மேற்கு ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அவுஸ்திரேலியா அங்கீகரித்தமை தொடர்பில் இஸ்ரேல் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. முழு நகரமும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டினுள் இருக்கிறது என்பதை மறுப்பது தவறானதாகும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவர் தெரிவித்தார். வாராந்த இஸ்ரேலிய அமைச்சரவைக் கூட்டத்தின்போது பிரதமர் நெத்தன்யாஹு, கென்பராவின் தீர்மானம் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
அவுஸ்திரேலியா மேற்கு ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தமை கிழக்கு ஜெரூசலத்தை தலைநகராகக் கொண்ட எதிர்கால பலஸ்தீன தேசத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாதென அமெரிக்காவின் நட்பு நாடான பஹ்ரைன் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெரூசலத்தை அங்கீகரித்த அவுஸ்திரேலியா சமாதானமான இணக்கப்பாடொன்று காணப்படும் வரை தூதரகம் டெல் அவிவிலிருந்து நகர்த்தப்படமாட்டாது என தெரிவித்திருந்தது.
ஆசிய நாட்டு அயல் நாடுகளுடனான பல தசாப்தகால கொள்கையில் விரிசலை ஏற்படுத்தக் கூடியதும் கோபத்தை ஏற்படுத்தக் கூடியதுமான ஆபத்தைக் கொண்ட டெல்அவிவில் அமைந்துள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தை ஜெரூசலத்திற்கு மாற்றுவது தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று கலந்துரையாடலில் ஈடுபட்டதாக விடயத்துடன் தொடர்புடைய இரு வட்டாரங்கள் தெரிவித்தன.
இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை அங்கீகரிப்பதன் மூலம் அவுஸ்திரேலியப் பிரதமர் மொறிசன் தனக்கு ஆதரவான பழமைவாத பின் ஆசன உறுப்பினர்களை மகிழ்ச்சிப்படுத்த எதிர்பார்க்கின்றார். ஆனால் உலகின் மிகப்பெரும் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட அண்டை நாடான இந்தோனேசியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளின் வெறுப்பை சம்பாதிக்கும் செயலாக இது இருக்கும்.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் அதன் கொள்கைகளுக்கு அப்பட்டமான பக்கச்சார்புத் தீர்மானம் இதுவென அரபு லீக் கண்டித்துள்ளது.
-Vidivelli