- ஆர்.யசி
- எம்.ஆர்.எம்.வசீம்
பாராளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்தார். எனினும், எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக் ஷ நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவராக நீடிக்க அனுமதிக்கப்பட வேண்டுமெனவும் அது தொடர்பில் ஆராய தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமெனவும் சபையில் நேற்று ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கோரிக்கைக்கு வெள்ளிக்கிழமை தனது தீர்மானத்தை அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பதிலளித்தார்.
பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதற்கு முன்னர் கட்சித் தலைவர் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது, இதன்போது முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் யோசனை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து பாராளுமன்ற அமர்வுகள் கூடிய வேளையில் சபாநாயகர் விடுத்த அறிவிப்பிலேயே மஹிந்த ராஜபக் ஷவை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதாக குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பிரதாயங்களுக்கு அமைவாக எதிர்க்கட்சித் தலைவராக எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சிகளுக்கிடையே அதிகப்படியான உறுப்பினர்களை கொண்ட கட்சியினதோ அல்லது சுயாதீன குழுவினதோ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவரையே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் அதிகப்படியான எம்.பி.க்களை கொண்ட கட்சி என்பதனால் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவரை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளவதற்கு நான் இணங்குகின்றேன். இதற்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக் ஷவை எதிர்க்கட்சித் தலைவராகவும் எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவாக மஹிந்த அமரவீரவையும் ஏற்றுக்கொள்கின்றேன்.
அத்துடன் பாராளுமன்ற சபை முதல்வராக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக் ஷ்மன் கிரியெல்லவும் ஆளும்கட்சி பிரதம கொரடாவாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் கயந்த கருணாதிலகவையும் நியமிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் அறிவித்தல் விடுத்தார்.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக் ஷ செயற்பட முடியாது எனக் குறிப்பிட்டதுடன், பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படாத கட்சியின் உறுப்பினர்களாக இவர்கள் உள்ள நிலையில் அவர்களை ஏற்றுகொள்ள முடியாது. எனவே இதனை ஆராய தெரிவுக்குழு அமைத்து தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். இதனையடுத்து கருத்து தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, இந்தக் குழப்ப நிலைமை தொடர்பிலான தனது தீர்மானத்தை வெள்ளிக்கிழமை அறிவிப்பதாக சபையில் தெரிவித்தார்.