குருநாகல் வைத்தியசாலையில் பணி புரிந்த டாக்டர் ஷாபி சட்டவிரோதமான முறையில் தமக்கு கருத்தடை சத்திரசிகிச்சை செய்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த 600 சிங்கள தாய்மார்களில் 130 பேர் முறைப்பாடு செய்த பின்னர் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஊடகவியலாளர்களான தரிந்து ஜயவர்தன மற்றும் ஆன்யா விபுலசேன ஆகியோர் சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து டெய்லி எப்.ரி. பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில் இந்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
குருநாகல் மாவட்டத்தின் பொதுஹர பிரதேசத்திற்கு விஜயம் செய்த மேற்படி ஊடகவியலாளர்கள் இவ்வாறு முறைப்பாடு செய்த தாய்மார்கள் சிலரைச் சந்தித்து உரையாடியுள்ளனர். அத்துடன் முறைப்பாடு தொடர்பான ஆவணங்களையும் ஆராய்ந்துள்ளனர். இதன்போது தாம் டாக்டர் ஷாபிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமை தொடர்பில் வருந்துவதாக குறித்த தாய்மார் குறிப்பிட்டுள்ளனர்.
“நான் கருத்தடை குற்றச்சாட்டுகள் பற்றிய செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்தேன். பத்திரிகைகளிலும் வாசித்தேன். நாளுக்கு நாள் டாக்டர் ஷாபி மீதான முறைப்பாடுகள் அதிகரித்துக்கொண்டே இருந்தன. அதனால், நானும் முறைப்பாடு செய்யச் சென்றேன்” என ஒரு தாய் கூறினார். இவ்வாறு முறைப்பாடு செய்தமை எனது முட்டாள்தனம் என்றும் அவர் குறிப்பிட்டார். உண்மைகள் தெரியவந்ததும் தான் முறைப்பாட்டை வாபஸ் பெற வைத்தியசாலைக்குச் சென்றதாகவும் எனினும் அதனை எவ்வாறு முறைப்படி செய்வதென வைத்தியசாலை அதிகாரிகள் தனக்கு கூறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இவ்வாறு முறைப்பாடு செய்த ஒரு மாதத்தின் பின்னர் தான் கர்ப்பமுற்றுள்ளதை மருத்துவ பரிசோதனைகளின்போது அறிந்து கொண்டதாக மற்றுமொரு தாயார் தெரிவித்துள்ளார். எனினும் தான் செய்த முறைப்பாட்டை வாபஸ் பெற முயற்சிக்கவில்லை என்றும் இந்த விடயம் எப்போதோ முடிவுக்கு வந்துவிட்டதாக தாம் கருதியமையே இதற்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டாக்டர் ஷாபிக்கு எதிராக தாம் முறைப்பாடு செய்தமை குறித்து அதிகம் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் ஷாபிக்கு எதிராக முறைப்பாடு செய்ய முன்வருமாறு குருநாகல் மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து சுமார் 800 பெண்கள் இவ்வாறு முறைப்பாடுகளைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வைத்திய சேவையில் இருந்து சுகாதார அமைச்சினால் இடைநிறுத்தப்பட்டு, டாக்டர் ஷாபி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், வழக்கு இன்னும் முற்றுப் பெறவில்லை. எனினும் அவர் குற்றமற்றவர் என சுகாதார அமைச்சினால் கண்டறியப்பட்டதையடுத்து அவர் மீளவும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இதன்போது அவர் இடைநிறுத்தப்பட்டிருந்த காலப்பகுதிக்கான சம்பள நிலுவை மீள வழங்கப்பட்டது. இந் நிதியை அவர் அரச வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அன்பளிப்பாக வழங்கியிருந்தார். – Vidivelli