உள்ளூராட்சி தேர்தல் முடியும்வரை பள்ளி நிர்வாகிகள் தெரிவை தவிர்க்குக
முஸ்லிம் சமய திணைக்கள பணிப்பாளர் வலியுறுத்து
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதிக்கு திட்டமிடப்பட்டுள்ளதால், தேர்தல் முடியும்வரை பள்ளிவாசல்கள், தக்கியாக்கள் மற்றும் ஸாவியாக்களில் நம்பிக்கையாளர் தெரிவுகளை நடாத்துவதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனைத்து பள்ளிவாசல்கள் தக்கியாக்கள் மற்றும் ஸாவியாக்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களை வலியுறுத்தியுள்ளார்.
பணிப்பாளர் பைஸல் இது தொடர்பில் சுற்றுநிருபம் ஒன்றினை அனுப்பி வைத்து இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதால் நம்பிக்கையாளர்களைத் தெரிவு செய்வதற்கான (சாதாரண தெரிவு/ இரசிய வாக்கெடுப்பு) பொதுக் கூட்டங்களை உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் பின்னர் நடாத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் 2023.02.06 ஆம் திகதிய கடிதத்தின் பிரகாரம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எனவே பள்ளிவாசல்கள், தக்கியாக்கள் மற்றும் ஸாவியாக்கள் நம்பிக்கையாளர்கள் தெரிவுகளை நடாத்துவதிலிருந்தும் தவிர்ந்து கொள்வதுடன் உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் நம்பிக்கையாளர் தெரிவுகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றீர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli