நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலவிய காதி நீதிவான் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு 34 பிரதேசங்களுக்கான புதிய காதி நீதிபதிகள் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இம்மாதம் முதல் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் சில பிரதேசங்களுக்கான வெற்றிடங்களும் விரைவில் நிரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 65 காதி நீதிமன்ற நிர்வாகப் பிரிவுகள் உள்ளன. இவற்றில் 34 நிர்வாகப் பிரிவுகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 21 பிரிவுகளுக்கு ஏலவே பதவி வகித்தவர்களது பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஏனைய 10 பிரிவுகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இம்முறை காதி நீதிபதிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் சமூகத்தில் சிறந்த அந்தஸ்துமிக்கவர்கள் என்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு தகைமைகளைக் கொண்டவர்கள் என்றும் பொது மக்களது அபிப்பிராயங்கள் கூறுகின்றன. இம்முறை புதிய காதி நீதிபதிகளை தெரிவு செய்வதில் நீதிச் சேவை ஆணைக்குழு இறுக்கமான நடைமுறைகளைக் கடைப்பிடித்ததாகவும் அறிய முடிகிறது.
கடந்த பல வருடங்களாக நாட்டின் காதி நீதிமன்ற முறைமையானது பலத்த விமர்சனங்களுக்குட்பட்டிருப்பதை நாம் அறிவோம். தகுதியற்ற பலர் இப் பதவிக்கு நியமிக்கப்பட்டமையும் அவர்கள் இப் பதவியை துஷ்பிரயோகம் செய்தமையுமே இவ்வாறான விமர்சனங்களுக்குக் காரணமாகும். இப் பதவியைப் பயன்படுத்தி பலர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமையும் விசாரணைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இப் பின்னணியில்தான் புதிய காதி நீதிபதி நியமனத்தில் இறுக்கமான விதிமுறைகளை நீதிச் சேவை ஆணைக்குழு கடைப்பிடித்து தகுதிவாய்ந்தவர்களை நியமிப்பதற்கு முயற்சித்துள்ளது. எனினும் சில பகுதிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்காததன் காரணமாக, பொருத்தமற்ற சிலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எது எப்படியிருப்பினும் புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழிகாட்டல்கள் மற்றும் ஏனைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது நீதிச் சேவை ஆணைக்குழுவின் கடப்பாடாகும். காதி நீதிமன்ற முறைமைகள் தொடர்பிலான போதிய தெளிவுகள் வழங்கப்படுவதுடன் தொடரான பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.
அதேபோன்றுதான் காதி நீதிவான்களுக்கான கொடுப்பனவும் நாட்டின் தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கேற்ப அதிகரிக்கப்பட வேண்டும். தற்போது மாதாந்தம் 7500 ரூபாவே அவர்களது சேவைக்கான கொடுப்பனவாக வழங்கப்படுகிறது. அத்துடன் அலுவலக செலவுகளுக்காக மாதாந்தம் 6250 ரூபா வழங்கப்படுகிறது. இதற்கமைய மாதாந்தம் மொத்தமாக 13750 ரூபாவையே காதி நீதிவான்கள் பெற்றுக் கொள்கின்றனர். சில காதி நீதிவான்கள் தாம் வசிக்கும் பகுதியிலிருந்து நீண்ட தூரம் பயணித்தே தமது கடமைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இந் நிலையில் போக்குவரத்துக்கே அவர்கள் பெரியதொரு தொகையை செலவிட வேண்டியுள்ளது. எனவே, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச இது விடயத்தில் கவனம் செலுத்தி காதி நீதிவான்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான அழுத்தங்களை முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் தரப்புகள் வழங்க வேண்டும்.
அது மாத்திரமன்றி, காதி நீதிவான்களின் செயற்றிறனை கட்டியெழுப்பும் வகையிலான வேலைத்திட்டங்களில் முஸ்லிம் சமூக நிறுவனங்களும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் உணரப்படுகிறது. காதி நீதிவான்களை மாத்திரம் விமர்சித்துக் கொண்டிராமல், அவர்களோடு இணைந்து செயற்படுவதன் மூலம் இந் நீதிமன்ற கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது காலத்தின் தேவையாகும்.
ஒரு புறம் காதி நீதிமன்ற கட்டமைப்பை இல்லாதொழிக்க வேண்டும் என ஒரு சாரார் போர்க் கொடி தூக்கியுள்ளனர். தனியான காதி நீதிமன்றங்கள் அல்லது மாவட்ட நீதிமன்றங்களிலேயே முஸ்லிம் விவாக விவாகரத்து வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் சிலர் முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். இவ்வாறான நகர்வுகளுக்கு நாம் ஒரு போதும் அனுமதி வழங்க முடியாது. மரறாக இருக்கின்ற கட்டமைப்பை மேலும் பலப்படுத்த முன்வர வேண்டும். அது மாத்திரமன்றி, இப் பதவிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள், தமது பணிகள் மூலமாக ஏலவே இப் பதவி தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தப்பபிப்பிராயங்களை களையும் வகையில் சிறப்பாக செயற்பட வேண்டியது அவசியமாகும். அதன் மூலமே காதி நீதிமன்றக் கட்டமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்பக் கூடியதாகவிருக்கும்.- Vidivelli