(எம்.எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் போது கிங்ஸ்பரி ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்த தற்கொலை குண்டுதாரியான மொஹம்மட் அசாம் மொஹம்மட் முபாரக்கின் மனைவி ஆய்ஷா சித்தீகா மொஹம்மட் வஸீம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சட்ட மா அதிபரின் இணக்கத்துடன் அவரை பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவை கோட்டை நீதிவான் திலின கமகே நேற்று பிறப்பித்தார். அதன்படி, 2019 ஏப்ரல் 21 தாக்குதலை தொடர்ந்து சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்ட அவர் தடுப்புக் காவல் மற்றும் விளக்கமறியலில் இருந்து வரும் நிலையில், நேற்று பிணையில் விடுதலை செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்ட அவர், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
கிங்ஸ்பரி ஹோட்டல் தாக்குதலை நடாத்திய மொஹம்மட் அசாம் மொஹம்மட் முபாரக் எனும் தற்கொலைதாரியின் மனைவியான ஆய்ஷா சித்தீகா மொஹம்மட் வஸீம் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.குறித்த சந்தேக நபர் தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளதாகவும், அவர் ஹோட்டல்கள், தேவாலயங்கள் அருகே மேற்பார்வைகளை செய்துள்ளதாகவும் சி.ஐ.டி.யினர் மன்றுக்கு முன்னர் அறிக்கையிட்டுள்ள பின்னணியில் இவ்வாறு அவர் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் அவர் சார்பில் மேன் முறையீட்டு நீதிமன்றில் சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸ் தன்னையே மனுதாரராக நிறுத்தி பிணை மனு தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில் சட்டத்தரனி ரிஸ்வான் உவைஸுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் ஆஜராகின்றார். இந்த மனு நேற்று முன் தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டவாதி, ஆய்ஷா சித்தீகாவை பிணையில் விடுவிக்க சட்ட மா அதிபர் இணங்குவதாகவும், அது குறித்த இணக்கப்பாட்டை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில், நேற்று கிங்ஸ்பரி ஹோட்டல் மீதான தாக்குதல் குறித்த வழக்குக் கோவை நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு எடுக்கப்பட்டு, பிணை விண்ணப்பம் செய்யப்பட்டது. சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸ் விணணப்பத்தினை முன் வைத்த நிலையில், நிபந்தனைகளின் கீழ் ஆய்ஷா சித்திகாவை பிணையில் விடுவித்து நீதிவான் உத்தரவிட்டார். – Vidivelli