இஸ்லாமிய இயக்கங்களுக்கிடையிலான முரண்பாடுகளை பேசித் தீர்க்கலாம்
முஸ்லிம் சமய திணைக்கள பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல்
நேர்காணல்: ஏ.ஆர்.ஏ.பரீல்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள செய்னுல் ஆப்தீன் முஹம்மத் பைஸல் மாவனெல்லை –அரநாயக்க தல்கஸ்பிட்டியவைச் சேர்ந்தவர்.
இவர் ஓய்வு பெற்ற அதிபர் மர்ஹூம் எம்.யு. இஸட் ஆப்தீன், ஆசிரியை மர்ஹூம் நபீஸா தம்பதியினரின் புதல்வராவார்.
ஆரம்பக் கல்வியை ஹெம்மாத்தகம அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் பெற்ற இவர் க.பொ.த சாதாரண கல்வியை திப்பிட்டிய முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் க.பொ.த உயர்தர கல்வியை மாவனெல்லை ஸாஹிரா கல்லூரியிலும் கற்றார். பேராதனை பல்கலைக்கழகத்தின் உயிரியல் பீட பட்டதாரியுமாவார்.
ஆரம்பத்தில் 4 வருட காலம் ஆசிரியர் சேவையில் இருந்த இவர் 2003 இல் இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி அதில் சித்தியடைந்து நிர்வாக சேவை அதிகாரியாக நியமனம் பெற்றார்.
பாதுகாப்பு அமைச்சின் பொலிஸ் பிரிவின் உதவிச் செயலாளர், ருவன் வெல்ல உதவி பிரதேச செயலாளர், கலிகமுவ உதவி பிரதேச செயலாளர் மற்றும் கொழும்பு கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் உதவியாணையாளராகவும் அபிவிருத்தி பிரிவில் இரண்டு வருடங்கள் ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
குறிப்பாக மாவனெல்லை அரநாயக்க பிரதேச செயலாளராக கடந்த 7 வருடங்களும் 4 மாதங்களும் பணியாற்றியுள்ளார். 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவர் அரநாயக்க பிரதேச செயலாளராக நியமனம் பெற்றார். இப்பகுதியில் வாழ்ந்த மக்களில் 92 வீதமானோர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாவர். சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முஸ்லிமான இவர் நியமிக்கப்பட்டதற்கு அப்பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இன மதத்தலைவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். என்றாலும் பைஸல் சவாலை ஏற்று பதவியில் அமர்ந்தார்.
இவர் பதவியேற்று சில மாதங்களில் 2016 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி இவரது அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசமான சாமசார கந்த எனுமிடத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது. தொடராகப் பெய்தமழை காரணமாகவே இந்த மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் 586 குடும்பங்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருந்தன.
பிரதேச செயலாளர் பைஸல் உடனடியாக செயலில் இறங்கினார். அரச சார்பற்ற நிறுவனங்களதும் அரசாங்கத்தினதும் உதவிகளைக் கோரினார். குறிப்பிட்ட 586 குடும்பங்களையும் பாதுகாப்பற்ற இடத்திலிருந்தும் இடம்மாற்றினார். அக்குடும்பங்களுக்கு அரநாயக்கவில் புதிதாக வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்டன.
பிரதேச செயலாளர் பைஸலின் இந்தப்பாரிய சேவை மூலம் அவர் மிகவும் பிரபலமானார். அவர் அரநாயக்க பிரதேச செயலாளராக நியமனம் பெற்று வந்தபோது ஆரம்பத்தில் எதிர்ப்பு வெளியிட்ட பெரும்பான்மை மக்களும், பெரும்பான்மை மதத்தலைவர்களும் பின்னர் அவரை பாராட்டினார்கள். அவருக்கு மரியாைத செலுத்தினார்கள்.
இவர் அரநாயக்காவிலிருந்தும் இடமாற்றம் பெற்றுச் செல்ல மூன்று தடவைகள் முயற்சித்த போதும் இதே மக்கள், இதே பெரும்பான்மை மதத்தலைவர்கள் அதற்கு இடமளிக்கவில்லை.அவரது இடமாற்றத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
‘‘அரச சேவையில் உள்ளவர்கள் தமது சேவையினை இன ரீதியில்அல்லாது பொதுவாக அனைவருக்கும் சமமாக மேற்கொள்ளவேண்டும். அரநாயக்க பிரதேச செயலாளர் இதற்கு சிறந்ததோர் உதாரணமாகும்’’ என பெளத்த மதத்தலைவர் ஒருவர் கருத்து வெளியிட்டிருந்தமையை இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். பெளத்த மதத்தலைவர் ஒருவர் இதற்கென அவருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கெளரவித்தமையும் விசேட அம்சமாகும்.
இவர் பிரதேச செயலாளராக பதவி வகித்த அரநாயக்க நிர்வாக எல்லைக்குள் சுமார் 8000 மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 92 வீதமானோர் பெரும்பான்மை இனத்தவராவர். இங்கு 6 வீதம் முஸ்லிம்களும், 2 வீதம் தமிழ் மக்களும் வாழ்கிறார்கள். அனைவரையும் சமமாக மதித்து தனது கடமையினை 7 வருடங்களுக்கும் மேலாக முன்னெடுத்தவரே தற்போதைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் முஹம்மத் பைஸல்.
முஸ்லிம் சமய திணைக்கள பணிப்பாளர் பதவி மூலம் அவர் முன்னெடுக்கவுள்ள பணிகள் தொடர்பில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.
Q. புதிதாக பதவியேற்றுள்ள உங்களின் இலக்கு என்ன?
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பணிப்பாளர் பதவி சவாலானது. அனைவரையும் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து கடமைகளைச் செய்யவேண்டும். சமூகத்தில் கொள்கை ரீதியில் வேறுபட்ட பல இயக்கங்கள் இருக்கின்றன. வேறுபாடுகளை மறந்து நாம் ஒன்றிணைய வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகங்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இயங்கவேண்டும். நாமனைவரும் ஒன்று சேர்வதன் மூலமே வெற்றி பெறலாம். வெற்றியை நிலை நிறுத்துவதே எனது இலக்கு.
Q. உங்கள் இலக்கினை எய்த முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?
நிச்சயமாக. சமூகத்தின் பிரச்சினைகளை, பள்ளிவாசல்கள் உட்பட ஏனைய சமய நிறுவனங்களின் பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும். எனக்கு நிர்வாக சேவையில் 19 வருட அனுபவம் இருக்கிறது. உளத்தூய்மையுடன் பணியாற்றுவதன் மூலமும் அலுவலர்களை ஒன்றிணைத்து பணியாற்றுவதன் மூலமும் இலக்கை எய்தலாம். இதற்கு அல்லாஹ்வின் உதவி நிச்சயம் கிடைக்கும்.
Q. கடமையை பொறுப்பேற்பதற்கு முன்பு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவைச் சந்தித்தீர்கள். அவருடனான பேச்சு வார்த்தை எவ்வாறு அமைந்திருந்தது.
அமைச்சருடனான கலந்துரையாடல் சுமூகமாக இருந்தது. முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு இயன்ற வரையில் தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் என்னிடம் கூறினார். பிரச்சினைகளை காலம் தாழ்த்தாது உடனுக்குடன் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அத்தோடு பிரச்சினைகள் தொடர்பிலும் வினவினார். முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதில் அமைச்சர் ஆர்வமாக இருக்கிறார்.
Q. கொள்கை வேறுபாடுகளைக் கொண்டுள்ள இஸ்லாமிய இயக்கங்களுக்கிடையே ஒற்றுமையை எவ்வாறு வளர்க்கப் போகிறீர்கள்?
அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் ஒரே மேசையில் கலந்துரையாடுவதற்குத் திட்டமிட்டுள்ளேன். கலந்துரையாடல் மூலம் இணக்கப்பாடு எட்டக்கூடிய விடயங்களில் நாம் ஒன்றிணைய முடியும் எனக் கருதுகிறேன்.
Q. சமூகத்தில் சிவில் சமூக அமைப்புகள் தொடர்பில் உங்கள் நோக்கு என்ன?
சமூகத்தில் எண்ணற்ற சிவில் சமூக அமைப்புக்கள் இருக்கின்றன. அந்த அமைப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடுவதுடன் அவற்றின் செயற்பாடுகள் சமூகத்தை நேர்வழிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்பதை எடுத்துரைக்கவுள்ளேன்.
Q. சில பள்ளிவாசல்களில் நிர்வாகப்பிரச்சினைகள் உட்பட பல்வேறு தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் உள்ளன? இவற்றை தீர்த்து வைப்பதற்கு திட்டங்கள் ஏதும் உள்ளனவா?
ஆம், முக்கியமான பிரச்சினைகள் நிலவும், உடனடியாகத் தீர்த்து வைக்க வேண்டிய பிரச்சினைகளுக்குள்ளாகியுள்ள பள்ளிவாசல்களுக்கு நேரடி விஜயம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன். பள்ளிவாசல் நிர்வாகங்களுடன் கலந்துரையாடி சுமுகமான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கவுள்ளேன். வக்பு சபையின் ஒத்துழைப்பு இதற்காக பெற்றுக்கொள்ளப்படும்.
Q. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள நிர்வாக கட்டமைப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமா?
திணைக்களத்தினுள் பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. இப்பிரிவுகளில் குறிப்பாக ஹஜ் பிரிவு மற்றும் வக்பு பிரிவு என்பனவற்றை வினைத்திறன் மிக்கவைகளாக மாற்றியமைப்பதற்கு திட்டமிட்டுள்ளேன். அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்பு இதற்காகப் பெற்றுக்கொள்ளப்படும்.
Q. இவ்வருட ஹஜ் ஏற்பாடுகள் எந்த நிலையில் உள்ளது?
இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு புதிதாக அரச ஹஜ் குழுவொன்றினை விரைவில் நியமிக்குமாறு அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவைக் கோரியிருக்கிறேன். ஹஜ் குழுவே ஹஜ் ஏற்பாடுகளை திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுக்க வேண்டும். இவ்வருட ஹஜ் முகவர்கள் நியமனம் தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை. புதிதாக ஹஜ் குழு நியமிக்கபட்டதன் பின்பே தீர்மானம் மேற்கொள்ளப்படும்.
அதேவேளை வக்பு சபையின் பதவிக்காலமும் காலாவதியாகியுள்ளது. புதிய வக்பு சபையொன்றினை நியமிப்பதற்கு அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.
Q. நீங்கள் கடந்த வியாழக்கிழமை அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாசபையின் நிர்வாகக் குழுவினைச் சந்தித்து கலந்துரையாடினீர்கள்? என்ன விடயங்கள் அங்கு பேசப்பட்டன.
அன்றைய தினம் உலமா சபையின் மாதாந்த நிர்வாக சபைக்கூட்டங்கள் நடைபெற்றது. அச்சந்தர்ப்பத்தில் அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினேன். ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள அரபு மத்ரஸாக்களின் பாடத்திட்டம் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
Q. முஸ்லிம் சமூகத்துக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
முஸ்லிம் சமூகத்துக்கென்று இருக்கும் ஒரே ஒரு திணைக்களம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமாகும். முஸ்லிம்கள் இத்திணைக்களத்தினூடாக தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். திணைக்களத்தின் பணிப்பாளர் என்ற வகையில் அதற்கு நான் தயாராக இருக்கின்றேன். திணைக்களத்தில் தவறுகள், பிழைகள் ஏதுமிருப்பின் தயங்காமல் சுட்டிக்காட்டலாம். தவறுகளை எம்மால் திருத்திக்கொள்ள முடியும்.
திணைக்களத்தின் துரித செயற்பாடுகளுக்கு சமூகம் ஒத்துழைக்க வேண்டும். பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதே சிறந்த வழியென நான் கருதுகிறேன் என்றார்.- Vidivelli