ஏ.ஆர்.ஏ. பரீல்
துருக்கியில் ரெய்ஹான்லி எனும் பகுதிக்கு அருகில் நான்கு தினங்களுக்கு முன்பு ஜனாஸாக்கள் லொறிகளில் எடுத்து வரப்பட்டு கீழே இறக்கப்படுகின்றன. சில ஜனாஸாக்கள் பலகையிலான பெட்டிகளுக்குள் மூடப்பட்டுள்ளன. ஏனைய ஜனாஸாக்கள் போர்வையினால் சுற்றப்பட்டுள்ளன.
முகத்தை கறுப்புத் துணிகளால் மறைத்துக்கொண்டுள்ள பெண்கள் அழுது புலம்பி தங்கள் நெஞ்சுகளை கைகளால் அடித்துக்கொள்கிறார்கள். அப்பகுதியெங்கும் சோகம் சூழ்ந்து கொண்டுள்ளது.
அண்மையில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியையடுத்து கடந்த சில தினங்களாக அங்கு நிலவிக் கொண்டிருக்கும் நெஞ்சை உருக்கும் ஆயிரக் கணக்கான சம்பவங்களில் ஒரு சம்பவமே இது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்புப் பணியாளர்கள் கட்டிட இடிபாடுகளுக்கிடையில் இருந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த சிலரை மீட்டெடுத்தனர். தொடர்ந்தும் உயிருக்காகப் போராடுபவர்கள் கட்டிட இடிபாடுகளுக்கிடையில் இருப்பதற்கு வாய்ப்பில்லை என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பலியானோர் எண்ணிக்கை முப்பத்து ஆறாயிரத்துக்கும் அதிகம் எனக் கணக்கிடப்பட்டுள்ளதுடன் இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் தங்களது வர்த்தக பொருட்களை கொள்ளையிடுபவர்களிடமிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். வியாபார நிலையங்களின் விற்பனைப் பொருட்கள் உரிமையாளர்களால் அகற்றப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கும், நகரங்களுக்கும் ஏனைய நகரங்களிலிருந்து வருகை தரும் மக்களும் சிதைவுகளுக்குள்ளாகியுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளைக் கொள்ளையடிப்பதாகவும் அங்கிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கி ஜனாதிபதி தையிப் அர்துகான் பூமியதிர்ச்சி அனர்த்தத்தையடுத்து பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளார். திட்டமிடப்பட்டுள்ள தேர்தலில் இவ் அனர்த்தம் தாக்கங்களைச் செலுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை இந்த அனர்த்த நிலைமையில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி அர்துகான் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வடக்கு, மேற்கு பகுதிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. சிரியாவின் உள்நாட்டு யுத்தம் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் இந்த அனர்த்தத்தினால் பெரும் எண்ணிக்கையில் வீடுகளை இழந்துள்ளனர். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பகுதிகளுடன் இப்பகுதியை ஒப்பிடும்போது இப்பகுதிகளுக்கு குறைந்தளவிலான உதவிகளே அனுப்பி வைக்கப்படுகின்றன.
சிரியாவின் வட மேற்கு பகுதி மக்களை அடைவதற்கு இதுவரை எம்மால் முடியாமற்போயுள்ளது. அங்கு செல்வதற்கு ஒரே ஒரு வழியே திறந்துள்ளது என ஐக்கிய நாடுகளின் உதவி தலைமை அதிகாரி மார்டின் கிரிப்பித்ஸ் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் உதவிகளை வழங்குவதற்கு துருக்கியிலிருந்து சிரியாவுக்கு ஒரே ஒரு வழி திறந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அப்பகுதி மக்கள் தாம் கைவிடப்பட்டுள்ளதாகவே கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனர்த்தம் ஏற்பட்டு பலநாட்கள் கடந்து விட்டபோதும் இடிபாடுகளுக்குள்ளான வீடுகளில் மக்கள் செய்வதறியாது அதிர்ச்சிக்குள்ளாகியிருந்ததை மீட்புப்பணியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இடிபாடுகளுக்குள்ளான வீடுகள் ஆயிரக்கணக்கானோரின் கல்லறைகளாக காட்சியளிக்கின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டிடங்களின் இடிபாடுகளுக்கிடையிலிருந்து ஒரு தகப்பனும் மகளும், குழந்தையும் மற்றும் 10 வயது சிறுமியொருவரும் மீட்புபணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான சம்பவங்கள் மிக அரிதானதாகும். இதே வேளை பலியானவர்கள் தொடர்ந்தும் மீட்கப்பட்டு வருவதால் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டிட நிர்மாணத்தின் தரம்
பூமியதிர்ச்சியினால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து சிதைந்து வீழ்ந்தமை கட்டிடங்கள் உரிய தரத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளது.
பூமியதிர்ச்சியினால் இவ்வாறான பாரிய அனர்த்தம் ஏற்படுவதற்கு கட்டிடங்கள் உரிய தரத்தின் கீழ் நிர்மாணிக்கப்படாமையே பிரதான காரணம் என்பது கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து கட்டிட நிர்மாணத்துறையைச் சேர்ந்தவர்கள் பலர் சந்தேகத்தின் பேரில் இனங்காணப்பட்டுள்ளனர்.
துருக்கியில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 10 மாகாணங்களில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களென 131 சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக துருக்கியின் உதவி ஜனாதிபதி புவாட் ஒக்டே தெரிவித்துள்ளார்.
“நாம் இவ்விடயம் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தியுள்ளோம். இவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்வரை அவதானமாக இருப்போம். இந்த அனர்த்தத்தில் மிகவும் மோசமாக பாதிப்புக்குள்ளான கட்டிடங்கள் மற்றும் மக்களைப் பலியெடுத்த கட்டிடங்கள், மக்களை காயங்களுக்குள்ளாக்கிய கட்டிடங்கள், தொடர்பில் சம்பந்தப்பட்ட நிர்மாண உரிமையாளர்கள், நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்களுக்கு சவால்
துருக்கியில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் நடாத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பூமியதிர்ச்சி அனர்த்தம் அர்துகானின் அத்தேர்தல் ஏற்பாடுகளுக்கு சவாலினை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனர்த்தத்துக்கு முன்பே ஜனாதிபதியின் செல்வாக்கு சரிவினை எய்தியிருந்தது. துருக்கிய பணம் (Currency) பெறுமதியின் வீழ்ச்சி, உயர் பணவீக்கம் காரணமாக ஜனாதிபதி அர்துகானின் செல்வாக்கு வீழ்ச்சி கண்டிருந்தது.
பூமியதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் மற்றும் எதிர்கட்சி அரசியல்வாதிகள் அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவில்லை, மீட்புப்பணியும் துரிதமாக செயற்படுத்தப்படவில்லை என குற்றம் சுமத்துகின்றனர்.
1999 ஆம் ஆண்டு இடம் பெற்ற பூமியதிர்ச்சி அனர்த்தத்தின் பின்பு இராணுவம் துரிதகதியில் செயற்பட்டு உதவிகளை வழங்கியது. ஆனால் தற்போதைய அனர்த்தத்தின்போது இராணுவம் உடனடியாக செயற்படவில்லை. உடனடியாக அழைக்கப்படவில்லை.
இக்குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி அர்துகான் போக்குவரத்து கட்டமைப்புகளின், பாதைகளில் பாதிப்புகள் உருவாகியிருந்தாலும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சிவில் யுத்தம் காரணமாக சிரியாவுக்கு உதவி வழங்கல் சிக்கலில்
சிரியாவில் கடந்த 12 வருடகாலமாக இடம்பெற்றுவரும் சிவில் யுத்தம் காரணமாக நிவாரண பணிகள் தடங்கலுக்குள்ளாகியுள்ளன. உதவிகள் அரச நிர்வாகத்தின் கீழிருக்கும் பிராந்தியங்களிலிருந்து கடும்போக்கு எதிர்க்கட்சி குழுவின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு இஸ்லாமிய அமைப்பொன்றின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அதிகமான பிராந்தியங்களை ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் (HTS) எனும் இஸ்லாமிய அமைப்பே தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொண்டுள்ளது. எனவே இவ்வமைப்பிடமிருந்து அனுமதி பெற்றுக்கொள்ளப்படவேண்டியுள்ளது என ஐநாவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரச கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதியிலிருந்து உதவிகள் துருக்கியிலிருந்து வடக்குக்கு அனுப்பிவைக்கப்படுவதை ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை என சிரியா இட்லிப் நகரில் நிலை கொண்டுள்ள ஹயாத் தஹ்ரீர் அல்ஷாம் எனும் குழு தெரிவித்துள்ளது.
என்றாலும் துருக்கி மற்றும் சிரியாவுக்கிடையில் மேலதிக இரண்டு எல்லை மையங்களை நிறுவி ஐ.நா. நிவாரண உதவிகளை அனுப்பி வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஐ.நா.பேச்சாளர் ஜென்ஸ் லாயர்கே தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவின் நேச நாடான ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிரியாவின் ஜனாதிபதி பஸார் அசாத்தை சந்தித்தார். பூமியதிர்ச்சி அனர்த்தம் இடம்பெற்றதன் பின்பு அரபு நாட்டின் அமைச்சரொருவர் மேற்கொண்ட முக்கிய சந்திப்பு இதுவாகும்.
பூமியதிர்ச்சி அனர்த்தத்தின் பின்பு பல அரபு நாடுகள் ஜனாதிபதி அசாத்துக்கு உதவிகள் வழங்கியுள்ளன. ஐரோப்பாவின் முதல் உதவி கடந்த ஞாயிற்றுக்கிழமை சிரியாவின் தலைநகரான டமஸ்கஸை வந்தடைந்தது.
ஐ.நா.வின் சிரியாவுக்கான பிரதிநிதி பெடர்சன், ஐ.நா. சிரியாவுக்கு உதவிகள் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ‘நாம் அனைவருக்கும் ஒன்றைக் கூற விரும்புகின்றோம். இந்தக்கட்டத்தில் அரசியலை ஒரு புறம் வைத்துவிட்டு பொதுவானதொரு உதவிக்காக அனைவரும் ஒன்றிணையுங்கள் சிரிய மக்களுக்கு உதவி செய்யுங்கள்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அனர்த்தத்தில் நேற்று வரை கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களின்படி துருக்கியில் 35,418 பேரும், சிரியாவில் 5,800 பேரும் பலியாகியுள்ளனர். எனினும் பலியானவர்கள் மதிப்பிட்ட தொகையிலும் இரு மடங்காக இருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே எச்சரித்துள்ளது.
இதேவேளை துருக்கியில் கஸியன்டெப் பிராந்தியத்தில் இடிந்து விழுந்த கட்டிடமொன்றின் இடிபாடுகளுக்குள்ளிருந்து ஒரு வாரம் கழித்து கடந்த திங்கட்கிழமை சிபெல் கயா என்ற 40 வயதுப் பெண்ணொருவரும், 62 வயதுப் பெண்ணொருவரும் மேலும் 13 வயதான முஸ்தபா என்ற சிறுவனும் 10 வயதான சிறுமியொருவரும் மீட்கப்பட்டுள்ளனர். அனர்த்தம் ஏற்பட்டு 183 மணித்தியாலங்களின் பின்பு இவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளமை அதிசயிக்கத்தக்கதாகும்.
துருக்கியில் 80 ஆயிரம் பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஒரு மில்லியன் மக்கள் வீடுகளின்றி தற்காலிக தங்குமிடங்களில் வசிக்கிறார்கள்.- Vidivelli