புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சுப் பதவியை ஏற்காதிருக்கத் தயார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் தெரிவித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக்குழுக் கூட்டத்தின்போதே இவ்விரு கட்சித் தலைவர்களும் இக் கருத்தை முன்வைத்துள்ளனர்.
ஐக்கிய தேசிய முன்னணி தனித்து ஆட்சியமைக்கும்பட்சத்தில் அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்கமைய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுகளின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இராஜாங்க மற்றும் பிரதியமைச்சுகளின் எண்ணிக்கை 40 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து ஐ.தே.முன்னணி பக்கம் தாவிய உறுப்பினர்களும் அமைச்சுப் பதவிகளைக் கேட்பதால், புதிய அமைச்சர்கள் நியமனத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் அமைச்சர் தொகையை 30 இற்குள் வரையறுக்க தான் தடுமாறுவதாகவும், எவராவது சுயமாக முன்வந்து அமைச்சு பதவிகளை பெறாமல் இருக்க முடியுமா என்றும் இக் கூட்டத்தில் பிரதமர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த மனோ கணேசன், அவசியமானால், நான் அமைச்சு பதவியை ஏற்காதிருக்கிறேன் எனக் கூறியுள்ளார். ரிசாட் பதியுதீனும் இதே கருத்தை முன்வைத்துள்ளார். இதனை மனோ கணேசன் தனது டுவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், புதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவியையும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம தீர்மானித் துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.