எம்.ஐ.அப்துல் நஸார்
சிரியாவில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த குழந்தையொன்று, பாரிய நிலநடுக்கத்தில் இருந்து உயிர் தப்பிய குடும்ப உறவினர்களான மாமி மற்றும் மாமாவினால் தத்தெடுக்கப்பட்டுள்ளது.
மீட்கப்படும்போது தாயுடன் தொப்புள் கொடியால் இணைக்கப்பட்டிருந்த அப் பெண் குழந்தையைத் தத்தெடுக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்வந்தனர்.
குறித்த பெண் உறவினர் மரபணுப் பரிசோதனையில் அக் குழந்தையின் தாய்வழி இரத்த உறவினர் என உறுதி செய்யப்பட்டதையடுத்து வைத்தியசாலையிலிருந்து அந்த உறவினரோடு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அக் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
‘இவள் இப்போது என் குழந்தைகளுள் ஒருத்தி, நான் எனது குழந்தைகளுக்கும் அவளுக்கும் இடையே வேறுபாடு காட்ட மாட்டேன்’ என அப் பெண் குழந்தையை தத்தெடுத்துள்ள மாமாவான கலீல் அல்-சவாதி அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
தற்போது அக் குழந்தைக்கு உயிரிழந்த தாய் அப்ராவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவள் மீட்கப்பட்ட சிறிது நேரத்தில், அதிகாரிகள் அவளுக்கு அயா என்று பெயரிட்டனர், அதாவது அரபு மொழியில் அதிசயம் என்பது அதன் கருத்தாகும். நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் அக் குழந்தை மீட்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
நெஞ்சு படபடக்கும் காட்சிகளைக் கொண்ட அக் காணொளியில், ஒருவர் தனது கைகளில் தூசுகளால் மூடப்பட்டிருக்கும் குழந்தையை தூக்கிக்கொண்டு, இடிபாடுகளுக்கு மேலாக வேகமாக ஓடுவது காண்பிக்கப்படுகின்றது. கட்டடம் இடிந்து விழுந்து 10 மணி நேரத்திற்கு பின்னர் அக் குழந்தை அக் கட்டிடத்தின் கீழ் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அக் குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் மற்றும் சிராய்ப்புகளுடன் மிக ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
துருக்கிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இட்லிப் மாகாணத்தில் எதிர்த்தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள நகரமான ஜிண்டாய்ரிஸில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இடிந்து வீழ்ந்த 50 கட்டடங்களுள் ஒன்றில் அக் குழந்தையின் குடும்பம் வாழ்ந்து வந்தது.
அக் குழந்தையின் தாய் அனர்த்தம் நடந்த சிறிது நேரத்தில் அவர் உயிரிழப்பதற்கு முன்னர் அக் குழந்தையினை பிரசவித்திருந்தார், இந்த அனர்த்தத்தின்போது அக் குழந்தையின் தந்தை, உடன் பிறப்புக்கள் நான்கு பேர் மற்றும் அக் குழந்தையின் மாமியொருவரும் உயிரிழந்ததாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
‘இந்தக் குழந்தையின் குடும்பத்தில் எவரும் தற்போது உயிருடன் இல்லை, இதனால் எமக்கு இக் குழந்தை மிகவும் முக்கியமானது’ என அல்-சவாதி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். ‘இக் குழந்தை எனக்கும், அவளது மாமிக்கும் மற்றும் அவளுடைய தாய் மற்றும் தந்தையின் கிராமத்தில் உள்ள எமது உறவினர்கள் அனைவருக்கும் ஒரு நினைவுச் சின்னமாக இருப்பாள்’ எனவும் அவர் தெரிவித்தார்.
அப்ராவை தத்தெடுப்பதற்காக ஏராளமானோர் முன்வந்திருந்ததால், அவள் வைத்தியசாலையில் இருந்த இரண்டு வாரங்களில் அவளை யாராவது கடத்திச் சென்றுவிடுவார்களோ என தான் கவலைப்பட்டதாக அக் குழந்தை இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டபோது உடனிருந்த அல்-சவாதி, அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
அப்ராவுக்கு சிறந்தது அவளது குடும்பத்துடன் இருப்பதாகும் என அப்ராவை தத்தெடுத்துள்ள அல்-சவாதி மற்றும் அவரது மனைவி ஹாலாவும் தெரிவித்தனர், இவர்களது வீடும் முற்றாக சேதமடைந்துள்ளதோடு உறவினரொருவரின் வீட்டிலேயே வசித்து வருகின்றனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்குப் பின்னர் ஹாலாவுக்குப் பெண் குழந்தையொன்று பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli