எம்.எச்.எம். ஹஸன்
அல்ஹஸனாத் மாசிகை மற்றும் எங்கள் தேசம் பத்திரிகையின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் அஷ்ஷெய்க் ஆர். அப்துல்லாஹ் அஸ்ஸாம் (இஸ்லாஹி) திடீர் மாரடைப்பின் காரணமாக கடந்த சனிக்கிழமை (18) கொழும்பில் வபாத்தானார்.
சனிக்கிழமை இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து அவர் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த அபுக்காகம கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவர் இறுதியாக வாழ்ந்து வந்த புத்தளம் நகரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஜனாஸா நல்லடக்கம் புத்தளம் நகரின் மஸ்ஜிதுல் பகா மையவாடியில் ஞாயிற்றுக்கிழமை (19) காலை 09 மணிக்கு இடம்பெற்றது.
அவரது ஜனாஸா நல்லடக்கத்தில் நாடளாவிய ரீதியிலிருந்து ஆலிம்கள், அறிஞர்கள், புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், ஊர் மக்கள் என பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.
நல்லடக்கத்தின் பின்னர் புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) விஷேட உரை நிகழ்த்தினார்.
அட்டாளைச்சேனையில் பிறந்த ராமக்குட்டி அப்துல்லாஹ் அஸ்ஸாம் அவர்களது குடும்பம் அவர் சிறு பராயத்தில் இருந்தபோது புத்தளத்திற்கு குடிபெயர்ந்தது. புத்தளத்தில் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்த இவர், தனது இளம் பருவத்தில் இஸ்லாத்தின் பால் கவரப்பட்டு இஸ்லாத்தில் நுழைந்தார். பின்னர் உயர் கல்வியைத் தொடர்வதற்காக மாதம்பை இஸ்லாஹிய்யா கலாசாலையில் நுழைந்தார்.
உயர் கல்வியைப் பூர்த்தி செய்து அஷ்ஷெய்க் பட்டம் பெற்று அங்கிருந்து வெளியேறியது முதல் அல்ஹஸனாத் மாத இதழ் ஆசிரியர் பீட உறுப்பினராக பணியாற்றினார். சிறிது காலத்திற்குள்ளேயே தனது தனித் திறமைகளை வெளிப்படுத்தி அதன் நிர்வாக ஆசிரியராக பதவி உயர்ந்தார்.
ஆரவாரம் இன்றி அமைதியாக பணிபுரிந்து வந்த அவரது சாதனைகள் உண்மையில் பிரமிக்கத் தக்கவையாகும். இலங்கையில் ஒரே நேரத்தில் தமிழ் மொழியில் இஸ்லாமிய சஞ்சிகை ‘அல்ஹஸனாத்’ மாசிகை, மாதமிருமுறை வெளிவந்த அரசியல், சமூக பத்திரிகை ‘எங்கள் தேசம்’, சிங்கள மொழியிலான இஸ்லாமிய மாசிகை ‘பிரபோதய’, ஆங்கில மாசிகை ‘த ட்ரன்ட்’, சிறுவர் மாசிகை ‘அகரம்’ ஆகிய ஐந்து பருவ வெளியீடுகளை நீண்ட காலம் வெளியிட்டு சாதனை புரிந்த ஜஸ்ட் மீடியா பவுண்டேசன் ஊடக நிறுவனத்தின் உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் பிரதான சக்தியாக திகழ்ந்து அதன் முகாமையாளராகவும் பல காலம் கடமையாற்றியவர்.
அதேவேளை அவர் இலங்கையில் 50 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வெளிவந்த அல்ஹஸனாத் சஞ்சிகையினதும் 15 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக வெளிவந்த மாதமிருமுறை அரசியல், சமூக பத்திரிகை எங்கள் தேசத்தினதும் நிர்வாக ஆசிரியராகவும் சமகாலத்தில் கடமையாற்றியவர்.
தமிழ் மொழியிலான அவரது சொந்த ஆக்கங்கள் மட்டுமன்றி ஆங்கில மொழியிலும் அரபு மொழியிலும் கூட தேர்ச்சி பெற்றிருந்த அவரது மொழிபெயர்ப்பு ஆக்கங்களும் பத்திரிகையை அலங்கரித்தன.
அரபு மொழி மூல நூல்களின் துணையுடன் அல்குர்ஆனியக் கலை சம்பந்தமாக அவர் எழுதிய தஃவதுல் குர்ஆன் எனும் நூல் பல பதிப்புகளை கண்டுள்ளது மட்டுமன்றி அரபுக் கல்லூரி மாணவர்களுக்கு மத்தியிலும் பெரு மதிப்பு பெற்ற நூலாக இருந்து வருகிறது.
எழுத்து, ஊடக முகாமைத் துறைகளில் மட்டுமன்றி மனித வள உருவாக்கத்திலும் அவர் பெரும் கவனம் செலுத்தினார். இன்று ஊடகத்துறையில் மிளிரும் பல ஊடகவியலாளர்களும் அவரது பாசறையில் வளர்ந்தவர்களே.
இத்தனை சாதனைகளையும் புரிந்த அவர் ஆரவாரம் இன்றி அமைதியாகவே வாழ்ந்தார். மனிதர்களது உள்ளங்களை வென்றார். ஆனால் விளம்பரத்தை அவர் விரும்பவே இல்லை.
அவரது ஜனாஸாவுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் திரண்டு வந்த மக்கள் கூட்டமும் அவர்களில் பலர் கண்ணீர் விட்டழுததும் புத்தளம் மக்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. எமதூரைச் சேர்ந்த இந்த மாமனிதர் யார் என அதன் பின்னரே அவர்களில் பலர் தேடத் தொடங்கினர் என்பதற்கு சமூக வலைத்தளங்களில் வரும் ஆக்கங்கள் சான்று பகர்கின்றன.
பலருக்கு வழிகாட்டியாக, பயிற்றுவிப்பாளராக, அர்ப்பண சிந்தையுடன் செலாற்றும் செயல் வீரராக, நற்பண்புகள் நிறைந்த ஒருவராக வாழ்ந்து மறைந்த நான்கு பிள்ளைகளின் தந்தையாகிய மர்ஹூம் ஆர். அப்துல்லாஹ் அஸ்ஸாம் அவர்களின் பணிகளை அங்கீகரித்து பாவங்களை மன்னித்து அவருக்கு அல்லாஹ் உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக.- Vidivelli