளாதாரத்தையும் இதர அமைப்புகளையும் அவற்றின் நடவடிக்கைகளையும் கட்டியாண்டது. அவற்றையெல்லாம் விபரிக்க கட்டுரையின் நீளம் இடம் தராது. சுருக்கமாக ஒன்றிரண்டை மட்டும் இங்கே சுட்டிக்காட்டுவோம்.
1948ல் இந்திய வம்சாவழியினரின் பிரஜா உரிமையை நீக்கியும், அதன் பின்னர் அடுக்கடுக்காக சட்டத்தின் மூலம் இலங்கைத் தமிழரின் உரிமைகளுக்கு ஆப்புவைத்தும், வன்முறைகள் மூலமும் போர் மூலமும் அவர்களின் உயிர்களைக் கொன்றும், உடமைகளை அபகரித்தும், ஒட்டு மொத்தத்தில் அவர்களையும்அந்நியராக்கியும், அதனைத் தொடர்ந்து அதே அட்டூழியங்களை முஸ்லிம் சிறுமையினர்மீது அவிழ்த்துவிட்டு அவர்களையும் அந்நியராக்கி ஏப்பம் விட்டது இப்பேரினவாதம். அதனால் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான முதலீடு, முயற்சி, உழைப்பு, கல்வித்திறன் போன்ற வளங்களை இச்சிறுபான்மையினரிடமிருந்து துரிதமாகப் பெறுவதற்கு நாடு தவறிவிட்டது. இந்தப் பேரிழப்பை எண்ணிக்கையில் அளவிட முடியாது. ஆனால் அது எவ்வாறு ஒரு புலம்பெயர்ந்த சமுதாயத்தை உலகெலாம் உருவாக்கி அந்த வளங்கள் எவ்வாறு அந்நிய நாடுகளின் பொருளாதாரத்துக்குப் பலமாய் இயங்குகின்றன என்பதை அளவிடுதல் மூலம் அறிந்து கொள்ளலாம். அந்த இழப்பு ஒரு புறமிருக்க பேரினவாத அமைப்பு வளர்த்த இன்னொரு நாசகாரக் கறையான் எப்படி பொருளாதாரத்தை ஏழு தசாப்தங்களாகச் செல்லரித்து இறுதியில் அதனை வங்குரோத்தடையச் செய்துள்ளது என்பதையும் விளங்க வேண்டும்.
சிங்கள பௌத்த பேரினவாதம் ஜனநாயகத்தைத் திசை திருப்பி சுதந்திரத்துக்குப் பின் வெற்றிபெற்ற ஒவ்வோர் அரசாங்கத்தையும் அதற்கு அடிமையாக்கிற்று. பேரினவாத அமைப்பின் அபிலாஷைகளை எந்த ஆட்சியினரோ அதன் அதிகாரிகளோ நிறைவேற்றுகின்றனரோ அவர்களுக்குக் கட்டற்ற சுதந்திரத்தை எல்லாத்துறைகளிலும் வழங்கிற்று. அதன் பாரிய ஒரு விளைவுதான் ஊழல். பிரதமர் தொடக்கம் பியூன்வரை ஊழல் வழியாகச் செல்வம் திரட்டலாயினர். இந்த ஊழல் டி. எஸ் சேனநாயக்க அரசாங்கத்திலிருந்தே ஆரம்பமாகிற்று. அது படிப்படியாக வளர்ந்து ராஜபக்சாக்களின் ஆட்சியில் இமயத்தை எட்டிற்று. ஒரு மீன் நாறிவிட்டதா என்பதை அறிய அதன் தலையைப் பார்த்தால் தெரியுமாம். அது போல் பிரதமர்களே ஊழல் நாயகர்களானால் மற்றவர்களைப்பற்றிப் பேசவும் வேண்டுமோ?
பொருளாதார வளர்ச்சி என்ற போர்வையில் ஆடம்பரமான திட்டங்கள் உருவாக்கப்பட்டன. மத்தள விமான நிலையம், அம்பாந்தோட்டை கிரிக்கட் விளையாட்டு மைதானம் தாமரைக் கோபுரம் ஆகியவற்றை அதற்கு உதாரணங்களாகக் காட்டலாம். இவற்றிற்கு எவ்வளவு செலவாகியது? அந்தப்பணம் எங்கிருந்து வந்தது? என்பதற்கெல்லாம் எந்தக் கணக்கும் இதுவரை இல்லை. இந்த லட்சணத்தில் பொருளாதாரம் வங்குரோத்து அடையாமல் என்ன செய்யும்? பொருளாதாரம் பேரினவாதத்தின் பலிக்கடாவாக மாறியது என்று கூறுவது பொருந்தும். ஆகவே முதலில் திருத்தப்பட வேண்டியது பேரினவாத அமைப்பா பொருளாதாரமா? இதில் ஒரு புதுமை என்னவெனில் பொருளியல் நிபுணர்களும் மற்றும் பண்டிதர்களும் பேரினவாத அமைப்புக்கும் பொருளாதாரத்துக்கும் உள்ள நெருக்கமான தொடர்பை வெளிப்படுத்தத் தயங்குவதே. அவர்களின் இந்தத் தயக்கம் அவர்களும் பேரினவாதத்துக்குப் பலியாகி உள்ளார்களோ என எண்ணத் தோன்றுகிறது.
ஆனால் போராட்ட இளைஞர்கள் அந்தத் தொடர்பைச் சரியாக விளங்கியதனாலேதான் அமைப்பையே மாற்று என்று குரலெழுப்பினர். அதன்பின் நடந்ததென்ன?
ஜனாதிபதியின் சாகசம்
ஜனாதிபதி விக்கிரமசிங்ஹ பேரினவாத அமைப்பின் காவலர்களால் பதவியில் அமர்த்தப்பட்டு அவர்களின் சிறைக்கைதியாகச் செயற்படுகிறார் என்பது யாவரும் அறிந்த உண்மை. அவர் பதவிக்கு வந்ததும் முதன்முதலாகச் செய்த வேலை இளைஞர்களின் ஆர்ப்பாட்டத்தை முறியடித்ததாகும். அதன்பின் அவர்களையும் தன்பக்கம் ஈர்ப்பதற்காக அவர்களுக்குப் பச்சைக்கொடி காட்டி ஒரு சமாதானப் பறவைபோல் நடித்து, தனது 25 ஆண்டு காலப் பொருளாதார மாற்றத் திட்டத்துக்கு ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் பம்மாத்து நாடகத்துக்கு இளைஞர் சமுதாயம் பலியாகப் போவதில்லை.
அமைப்பை மாற்றாமல் அதன் பலிக்கடாவான பொருளாதாரத்தை மட்டும் தனிமைப்படுத்தி அதன் அவலத்தைப் போக்குவதற்கு சர்வதேச நாணய நிதியின் உதவியுடன் இப்போது செயற்படத் தொடங்கியுள்ளார். அந்த நிதியின் நிபந்தனைகளுக்கு அமையவே 2023 வரவுசெலவுத் திட்டமும் தீட்டப்பட்டது. அதன் பாரிய தாக்கங்களை மக்கள் தினமும் அனுபவிக்கின்றனர். அதன் பாதிப்புகளுக்கு ஆளாகிய மக்களின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. அவர்களின் வெறுப்பை வெளிப்படுத்துவதற்கு இம்மாதம் நடக்கவிருந்த ஊராட்சிமன்றத் தேர்தல் வாய்ப்பு வழங்கி இருக்கும். ஆனால் அதனையும் ஜனாதிபதி சாகசமாகப் பின்போட்டுள்ளார். நீண்ட காலச் சுபீட்சத்துக்காகச் சொற்ப காலத்துக்கு கஷ்டங்களை தாங்குமாறு ஜனாதிபதியும் அவரின் அமைச்சர்களும் மக்களிடம் வேண்டுகின்றனர். ஆனால் அந்த நீண்ட காலம் வரும்போது இந்த மக்களுள் எத்தனைபேர் உயிர் வாழ்வார்களோ? ஏன் ஜனாதிபதிதான் உயிரோடிருப்பாரோ?
இளைஞரின் போராட்டம்
தொடர வேண்டும்
ஜனாதிபதி கருதுவதுபோல் பொருளாதாரம் வெளிநாட்டு உதவிகளுடன் சிறிதளவு வளரத் தொடங்கினாலும் அது நிரந்தர வளர்ச்சியாகாது. காரணம் அமைப்பின் கோளாறு. அதனை மாற்றாமல் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் நிரந்தர சுபீட்சம் இல்லை. இதனை இன்றுள்ள எதிர்க் கட்சிகளுள் தேசிய மக்கள் சக்தி மட்டுமே உணர்ந்துள்ளதாகத் தெரிகிறது. ஏனைய கட்சிகள் சர்வதேச நாணய நிதியின் திட்டத்தைச் சரிகாண்கின்றன. ஏனெனில் அவர்களும் நடைமுறை அமைப்பின் அடிவருடிகளே. ஆதலால் இளைஞர் சமுதாயம் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து தமது போராட்டத்தின் அடுத்த கட்டத்தை ஆரம்பித்துப் பூர்த்தி காண்பதே இந்த நாட்டின் எதிர்கால சுபீட்சத்துக்கு ஒரே வழி.- Vidivelli