துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த திங்கட் கிழமை ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சி அந்நாடுகளின் மக்களை மாத்திரமன்றி முழு உலக மக்களையுமே பாரிய சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இதுவரை 12 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
பூமியதிர்ச்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கிடைக்கும் செய்திகள், புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் மனதை உலுக்குவதாக உள்ளன. ஏலவே பொருளாதார நெருக்கடி, போர், அடிப்படை வசதிகளின்மை மற்றும் கடும் குளிரான கால நிலை போன்ற காரணிகளால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இப் பூகம்பம் பேரிடியாய் வந்திறங்கியிருக்கிறது. அம்மக்கள் படும் அவஸ்தைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்குமான ஏற்பாடுகளை துருக்கிய அரசாங்கம் அந்நாட்டின் அதிபர் ரஜப் தையிப் அர்துகான் தலைமையில் முன்னெடுத்து வருகிறது. இதற்கென 5.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை அவர் ஒதுக்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்த அவர் மக்கள் மத்தியில் உரையாற்றினார். இது அல்லாஹ்வின் ஏற்பாடு என்றும் அதனைப் பொருந்திக் கொண்டு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றும் அவர் மக்களை நம்பிக்கையூட்டினார்.
“இது அல்லாஹ்வின் ஏற்பாடு, அவன் நாடியதை நிறைவேற்றுவான். நாம் இழந்தவர்களை ஒரு பொழுதும் மீட்டெடுக்க முடியாது. எனினும் வீடுகளை இழந்தவர்கள் சஞ்சலப்படாதீர்கள். உங்கள் வீடுகளை நிர்மாணிக்க ஒரு லீரா (துருக்கி நாணயம்) கூட நீங்கள் செலவழிக்க வேண்டியதில்லை. நீங்கள் இழந்ததைவிட சிறந்த வீடுகளை நாங்களே கட்டித் தருகிறோம். ஒரு மரத்தைக்கூட இழந்திருந்தால் ஒன்றுக்குப் பத்து மரங்களைத் தருகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பூமியதிர்ச்சியினால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு சர்வதேச நாடுகள் உதவ முன்வந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பனவும் பாரியளவிலான உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய துருக்கியில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் சிக்கியவர்களை மீட்பதற்கான உதவியை வழங்க இலங்கை முன்வந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். துருக்கியின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரை தொடர்பு கொண்டு இது தொடர்பில் உரையாடியுள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
துருக்கி கடந்த காலங்களில் இலங்கைக்கு பாரிய உதவிகளை வழங்கிய நாடாகும். குறிப்பாக முஸ்லிம் உலகில் எந்தவொரு நாடு பாதிக்கப்பட்டாலும் அம் மக்களுக்க உதவுவதில் துருக்கி முந்திக் கொண்டு செயற்படுவதும் கண்கூடாகும். மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டபோது அதற்காக குரல் எழுப்பிய, நிவாரண உதவிகளை வழங்கிய, நேரில் சென்று அம் மக்களுக்கு உதவிய நாடாக துருக்கியும் அதன் அதிபர் அர்துகானும் விளங்குவதை இந்த இடத்தில் நினைவூட்டுவது பொருத்தமாகும். அந்தவகையில் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கும் அதன் அயல் நாடான சிரியாவுக்கும் உதவ முழு உலகமும் முன்வர வேண்டும்.
அரசாங்கத்தின் உதவிகள் ஒருபுறமிருக்க, துருக்கி மற்றும் சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடியுமான உதவிகளை வழங்குவதற்கு நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டுள்ளோம். ஆந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்பொருட்டு நாடளாவிய ரீதியிலான நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து நாட்டிலுள்ள நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்சில் போன்ற அமைப்புகள் இணைந்து நாடளாவிய ரீதியில் உள்ள பள்ளிவாசல்கள் ஊடாக இந்த நிதி சேகரிப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். சில வருடங்களுக்கு முன்னர் நேபாளத்தில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதிஉதவிகளை உலமா சபை வழங்கியது நினைவிருக்கலாம். அதேபோன்று துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கும் இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் உதவிக் கரம் நீட்ட நாம் முன்வர வேண்டும்.
இலங்கையும் பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இங்குள்ள ஒவ்வொரு பிரஜையும் தனது அன்றாட வாழ்வைக் கொண்டு செல்வதில் பொருளாதார ரீதியாக பலத்த சவால்களை எதிர்கொள்வதை நாம் அறிவோம். எனினும் ஒரு நொடிப் பொழுதில் அனைத்தையும் இழந்து நிற்கும் துருக்கி, சிரியா மக்களை விட நாம் எவ்வளவோ சிறப்பான, நிம்மதியான வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறோம். அந்த வகையில் அம் மக்களை நினைவில் கொண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை நம்மிடம் இருப்பவற்றில் இருந்து வழங்குவோம். இப் பணியில் பள்ளிவாசல் நிர்வாகங்கள், இஸ்லாமிய அமைப்புகள், சிவில் நிறுவனங்கள், விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் அமைப்புகள், மகளிர் அமைப்புகள் என சகலரும் ஒன்றுபட்டுப் பணியாற்றுமாறு அழைப்பு விடுக்கிறோம்.
அதேபோன்றுதான் கட்டிட இடிபாடுகளுக்குள் இன்னமும் சிக்குண்ட மக்களை பாதுகாப்பாக மீட்பதற்கும் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் உயிரிழந்த மக்களுக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனபதி கிடைக்கவம் ஐவேளை தொழுகையில் பிரார்த்திப்போம். எல்லாம் வல்ல அல்லாஹ் அம்மக்களின் கஷ்டங்களை இலகுபடுத்துவானாக. இவ்வாறான அனர்த்தங்களிலிருந்து அனைவரையும் பாதுகாப்பானாக.- Vidivelli