ஏ.ஆர்.ஏ. பரீல்
• கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் சுமார் 4 வயது மதிக்கத்தக்க அந்த சிறுவன் தனது கண்களை மெல்லத் திறந்து பார்க்கிறான். மீட்புப் பணியாளர்கள் அவனுக்கு தண்ணீர் போத்தல் மூடியில் நிரப்பி சொட்டுச் சொட்டாக நீரைப் பருக்குகிறார்கள். “மகனே கண்ணைத் திறந்து பாருங்கள்…. எங்களைத் தெரிகிறதா?” என்ற கேள்விகளுக்கு அவன் ‘ஆம்’ என பதிலளிக்கிறான்….
• கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவாறே குழந்தையைப் பிரசவித்த தாயின் அலறலைக் கேட்ட மீட்புப் பணியாளர்கள் உடனடியாக அந்த இடத்திலிருந்த கற்களை அகற்றி குழந்தையை முதலில் மீட்டெடுத்து அம்பியூலன்ஸ் வண்டியில் ஏற்றுகிறார்கள். ஆனால் தமது குழந்தையைக் காண தாயும் தந்தையும் உயிருடன் இல்லை….
• 15 வயதான தனது மகளின் சடலம் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கிறது. அவளது வலது கை மட்டுமே வெளியில் தெரிகிறது. அவளது விரல்களை இறுகப் பற்றியவாறே அடிக்கும் குளிரையும் பொருட்படுத்தாது மீட்புப் பணியாளர்கள் வரும் வரை காத்திருக்கிறார் அவளது தந்தை…
• அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். அவரும் அவரது மனைவி, மகள், சகோதரி, பேரப் பிள்ளை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்துவிட்டார்கள்….
• ஏழு மாடிக் கட்டிடம் ஒன்று முற்றாக இடிந்து வீழ்ந்த நிலையில், அதன் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த முழுக் குடும்பத்தையும் உயிருடன் மீட்டு வந்து அம்பியூலன்சில் ஏற்றுகிறார்கள் மீட்புப் பணியாளர்கள். முழுக் கிராமமுமே கூடி நின்று அல்லாஹு அக்பர் எனக் கோஷமெழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்….
இவை துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த திங்கட் கிழமை ஏற்பட்ட பாரிய பூமி அதிர்ச்சியின் பின்னரான காட்சிகள்.
நாட்டின் தென் பகுதிகளை முற்றாக அழித்த பாரிய நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்களை மீட்பதற்கான தேடுதல் தொடர்ந்துவரும் நிலையில், துருக்கி மக்கள் அனைவரும் அதிசயங்கள் நிகழ வேண்டும், இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் ஆயிரக் கணக்கானோர் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தித்து வருகிறார்கள். ஆனால் அப் பகுதியில் தொடரும் கடும் மழை மற்றும் பனிப்பொழிவு என்பன மீட்புப் பணிக்கு பாரிய தடையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துருக்கியின் தென் பகுதி மற்றும் அதனோடிணைந்த சிரியாவின் எல்லைப் பகுதியில் கடந்த திங்கட் கிழமை அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட 7.8 ரிச்ட்ர் பூமி அதிர்ச்சி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட 7.6 ரிச்டர் அளவிலான மற்றொரு அதிர்ச்சி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை வரை 11200 ஆக அதிகரித்துள்ளது. எனினும் உயிரிழப்புகள் 20 ஆயிரத்தை தாண்டலாம் என எதிர்வு கூறப்படுகிறது.
துருக்கியில் 8,574 பேரும் சிரியாவில் குறைந்தது 2,530 பேரும் நிலநடுக்கத்தால் உயிரிழந்ததாக அல் ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது. துருக்கியில் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் சிரியாவில் 3500 க்கும் அதிகமானோரும் காயமடைந்துள்ளனர். இரு நாடுகளிலும் ஆயிரக் கணக்கான கட்டிடங்கள் முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளன.
சிரியாவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்ட பகுதியில் ஏற்கனவே போர் இடம்பெற்று வருகிறது. அங்கு இலட்சக்கணக்கான மக்கள் அகதி முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் நிலநடுக்கத்திற்கு முன்பிருந்தே, உறைய வைக்கும் குளிர், கொலரா தொற்று நோய், மோசமான உட்கட்டமைப்பு ஆகியவற்றால் அம் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலநடுக்கம் அவர்களை மேலும் எதிர்கொள்ள முடியாத சவால்களுக்குள் தள்ளியுள்ளது.
கடும் குளிர், மழை, அத்தோடு மின்சாரமோ, எரிபொருளோ இல்லாத நிலை காரணமாக மீட்புப்பணிகள் தாமதமடைந்துள்ளதாக களத்திலிருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இரவு நேரங்களில் மீட்புப்பணிகள் தாமதமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிர் பிழைத்துள்ள மக்கள் இடிந்து வீழ்ந்துள்ள கட்டிடங்களின் இடிபாடுகளை இயலுமானவரை அகற்றி சிக்கியுள்ள உறவினர்களையும், அயலவர்களையும் தேடிக்கொண்டிருக்கும் பரிதாப நிலையினை காணக்கூடியதாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிராந்தியங்களிலுள்ள மக்களில் பலர் தங்குவதற்கு இடமின்றி வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ள தமது கார்களில் இரவுப் பொழுதினைக் கழித்து வருகின்றனர்.
இப்பூமியதிர்ச்சியினால் துருக்கியிலும், சிரியாவிலும் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதுடன், குடியிருப்புக் கட்டிடங்கள், மருத்துவமனைகள், அரச நிறுவனங்கள் தரைமட்டமாகியதனால் மக்கள் தங்குவதற்கு இடமின்றி நிர்க்கதியாகியுள்ளனர்.
மீட்பு நடவடிக்கைகளில் 24,400 மீட்புப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான், ஈராக், அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, கிரேக்கம் உட்பட பல நாடுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சர்வதேச உதவிகளை அனுப்ப முன்வந்துள்ளன. மேலும் ஐக்கிய நாடுகள் சபையும், ஐரோப்பிய ஒன்றியமும் உதவிகளை வழங்குவதில் விரைந்து செயற்படுகின்றன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் அடுத்த மூன்று மாதங்களுக்கு அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக துருக்கி அதிபர் ரஜப் தையிப் அர்துகான் தெரிவித்துள்ளார். துருக்கியின் வரலாற்றில் சுமார் 80 வருடங்களுக்குப் பிறகு இவ்வாறாதொரு பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று விஜயம் செய்த அர்துகான் மீட்புப் பணிகளை பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
உலகத்தில் நிலநடுக்கம் அதிகமாக ஏற்படும் நாடுகளுள் ஒன்று துருக்கி. அந்நாட்டின் வட-மேற்குப் பகுதியில் 1999 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அதேபோன்று, கிழக்கு மாகாணமான எர்ஸின்கன் பகுதியில் 1939ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 33,000 பேர் கொல்லப்பட்டனர். தற்போது ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சைப்ரஸ், லெபனான் மற்றும் இஸ்ரேல் வரை உணரும் வகையில் மிக மோசமானது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
துருக்கி ஒரு வார காலத்திற்கு தேசிய துக்கத்தை பிரகடனப்படுத்தியுள்ளதுடன் 5.3 பில்லியன் டொலர் நிதியை அவசர உதவிகளுக்காக ஒதுக்கீடு செய்துள்ளது. அதே நேரத்தில் துருக்கி எயார்லைன்ஸ் 11,000 க்கும் மேற்பட்ட தொண்டுப் பணியாளர்களை நிலநடுக்கம் ஏற்பட்ட பிராந்தியத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. அத்துடன் 70க்கும் மேற்பட்ட நாடுகள் இதுவரை மீட்புப் பணியாளர்களையும் நிவாரண உதவிகளையும் அனுப்ப முன்வந்துள்ளன.
பூமியின் மேலடுக்கானது, தட்டுகள் எனப்படும் தனித்தனி பாகங்களாக உள்ளன. ஒவ்வொன்றும் மற்றொன்றை நெருக்கியபடி அமைந்திருக்கின்றன. இந்த அமைப்பு அவ்வப்போது நகருவதற்கு முயற்சி செய்கிறது. ஒரு தட்டு நகர முயற்சிக்கும்போது மற்றொரு தட்டு அதைத் தடுக்கிறது. இதனால் உராய்வு ஏற்படுகிறது. சில நேரங்களில் ஒன்று மற்றொன்றின் மீது மோதி மேற்பரப்பில் அதிர்வை ஏற்படுத்துகிறது. இதைத்தான் ஆய்வாளர்கள் நிலநடுக்கம் என்கிறார்கள்.
தற்போது துருக்கியில் ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கம் அரேபியன் தட்டும் அனத்தோலிய தட்டும் உரசியதால் ஏற்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.