வடக்கு – கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஏற்கமாட்டார்கள்
13 ஐ முழுமையாக அமுல்படுத்தினால் நாடு பிளவுபடாது என்கிறார் நவீன்
(எம்.ஆர்.எம்.வசீம்)
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பதை அங்குள்ள முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
அத்தோடு, 13 ஐ முழுமையா அமுல்படுத்தினால் நாடு பிளவுபடும் என சிலர் பிரசாரம் செய்கின்றனர். எனினும், அவ்வாறு நாடு பிளவை சந்திக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக இந்தியாவில் தமிழ் நாட்டைச்சேர்ந்த நெடுமாறன் தெரிவித்திருக்கிறார். அவர் எந்த அடிப்படையில் தெரிவித்தார் என்று எமக்கு தெரியாது. என்றாலும் பிரபாகரன் உயிரோடு இல்லை என்பதை எமது இராணுவம் உறுதிப்படுத்தி இருக்கிறது. அதனால் இது தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு, அழுத்தம் பிரயோகிப்பதற்கு இவ்வாறான செய்தியை பரப்புவதாக தெரிவிக்க முடியாது. ஏனெனில் 13ஆம் திருத்தம் எமது அரசியலமைப்பில் இருக்கும் விடயமாகும்.
மேலும் 13ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் நாடு பிளவுபடும் என சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் நாடு பிளவுபடாது என 1987 இல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அன்று மிகவும் பயங்கரமான நிலைமையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அன்று பிரபாகரன் பெரும் செல்வாக்குடன் இருந்தார். வடக்கு கிழக்கு மாகாணம் பிரபாகரனின் ஆதிக்கத்தின் கீழே இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட நிலையே இருக்கிறது. வடக்கு,கிழக்கு மாகாணம் இணைக்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே அங்குள்ள முஸ்லிம் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். அத்தோடு, சிங்கள மக்களும் இணைப்பை விரும்பவில்லை.
அத்துடன் மாகாணங்களுக்கு பொலிஸ். காணி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள போதும் நிதி அதிகாரம் வழங்கப்படவில்லை. நிதி அதிகாரம் இல்லாமல் சமஷ்டி ஆட்சியை மேற்கொள்ள முடியாது. இந்தியாவில் சமஷ்டி முறையே இருக்கிறது. ஆனால் எமது நாட்டில் மாகாண முறையே இருக்கிறது. அதனால் மாகாண அதிகாரங்கள் அரசியலமைப்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் மாகாணங்களுக்கு பொலிஸ். காணி அதிகாரங்களை வழங்குவதன் மூலம் நாடு பிளவுபடப்போவதில்லை. 13ஐ முழுமையாக அமுல்படுத்தப்போவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்யும் அளவுக்கு அதில் ஒன்றும் இல்லை என்றார். – Vidivelli