கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
சொல்லத் தயங்கிய விடயம்
சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி விக்கிரமசிங்ஹ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலும் அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அவர் முன்வைத்த கொள்கைப் பிரகடனத்திலும் நான்கு விடயங்கள் தெளிவாக்கப்பட்டன. முதலாவது, நாட்டின் பொருளாதாரம் இதுவரை எதிர்நோக்காத ஒரு நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இரண்டாவது, சர்வதேச நாணய நிதியின் ஆலோசனையுடனும் அதன் நிதி உதவியுடனும், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய ஸ்தாபனங்களின் நிதி உதவியுடனும் சில நேசநாடுகளின் கருணையுடனும் பொருளாதாரத்தை சரியான வழியில் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதியும் அமைச்சர்களும் தம்மை அர்ப்பணித்துள்ளனர். மூன்றாவது, மக்கள் யாவரும் நாட்டுக்காகத் தியாகங்களைச் செய்ய முன்வரவேண்டும். நான்காவது, இப்போது எடுக்கப்பட்டுள்ள பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் நீண்ட காலத்தில் வெற்றியளிப்பது உறுதி. ஆகவே அதுவரை மக்கள் பொறுமையுடன் குழப்பங்களை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.
ஆனால் அவரது உரையிலும் கொள்கைப் பிரகடனத்திலும் சொல்லப்படாத, அல்லது சொல்லத் தயங்கிய ஒரு விடயம் என்னவெனில் தேர்தல்கள் நடத்துவதற்கோ அத்தேர்தல்களின்மூலம் ஆட்சி மாற்றம் செய்வதற்கோ இது தக்க தருணம் அல்ல என்பதாகும். அதன் அந்தரங்கமோ அவருக்கேற்பட்டுள்ள ஓர் அச்சம். அதாவது, அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஊராட்சிமன்றத் தேர்தல் ஜனாதிபதிக்கும் அவரைப் பதவியில் அமர்த்திய ராஜபக்ச அரசாங்கத்துக்கும் பேரிடியாக அமையும் என்பதை எல்லா கருத்துக் கணிப்புகளும் சுட்டிக் காட்டுகின்றன. இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வியைச் சந்திக்குமாயின் அந்தக் கட்சியின் அரசாங்கம் தொடர்ந்தும் இயங்குவதை எவராலும் சரிகாண முடியாது. எனவே நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலொன்றை நடத்தவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல் ஜனாதிபதித் தேர்தலும் நடைபெற வேண்டிய அவசியமும் தோன்றலாம். இவற்றையெல்லாம் தவிர்க்க ஜனாதிபதிக்குள்ள ஒரே வழி ஊராட்சிமன்றத் தேர்தலை நடைபெறாமல் தடுப்பதே. இதை வெளியே சொல்லாமல் மறைமுகமாகப் புரிய வைப்பதாகவே ஜனாதிபதியின் உரையும் பிரகடனமும் அமைந்துள்ளன.
கட்டுப்படியாகாத செலவு
அந்தத் தேர்தலை தடுக்க இரண்டு சூழ்ச்சிகளை ஜனாதிபதி கையாண்டுள்ளார். ஒன்று, நாட்டின் நிதி நெருக்கடியைக் காரணம்காட்டி தேர்தலுக்கான மொத்தச் செலவு பத்து பில்லியன் ரூபா என்றும் அந்த அளவு பணம் திறைசேரியிடம் கிடையாது என்றும் ஒரு பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டமை. அதற்குப் பொலிஸ் படையும் ஆமாப் போடுவதுபோல் தேர்தலைக் கண்காணிக்க அப்படைக்கு இரண்டு பில்லியன் ரூபாய் தேவைப்படும் என்று பயமுறுத்தியுள்ளது. ஆனால் தேர்தல் ஆணைக்குழுவோ ஜனாதிபதியும் பொலிஸ் படையும் கூறிய தொகைகள் மிகைப்படுத்தப்பட்ட தொகைகள் எனவும் உண்மையான செலவு அதில் அரைவாசியே எனவும் அந்தப்பணம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டி அந்தப்பிரச்சாரத்தின் முகமூடியை கிழித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணைக்குழு மாசி மாதத்துக்கான செலவு 770 மில்லியன் ரூபாவை அனுமதிக்குமாறு ஜனாதிபதியைக் கேட்க, அவர் நிதி அமைச்சர் என்ற முறையில் அனாவசியமான செலவுகளை அனுமதிக்க வேண்டாமென திறைசேரிக்கு ஆணையிட்டுள்ளார். அவ்வாறு தேர்தல் செலவு அநாவசியமானதென ஜனாதிபதி கருதுவது தேர்தலே அநாவசியமானது என்று கருதுவதாக அமையாதா? ஒரு ஜனநாயக ஆட்சியில் தேர்தல் மூலம்தான் ஆட்சியினரின் நடவடிக்கைகளைப்பற்றிய தமது எண்ணத்தை அல்லது விருப்பு வெறுப்புகளை மக்கள் வெளிப்படுத்தலாம். அதனை அநாவசியமானது என்று ஜனாதிபதி கருதுவது அந்தத் தேர்தலின் முடிவு எவ்வாறு தனக்குப் பாதகமாக அமையும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருப்பதனாலேயே என்பதை மேலும் வலியுறுத்த வேண்டியதில்லை.
அதுமட்டுமல்லாமல் தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் கடமையாற்றும் சிலருக்கு மரண அச்சுறுத்தல்களும், தேர்தல் ஆணைக்குழுவையே களங்கப்படுத்தும் பிரச்சாரங்களும் நடவடிக்கைகளும் அரசினரால் மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு சிவில் ஸ்தாபனமொன்று முறையிட்டுள்ளது. ஆனாலும் நீதிமன்றம் குறிப்பிட்ட தினத்தில் தேர்தலை நடத்துவதற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளது. ஆகவே அந்தத் தேர்தலை நிறுத்துவதானால் இரண்டாவது வழியொன்றை ஜனாதிபதி கையாள வேண்டியுள்ளது. அது என்ன வழி?
இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி
அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் இலங்கைக்கு வந்து இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான இந்தியாவின் உதவிப் பட்டியல் ஒன்றை அவிழ்த்துவிட்டபின் ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் சந்தித்து இந்தியாவின் முத்திரையுடன் தயாரிக்கப்பட்டு 1987ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி விக்கிரமசிங்ஹ அத்திருத்தத்தைப் பூரணமாக அமுல்படுத்தி இலங்கையின் இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகப் பறைசாற்றினார். தமிழர் ஐக்கிய கூட்டணியும் அதனைப் பாய்ந்து விழுந்து பாராட்டி ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க முன்வந்தனர். ஜனாதிபதியின் இந்த முயற்சி வெற்றிபெற்றால் என்ன நன்மை அல்லது தோல்வி கண்டால் என்ன தீமை என்ற வினாக்களை தனித்தனியே ஆராய வேண்டியுள்ளது. சோழிக் குடும்பி சும்மா ஆடுவதில்லை.
இனப்பிரச்சினையும் பொருளாதாரமும்
சிங்கள பௌத்த இனவாதம் தூண்டிவிட்ட இனப்பிரச்சினையால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துள்ளதை இனவாதிகளைத்தவிர ஏனையோர் ஏற்றுக்கொள்கின்றனர். இப்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கும் இனப்பிரச்சினைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டென்பதையும் சர்வதேச உலகு சரிகாண்கிறது. இந்த நெருக்கடியை விரைவில் தீர்க்க வேண்டுமாயின் பாரிய நிதி உதவி தேவை. அதற்காகத்தான் சர்வதேச நாணய நிதியின் காலடியில் ஜனாதிபதி வீழ்ந்துள்ளார். அந்த நிதி உதவியும் அதனைத் தொடர்ந்து உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியனவற்றின் உதவிகளும் கிட்டினாலும் பாரிய அளவு வெளிநாட்டு முதலீடுகளின்றி இப்பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது கடினம். அந்த முதலீடுகளுக்கும் 13ஆம் திருத்த அமுலுக்கும் சம்பந்தம் உண்டா?
புகலிடத் தமிழர் சமுதாயம்
எழுபது ஆண்டுகளுக்கும் மேலான இலங்கையின் இனப்பிரச்சினை தோற்றுவித்ததே புகலிடத் தமிழர் சமுதாயம். இன்று அது கனடாவை மையத்தளமாகக் கொண்டு வளர்ச்சி கண்ட உலக நாடுகள் எங்கும் செழிப்புடன் பரவி பலத்துடன் வாழ்கின்றது. உலக அரங்கில் வல்லரசுகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் அளவுக்கு அதன் பொருளாதார முயற்சிகளும் பாண்டித்தியமும் செயற்றிறனும் சிறப்படைந்துள்ளன. சுருக்கமாகக் கூறினால் இரண்டாவது உலக மகா யுத்தத்துக்கு முன்னர் எவ்வாறு யூத இனம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் செல்வாக்குள்ளதாக இருந்ததோ அந்த இடத்தை நோக்கி விரைகிறது புகலிடத் தமிழர் சமுதாயம்.
பாரிய அளவில் இலங்கையில் முதலீடுகளை முடக்குவதற்குரிய சக்தி அந்தச் சமூகத்திடம் உண்டு. அதனை முன்னைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும் உணர்ந்திருந்தார். இன்றைய ஜனாதிபதியும் உணர்ந்துள்ளார். அந்த முதலீடுகளைக் கவரவேண்டுமாயின் தாயகத்தில் வாழும் அச்சமூகத்தின் உறவுகளுக்கும் இனத்துக்கும் இழைக்கப்படும் அநீதிகள் நிறுத்தப்பட்டு, நீக்கப்பட்டு, தமிழர்களை சமபிரஜைகளாக அரசு கணித்தல் வேண்டும். அதற்கு வழிவகுக்கும் முதற்படியாகவே 13ஆம் திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதும் சர்வதேச அரங்கின் நம்பிக்கை. இந்தச் சிந்தனையின் பின்னணியிலேயே விக்கிரமசிங்ஹ அத்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முன்வந்தார். அதில் அவர் வெற்றி கண்டால் உலக அரங்கிலே புகழாரம் சூட்டப்பட்டு நாட்டின் நிதி நெருக்கடிக்கும் பொருளாதார அழிவுக்கும் பரிகாரமாக புலம்பெயர் தமிழரின் முதலீடுகளை எதிர்பார்க்க இடமுண்டு. இந்த நல்லெண்ணம்தான் அவர் எடுத்த முடிவுக்குக் காரணமா?
கபட நாடகம்
ரணில் விக்கிரமசிங்ஹ அரசியலிலே ஒரு பழங்காட்டு நரி. விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பதுபோல் தோல்வியையே வெற்றியாகக் கொண்டாடும் ஒரு நாடகக்காரன். சிங்கள பௌத்த இனவாதிகள் 13ஆம் திருத்தத்தின் பரம எதிரிகள் என்பது அந்த நரிக்கு நன்றாகத் தெரியும். அந்த எதிரிகளின் அபாயச் சங்கொலியைத்தான் சரத் வீரசேகர, விமல் வீரவங்ச போன்ற இனவாதிகளின் குரல்களிலிருந்து நாடாளுமன்றமும் நாட்டு மக்களும் கடந்த பல நாட்களாகக் கேட்கத் தொடங்கினர். அதன் இன்னொரு அங்கமாகவே காவிப் படையினர் வீதிக்கிறங்கி 13ஆம் திருத்தத்துக்குத் தீமூட்டி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். சாதிப்பிரிவினையில் உருவாகிய பௌத்த பீடாதிபதிகள் நாட்டைப் பிரிக்கும் அத்திருத்தத்தை அமுலாக்க வேண்டாமென ஜனாதிபதிக்குக் கடிதமும் அனுப்பியுள்ளனர். இந்தக் காவிப்படைதான் 1956ல் பண்டாரநாயகாவை பிரதமராக்கியதும், அதன் பின்னர் அவரைக் கொலை செய்ததும், பண்டா-செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறியச் செய்ததும், இனக்கலவரங்களைத் தூண்டிவிட்டு அவற்றை முன்நின்று நடத்தியதும், கோத்தாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கியதும் என்ற விபரங்களையெல்லாம் ஜனாதிபதி நன்குணர்வார். அதே காவிப்படைதான் இப்போது 13ஆம் திருத்தத்தை தீக்கிரையாக்கியுள்ளது. இந்த எதிர்ப்பினை ஜனாதிபதி விக்கிரமசிங்ஹ மனதுக்குள்ளே கொண்டாடுவது மட்டுமல்லாமல் அந்த எதிர்ப்பு இன்னும் மும்முரமாக வளரவேண்டும் எனவும் அவர் விரும்புவதை எத்தனைபேர் உணர்வார்களோ? தமிழர் கூட்டணியினரும் அதனை உணரவில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. அதை உணர்ந்தால் 13ஆம் திருத்த அமுலாக்கம் ஜனாதிபதியின் ஒரு கபட நாடகம் என்பது புலப்படும்.
ஜனாதிபதியின் உடனடியான தேவை ஊராட்சிமன்றத் தேர்தலை தடைசெய்வது. அதற்கு தேர்தல் ஆணைக்குழுவோ உடன்பாடில்லை. நீதி மன்றமும் அதை நடத்துவதற்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளது. இந்த நிலையில் நாட்டில் ஒரு குழப்ப நிலையை உருவாக்கி அதனைக் காரணம்காட்டி அவசரகால சட்டத்தைப் பிரகடனம் செய்து அதனைக் கொண்டு தேர்தலை நிறுத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. இந்தத் தந்திரமே இனப்பிரச்சினை தீர்வுக்குப் பின்னால் ஒழிந்துள்ளது. 2018ல் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவம் ராஜபக்சாக்களுக்கு அரசியல் லாபம் ஈட்டிக் கொடுத்ததுபோன்று 13ஆம் திருத்த எதிர்ப்பு ஏன் இன்னொரு சம்பவத்தை உருவாக்கி ஜனாதிபதிக்கு லாபம் ஈட்டிக் கொடுக்க முடியாது? அடுத்து வரும் மூன்று வாரங்களிலும் எதுவும் நடக்கலாம். அரசியலில் மூன்று வாரங்களென்ன மூன்று நிமிடங்களே ஒரு திருப்பத்தை ஏற்படுத்தலாம்.
துணிகரமான ஆதரவு
இதனிடையில் ஜனாதிபதியின் 13ஆம் திருத்த அமுலாக்க முயற்சிக்கு ஆதரவு காட்டுவதா இல்லையா என்பதுபற்றி எல்லா எதிரணிகளும் சுவரின்மேல் குந்தி இருக்கும் பூனையைப் போன்று தயங்கிநிற்க, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமர திசநாயக மட்டும் துணிந்து அதனை அமுல்படுத்துமாறு வேண்டியுள்ளார். அதற்குக் காரணம் ஜனாதிபதி நிச்சயம் அதனை அமுலாக்கமாட்டார் என்பதை அவர் நன்கு உணர்ந்ததனாலேயே. அத்துடன் அதனை அமுலாக்க வேண்டுமானால் அரசியல் அமைப்பும் அதன் கலாச்சாரமும் மாற்றப்பட வேண்டும். அதைத்தான் கடந்த வருடம் காலிமுகத்திடலில் குழுமிய இளைஞர் சமுதாயமும் வேண்டியது. அந்த வேண்டுதலை தட்டிக்கழித்து அவ்விளைஞர்களின் தலைமைகளையும் சிறைக்குள் தள்ளி இப்போது அந்த இளைஞர்களின் ஆதரவுக்கு மண்டியிடுவதுபோல் உரையாற்றும்போது மட்டும் அமைப்பு மாற்றம் வேண்டும் என்று கூறுவது இன்னுமொரு ஏமாற்று வித்தையாகத் தெரியவில்லையா? உண்மையைச் சொல்வதென்றால் அமைப்பு மாற்றத்தை கொண்டுவர ஜனாதிபதிக்கு விருப்பமும் இல்லை துணிச்சலும் இல்லை. அந்த மாற்றம் ஏற்படாமல் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது.
இளம் தலைமுறையுடன் இணைந்து, அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தி, நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்தை முன்வைத்துப் போராடுகின்றது தேசிய மக்கள் சக்தி. அந்த மாற்றத்தை ஏற்படுத்த அடிப்படைத் தேவை ஒரு புதிய அரசியல் யாப்பு. அதைப்பற்றி எல்லா எதிரணிகளும் வாய்திறவாமல் இருக்க தேசிய மக்கள் சக்தி மட்டும் அதனை வலியுறுத்துகிறது. அதனாலேதான் அதற்கு மக்களின் ஆதரவு பெருகிக்கொண்டு வருவதை கருத்துக் கணிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன. அதனைக்கண்டு அஞ்சுகிறார் ஜனாதிபதி. எனவேதான் ஊராட்சி மன்றத் தேர்தலை எப்படியாவது தடைசெய்வதற்கு 13ஆம் திருத்த நாடகத்தை அவர் நடத்துகிறார்;. அவ்வாறு தடைசெய்யப்பட்டு பொலிஸ் இராணுவப் படைகளின் ஆதரவுடன் அடக்குமுறையை அவர் கையாள்வாரானால் அவரது பொருளாதார மீட்சி நடவடிக்கைகள் யாவும் பயனற்றதாகி நாட்டின் நெருக்கடி மேலும் மோசமாகும் என்பதுமட்டும் உறுதி.- Vidivelli