உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுகளிலிருந்து ஹஜ்ஜுல் அக்பர் விடுதலையானார்
வெளிநாட்டு பயணத் தடையும் நீக்கப்பட்டது
(எம்.எப். அய்னா)
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய கைது செய்யப்பட்ட ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் பிணையில் இருந்து வந்த நிலையில், அவருக்கு எதிராக வழக்கினை முன் கொண்டு செல்ல போதுமான சான்றுகள் இல்லாமையால், அவருக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எதனையும் எடுப்பதில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம், கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்த நிலையில், விடுதலை செய்வதற்கான உத்தரவை கொழும்பு மேலதிக நீதிவான் ஷெஹான் அமரசிங்க பிறப்பித்தார். அதன்படி, இதுவரை உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் வெளிநாடு செல்ல பிறப்பிக்கப்பட்டிருந்த தடை உத்தரவையினையும் நீக்கி நீதிவான் ஷெஹான் அமரசிங்க உத்தரவிட்டார்.
தனது கைது, தடுத்து வைப்புக்கு எதிராக உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் சார்பில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, அவருக்காக சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் ஆஜராகி விடயங்களை முன் வைத்திருந்தார். இவ்வாறான நிலையில் அம்மனு குறித்து ஆஜராகியிருந்த அரச சட்டவாதி, உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பருக்கு எதிராக வழக்கினை முன் கொண்டு செல்வதில்லை எனவும் அது தொடர்பிலான சட்ட மா அதிபரின் ஆலோசனையை கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே நேற்று நீதிவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, அந்த ஆலோசனைக்கு அமைவாக அவர் விடுதலை செய்யப்பட்டார்.
முன்னதாக கடந்த 2019 ஆகஸ்ட் 25 ஆம் திகதி சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரை கைது செய்திருந்தது. அது 21/4 அன்று கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் மட்டக்களப்பிலும் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை, அடிப்படைவாத குழுக்களுக்கு இலங்கைக்குள் மீள பயங்கரவாதத்தை உருவாக்க, அதனை கட்டியெழுப்ப உதவியமை மற்றும் இனங்களுக்கு இடையே முரண்பாடுகளை தோற்றுவிக்க நடவடிக்கை எடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரிலாகும்.
முதல் தடவை கைது செய்யப்பட்டு சி.சி.டி.யினர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரை விசாரித்த போது, அவ்விசாரணைகளில் திருப்தி இல்லாமல், அவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். அங்கும் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட பின்னரேயே, சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரின் கோரிக்கைக்கு அமையவே அவர் தடுப்புக் காவலில் இருந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தி விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்தே, கடந்த 2021 மே 12 ஆம் திகதி அவர் மீளவும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அது முதல் அவர் கடந்த 2022 ஜனவரி 11 ஆம் திகதி வரை தொடர்ந்து தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். இந் நிலையில் அவருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம், ஐ.சி.சி.பி.ஆர். எனும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
சட்ட மா அதிபரின் இணக்கப்பாட்டுடன், அவருக்கு 2022 ஜனவரி 11 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே பிணையளித்து உத்தரவிட்டிருந்தார்.
சட்ட மா அதிபரின் இணக்கப்பாடு, மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தரவின் கையெழுத்துடன் கிடைக்கப் பெற்றிருந்த நிலையில், 300 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் விடுவிக்கப்பட்டார். அத்துடன் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்திருந்த நீதிவான், வெளிநாடு செல்வதையும் தடுத்து கடவுச் சீட்டையும் முடக்கி உத்தரவிட்டிருந்தார்.
இந் நிலையிலேயே அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தரவின் கையெழுத்துடன் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றுக்கு தனது நிலைப்பாட்டை அனுப்பியுள்ள சட்ட மா அதிபர் திணைக்களம், குறித்த வழக்கிலிருந்து உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரை விடுதலை செய்வதாகவும், அவருக்கு எதிராக வழக்கினை முன் கொண்டு செல்வதில்லை எனவும் அறிவித்துள்ளது. இதனையடுத்தே அவர் விடுதலை செய்யப்பட்டார்.- Vidivelli