(றிப்தி அலி)
ஈரானின் தேசிய தினம் மற்றும் இஸ்லாமிய மறுமலர்ச்சி வெற்றியின் 44ஆவது பூர்த்தி நிகழ்வு ஆகியன கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள இலங்கைக்கான ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கான பிரதம அதிதியாக சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமத் வெளிநாட்டு அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டிருந்தார். இதற்கமைய, பிரத அதிதி பி.ப 7.00 மணிக்கே வருகை வந்துவிட்டார். இது போன்று, அழைப்பு விடுக்கப்பட்ட விருந்தினர்களும் வருகை தந்திருந்த நிலையில், பி.ப. 7.40 மணியாகியும் இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்படவில்லை.
இது தொடர்பில் அங்கு வருகை தந்திருந்த அமைச்சர் நசீர் அஹமதின் இணைப்புச் செயலாளரொருவரிடம் வினவியபோது, “முன்னாள் ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வந்தவுடனேயே நிகழ்வு ஆரம்பமாகும்” என அவர் பதிலளித்தார்.
இவ்வாறான நிலையில், பி.ப 7.47 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வந்தவுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. நிகழ்வு ஆரம்பமாகி சுமார் 15 நிமிடங்கள் கழிந்த பின்னரே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அங்கு வருகை தந்தார்.
முஸ்லிம் நாடுகளின் நண்பன் என அழைக்கப்படும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு முக்கியத்துவம் வழங்காது, கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஈரான் முக்கியத்துவம் வழங்கியமை இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் பேசுபொருளாகக் காணப்பட்டது.
பலவந்தமாக முஸ்லிம்களின் ஜனாஸா எரிக்கப்பட்டதை நிறுத்துமாறு ஈரான் உட்பட அனைத்து முஸ்லிம் நாடுகளினாலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை அச்சந்தர்ப்பத்தில் நிராகரிக்கப்பட்டது.
இவ்வாறான இராஜ தந்திர விடயங்களையும், இலங்கை முஸ்லிம்களின் உணர்வுகளையும் கொழும்பிலுள்ள ஈரான் தூதுவராலயம் மறந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இந்த நிகழ்வில் ஈரான் பாரிய முக்கியத்துவம் வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.-Vidivelli