எம்.எஸ்.எம்.நூர்தீன்
பொலிசாரினால் கையகப்படுத்தப்பட்டிருந்த காத்தான்குடி தாருல் அதர் பள்ளிவாசலை விடுவிக்குமாறு கோரி கடந்த திங்கட்கிழமை (6) காத்தான்குடியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடாத்தப்பட்டது.
இந்த ஹர்த்தால் காரணமாக வர்த்தக ஸ்தாபனங்கள் பொதுச் சந்தைகள் என்பன மூடப்பட்டதுடன் இயல்பு நிலை முற்றாக ஸ்தம்பிதமடைந்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து தாருல் அதர் அமைப்பு பாதுகாப்பு அமைச்சினால் தடை செய்யப்பட்டதுடன் அவ்வமைப்பினால் நிர்வகிக்கப்பட்டு வந்த இப் பள்ளிவாசலும் மூடப்பட்டது. புதிய காத்தான்குடி கப்பல் ஆலீம் வீதியிலுள்ள இப் பள்ளிவாசலை பாதுகாப்பு அமைச்சு பொறுப்பேற்றிருந்தது. இந்த நிலையில் இந்த பள்ளிவாசலை பொலிசார் கையகப்படுத்தி அதில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் கிழக்க மாகாண அலுவலகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். எனினும் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் அமைந்துள்ள இப் பள்ளிவாசலில் பொலிஸ் பிரிவொன்றை அமைப்பது உகந்ததல்ல என்றும் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ள இப் பள்ளிவாசலை பிரதேச மக்களின் பாவனைக்காக வழங்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தது.
இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டிருந்தது.
இந் நிலையில் இந்த பள்ளிவாசலை விடுவித்து பொது மக்கள் தொழுவதற்கும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் இடமளிக்குமாறு கோரியே இந்த ஹர்த்தால் இடம் பெற்றது.
இதன் போது குறித்த தாருள் அதர் பள்ளிவாசலுக்கு முன்பாக அப்பகுதி பொது மக்கள், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஆர்ப்பாட்டமொன்றும் திங்கட்கிழமை காலை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அல்லாஹ்வை சுஜுது செய்த பள்ளிவாசலை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் பொலிசார் மீது பொது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதை சீரழிக்க வேண்டாம், இறைவனின் இல்லத்தை இல்லாமல் ஆக்காதே, பொலிஸ் திணைக்களமே பள்ளிவாசல் புனிதத்தில் கறையை பூசும் வரலாற்றை செய்யாதே என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்கள் தொங்க விடப்பட்டிருந்தன.
இந்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவித்த காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பொதுச் செயலாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் நளீமி, இப்பள்ளிவாசல் பொது மக்களின் நிதிப்பங்களிப்பில் கட்டப்பட்ட ஒரு பள்ளிவாசலாகும். இந்தப்பள்ளிவாசல் வக்பு சபையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பள்ளிவாசலாகும். இந்தப் பள்ளிவாசலை பொலிசார் கையகப்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை.
இதனை விடுவித்து பொது மக்கள் தொழுவதற்கும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவித்தார்.
இதன்போது அங்கு வருகை தந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி இந்தப் பள்ளிவாசலை பொலிசார் கையேற்கமாட்டார்கள் என உறுதிமொழி வழங்கியதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.
இதேவேளை இப் பள்ளிவாசலை சட்டரீதியாக விடுவிப்பதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli