ஐ.எம்.எப். இடமிருந்து கடனை பெறுவதை விட வெளிநாட்டு தொழிலாளர் பங்களிப்பை கோருக
அதுவே பாதுகாப்பான வழிமுறை என்கிறார் சட்டத்தரணி சுஹைர்
நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதே ஒரே வழி என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறி வருகிறார். இதனை விடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்கள் தமது பணத்தை இலங்கைக்கு அனுப்புவதை மேலும் அதிகரிப்பதன் மூலம் இந்த நெருக்கடியிலிருந்து இலகுவாக மீளலாம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம்.சுஹைர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மத்திய வங்கியின் அறிக்கைகளின்படி, கடந்த 20 ஆண்டுகளில், வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கை தொழிலாளர்கள் அனுப்பிய பணம், நாட்டின் அந்நியச் செலாவணி பற்றாக்குறையில் 80 வீதத்தை ஈடுகட்டியுள்ளது. 2015 முதல் 2020 வரையிலான ஆறு ஆண்டுகளில் பணியாளர்கள் அனுப்பும் தொகை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இருந்தது. இது நாட்டிலும் வங்கி முறையிலும் அந்நியச் செலாவணி பணப்புழக்கத்தை கணிசமாக மேம்படுத்தியது. இவற்றில் 90 வீதமான தொழிலாளர்கள் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே அனுப்புகின்றனர்.
ஆனால் 2021 இல் வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பும் தொகை 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், 2022 இல் 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் குறைவடைந்துள்ளது. 2020 இல் ஈட்டிய 7.1 பில்லியன் டொலர்களுடன் ஒப்பிடும்போது 2021 இல் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாடு இழந்துள்ளது. 2020 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 2022 இல், 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்தோம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலேயே இது நடந்தது.
இவ்வாறு கடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ள நிலையில் ஐ.எம்.எப். இடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவதற்கு கடந்த ஒரு வருடமாக இலங்கை போராடி வருகின்றது. நமது சொந்த நாட்டு மக்கள் மற்றும் பெண்கள் சராசரியாக ஆண்டுக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நாட்டுக்கு வழங்கி வந்துள்ளனர். எனவேதான் மீண்டும் இவ்வாறானதொரு தொகையை வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பெறுவதற்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஜனாதிபதி மட்டத்திலாவது வேண்டுகோள் விடுக்கப்பட வேண்டாமா? அத்துடன் புதிய வேலைவாய்ப்புகளில் இலங்கையர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு முஸ்லிம் நாடுகளின் தலைவர்களிடமும் ஜனாதிபதியினால் வேண்டுகோள் விடுக்க முடியாதா?
சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர்கள் மற்றும் அதன் பின்னர் உலக வங்கி மற்றும் ஏனைய கடன் வழங்குபவர்களிடமிருந்து வரக்கூடியவை வட்டியுடன் திருப்பிச் செலுத்தக்கூடிய கடன்கள் என்பதை ஜனாதிபதி விக்கிரமசிங்க அறிவார். இவை அனைத்தும் 52 பில்லியன் அமெரிக்க டொலர் தேசியக் கடனுடன் சேர்ந்து, அடுத்த தலைமுறையை மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளும் என்பதை நாம் உணர வேண்டும். ஆனால் மத்திய கிழக்கிலிருந்து இலங்கைத் தொழிலாளர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி பணம் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்கள் அல்ல என்பது ஜனாதிபதிக்கும் அவரது ஆலோசகர்களுக்கும் தெரியும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.- Vidivelli