ஹஜ் பயண கட்டண அதிகரிப்பை தவிர்க்க ஏற்பாடுகளை ஆரம்பிக்குக
திணைக்கள பணிப்பாளரிடம் ஹஜ் முகவர்கள் கோரிக்கை
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்வருட ஹஜ்ஜின் இறுதிநேர பயணச் சீட்டு கட்டண உயர்வு மற்றும் மக்கா, மதீனாவில் ஹஜ் யாத்திரிகர்களின் தங்குமிட கட்டணங்களின் அதிகரிப்பு என்பனவற்றிலிருந்தும் தவிர்ந்து கொள்வதற்காக, இலங்கையின் ஹஜ் ஏற்பாடுகளை காலதாமதமின்றி உடனடியாக ஆரம்பிக்குமாறு ஹஜ் முகவர்கள் சங்கம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் முஹம்மத் பைஸலிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஹஜ் முகவர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.எம். ஹிஸாமின் தலைமையிலான ஹஜ் முகவர்கள் குழு பணிப்பாளரை திணைக்களத்தில் சந்தித்து இவ்வருட ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியது. இக்கலந்துரையாடலின் போதே குறிப்பிட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஹஜ் யாத்திரைக்கு உலகளாவிய ரீதியில் 9 இலட்சம் யாத்திரிகர்களே அனுமதிக்கப்பட்டனர். இவ்வருடம் இவ் எண்ணிக்கை 45 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள் இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் இலங்கையின் ஹஜ் ஏற்பாடுகள் தாமதிக்கப்படக்கூடாது. தாமதமானால் இலங்கை யாத்திரிகர்கள் விமானப் பயணச்சீட்டின் கட்டண உயர்வு சவூதியில் தங்குமிட கட்டண உயர்வுகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவர் பணிப்பாளரிடம் விளக்கினார்.
மேலும் ஹஜ் ஏற்பாடுகள் தாமதமாவதாலும் ஹஜ் முகவர்கள் நியமனம் வழங்கப்படாமையினாலும் இதனை இடைத்தரகர்கள் சாதகமாகப் பயன்படுத்தி மக்களிடம் ஹஜ் யாத்திரைக்கென முற்பணம் பெற்றுக்கொள்வதாக அறிய முடிகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் பணிப்பாளர் பைஸல் பதிலளிக்கையில் “ஏற்கனவே பதவியிலிருந்த அரச ஹஜ்குழுவின் பதவிக்காலம் காலாவதியாகியுள்ளதால் உடனடியாக புதிய ஹஜ் குழுவொன்றினை நியமிக்கும்படி விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரைக் கோரியுள்ளேன். புதிய ஹஜ்குழு ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்படும் என்றார்.- Vidivelli