தற்கொலையில் முடிந்த தற்கொலைப் பயணம்!
பொருளாதார நெருக்கடியால் உயிரைப் பணயம் வைத்து நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்கள்
எம்.பி.எம். பைறூஸ்
“அப்பாச்சி… கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்கள்… எல்லாப் பொறுப்புகளையும் என்னிடம் தந்துவிட்டுப் போய்விட்டீர்களே? நான் என்ன செய்வேன்? பிள்ளைகளை எப்படி வளர்ப்பேன்?”
வியட்நாமிலுள்ள முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கிரதரனின் மனைவி வேனுஜாவின் கதறலே இது.
நான்கு பிள்ளைகளின் தந்தையான கிரிதரனுக்கு மரணிக்கும் போது வயது 37. கனடா சென்று குடியேறும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பயணித்த 303 இலங்கையர்கள் கடந்த வருடம் நவம்பர் 6 ஆம் திகதி வியட்நாமின் தெற்கு கரையில் வுங் டௌவிலிருந்து சுமார் 250 கடல் மைல் தொலைவில் மீட்கப்பட்டனர்.
லேடி 3 என்று பெயரிடப்பட்ட இப் படகின் இயந்திர அறையினுள் நீர் புகுந்ததன் காரணமாக படகு மூழ்கத் தொடங்கியதைடுத்து, அதிலிருந்தவர்கள் உதவி கோரி இலங்கை கடற்படையைத் தொடர்புகொண்டனர். இலங்கை கடற்படை அவ்வழியால் சென்ற கப்பல்களுக்கு தகவல் சமிக்ஞை அனுப்பியதையடுத்து ‘ஹீலியோஸ் லீடர்’ என்ற ஜப்பானிய வணிகக் கப்பல் மூலம் மீட்கப்பட்டு வியட்நாம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட 303 பேரும் வியட்நாமிலுள்ள மூன்று இராணுவ முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவர்களில் ஒருவரான கிரிதரன் தற்கொலை செய்து கொண்டார்.
வியட்நாமிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் சர்வதேச புலம்பெயர் நிறுவனம் என்பன இணைந்து குறித்த அகதிகளை இலங்கைக்கு மீண்டும் நாடு கடத்த முயற்சிகளை மேற்கொண்டன. எனினும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அகதிகளில் ஒரு குழுவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டிய இருவர் தற்கொலை செய்து கொள்ளவும் முற்பட்டனர். இவ்வாறு தற்கொலைக்கு முயன்றவர்களில் கிரிதரனும் ஒருவர். நவம்பர் 18 ஆம் திகதி நச்சுப் பதார்த்தம் ஒன்றை அருந்தியதன் காரணமாக இவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழிந்தார்.
இந் நிலையில் பல்வேறு முயற்சிகளின் பின்னர் கிரிதரனின் சடலம் அவர் மரணித்து சரியாக ஒரு மாதத்தின் பின்பு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு யாழ்ப்பாணத்திலுள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது இறுதிக் கிரியைகள் டிசம்பர் 19 ஆம் திகதி சாவகச்சேரியில் இடம்பெற்றன.
ஏன் இந்த தற்கொலைப் பயணம்?
இலங்கையைப் பொறுத்தவரை யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இவ்வாறு ஆயிரக் கணக்கான மக்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுவது வழக்கமாகவிருந்தது. எனினும் யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் கணிசமானளவு குறைவடைந்திருந்தன.
ஆனால் மீண்டும் 2022 மே மாதம் முதல் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை இலங்கை கடற்படையின் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
2020 ஆம் ஆண்டில் 24 பேரும் 2021 ஆம் ஆண்டில் 127 பேரும் மாத்திரமே இவ்வாறு நாட்டை விட்டு கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் வெளியேற முயன்றமைக்காக கைது செய்யப்பட்டிருந்தனர். எனினும் 2022 ஆம் ஆண்டில் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முயன்ற குற்றச்சாட்டில் கைதானவர்களின் எண்ணிக்கை 1532 ஆக அதிகரித்துள்ளது. இது முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 12 மடங்கு அதிகமாகும்.
இவற்றில் அதிகமானோர் மன்னார் கரையோரத்திலும் இதற்கு அடுத்ததாக திருகோணமலை மற்றும் கொழும்பு கரையோரங்களிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனைய சம்பவங்கள் மட்டக்களப்பு, மொனராகலை, அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் பதிவாகியுள்ளன. இவ்வாறு மொத்தம் 57 சம்பவங்கள் 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் பதிவாகியுள்ளன.
இவ்வாறு வெளியேற முயன்றவர்களில் கணிசமானோர் இளைஞர்கள் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கதாகும். இவர்களில் 964 பேர் 20-39 வயதுக்கிடைப்பட்டவர்களாவர். 277 பேர் 40-50 வயதுக்கிடைப்பட்டவர்கள்.
பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிற்பாடு இலங்கையிலிருந்து கல்வி, தொழில் மற்றும் சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் நோக்கில் வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இலஙடகை தொழில் மற்றும் வெளிநாடு வேலைவாய்ப்பு அமைச்சின் தரவுகளின் படி 2022 ஆம் ஆண்டில் இவ்வாறு 311,269 பேர் முறையான அனுமதி பெற்று வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இதற்கு முன்னதாக 2014 ஆம் ஆண்டு 300,703 பேர் இவ்வாறு ஒரே வருடத்தில் வெளிநாடுகளுக்குச் சென்றமையே அதிக எண்ணிக்கையான தொகையாக பதிவாகியிருந்தது.
இவ்வாறு ஒருபுறம் சட்டரீதியான வழிகளின் ஊடாக நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்க, மற்றொரு சாரார் ஆட்கடத்தல்காரர்களின் வலையமைப்பின் ஊடாக சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்ல முற்படுகின்றனர் என்பதையும் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
யுத்தம் முடிவடைந்த பிற்பாடு இவ்வாறு நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் வெளியேற முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது 2022 ஆம் ஆண்டிலேயே என கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிடுகிறார்.
இதேவேளை 2022 ஆம் ஆண்டில் சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட 42 படகுகளை தாம் கைப்பற்றியதாகவும் இவற்றில் பயணித்த 1532 பேரைக் கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்ததாகவும் கடற்படையினர் பிந்திக் கிடைத்த தரவுகள் கூறுகின்றன.
ஏன் வெளியேறுகின்றனர்?
தனது கணவர் கிரிதரன் இவ்வாறு ஆபத்தானதொரு பயணத்தைத் தேர்ந்தெடுத்தமைக்குக் காரணம் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே என அவரது மனைவி வேனுஜா குறிப்பிடுகிறார். “நாட்டின் பொருளாதார சூழ்நிலையில் நான்கு பிள்ளைகளையும் வளர்க்க வழியில்லை. ஏற்கனவே கடன் பிரச்சினை. இவற்றிலிருந்து மீள வேண்டும் என்றுதான் இந்த ஆபத்தான பயணத்தை தேர்ந்தெடுத்தார். இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. தெரிந்திருந்தால் நான் அனுமதித்திருக்கமாட்டேன்” என அவர் குறிப்பிடுகிறார்.
யாழ்ப்பாணத்தில் வாகனம் திருத்தும் நிலையம் ஒன்றை நடாத்தி வந்த கிரிதரன், கடந்த வருடம் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலப்பகுதியில் தனது தொழிலில் பாரிய நஷ்டத்தைச் சந்தித்தார். இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் வாகன உதிரிப்பாகங்கள் கிடைக்காமையும் அவரது தொழிலில் நெருக்கடி ஏற்பட்டமைக்கு மற்றொரு காரணமாகும். இதனால் பாரிய கடன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட கிரிதரன், சட்டவிரோதமாகவேனும் நாட்டை விட்டு வெளியேறுவதையே தெரிவாகக் கொண்டிருந்தார் என அவரது மனைவி குறிப்பிடுகிறார்.
கிரிதரன் போன்று இப் படகில் பயணித்த மேலும் பல நூற்றுக் கணக்கானோரும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவே இவ்வாறானதொரு ஆபத்தான பயணத்தைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறுகின்றனர்.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, இறக்கக்கண்டியில் வசிக்கும் கிருஷ்ணபவனும் இவ்வாறு கனடா செல்லும் கனவுடன் பயணித்தவர்களுள் ஒருவர். அவர் வியட்நாமில் முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள செய்தியை அறிந்து, அவரது வீடு சென்று குடும்பத்தினருடன் உரையாடினோம்.
“எனது கணவர் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கத்திரிக்காய் ஏற்றுமதி செய்கின்ற தொழிலைச் செய்து வந்தார். எனினும் பொருளாதார நெருக்கடியினால் அவரது தொழிலில் பாரிய நஷ்டம் ஏற்பட்டது. வாகனங்களை குத்தகைக்கு எடுத்திருந்ததால் மாதாந்தம் பெருந்தொகைப் பணத்தை லீசிங் நிறுவனங்களுக்கு கட்ட வேண்டியிருந்தது. இதனால்தான் அவர் நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்தார்”என அவரது மனைவி சத்தியவாணி குறிப்பிடுகிறார். 45 வயதான கிருஷ்ணபவன் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
பயணத்திற்கான செலவுகள் என்ன?
வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்ட 303 பேரும் இலங்கைத் தமிழர்கள். இவர்கள் இலங்கையிலிருந்து நேரடியாகவே கனடாவை நோக்கிப் பயணிக்கவில்லை. மாறாக இலங்கையிலிருந்து மியன்மாருக்கு விமானத்தில் சென்று அங்கு சுமார் 3 மாத காலம் தங்கியிருந்த பின்னரே கனடாவுக்கான தமது பயணத்தை கடல் வழியாக ஆரம்பித்துள்ளனர்.
“ எனது கணவர் கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிருந்து மியன்மாருக்குச் செல்வதாகக் கூறியே சென்றார். அங்கு நல்லதொரு வேலை கிடைத்துள்ளதாக கூறினார். ஆனால் அவர் கனடாவுக்குச் செல்வதற்காகத்தான் மியன்மாருக்குச் செல்கிறார் என்பது எமக்குத் தெரிந்திருக்கவில்லை. இவர்கள் பயணித்த படகு மீட்கப்பட்ட செய்தியை சமூக வலைத்தளங்கள் மூலமாக அறிந்த போதுதான் இவரும் அந்தப் படகில் இருந்தமை எமக்கு தெரியவந்தது” என கிருஷ்ணபவனின் மனைவி மேலும் குறிப்பிடுகிறார்.
இந்தப் பயணத்திற்காக கிருஷ்ணபவன் சுமார் 25 இலட்சம் ரூபாவை இதன் ஏற்பாட்டாளர்களுக்கு செலுத்தியதாகவும் அவர் குறிப்பிடுகிறார். அதேபோன்று கிரிதரனும் 18 இலட்சம் ரூபாவை செலுத்தியதாக அவரது மனைவி குறிப்பிடுகிறார். இப் பயணத்திற்காக ஒருவரிடமிருந்து சுமார் 50 இலட்சம் ரூபாவை அதன் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளதாகவும் அதில் அரைவாசித் தொகையை பயணத்திற்கு முன்பாகவும் மிகுதியை கனடாவைச் சென்றடைந்த பின்னர் வழங்க வேண்டும் எனவும் இவர்களுக்குள் ஒப்பந்தம் இருந்ததாக விடயமறிந்தவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தப் பணக் கொடுக்கல் வாங்கல்கள் வங்கி ஊடாக இடம்பெற்றனவா அல்லது நேரடியாக வழங்கப்பட்டதா என்பதை தாம் விசாரித்து வருவதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர்.
அதேபோன்று அண்மையில் பிரான்ஸ் செல்ல முற்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் தாம் கண்டி மற்றும் கல்பிட்டிய ஆகிய பிரதேசங்களைத் தளமாகக் கொண்டு இயங்கிய கடத்தல்காரர்களுக்கு தலா 4 இலட்சம் ரூபா முதல் 10 இலட்சம் ரூபா வரை வழங்கியதாக கடற்படைக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
ஏன் அவுஸ்திரேலியா மற்றும் கனடாவைத் தெரிவு செய்தனர்?
2022 ஆம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 1532 பேரில் 1189 பேரின் இலக்கு அவுஸ்திரேலியாவாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதாவது 77 வீதமானோர் அவுஸ்திரேலியாவுக்கே செல்ல முயற்சித்துள்ளனர்.
இதனிடையே, சட்டவிரோதமான முறையில் தமது எல்லைக்குள் நுழையும் இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்படுவர் என அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ச்சியாக அறிவித்தல்களை வெளியிட்டு வருகின்றது. இலங்கையிலுள்ள மும்மொழி ஊடகங்களிலும் இத தொடர்பான விளம்பரங்கள் தினமும் வெளியிடப்படுகின்றன.
அதுமாத்திரமன்றி, இவ்வாறு அவுஸ்திரேலியா நோக்கிப் புறப்படுபவர்களை இலங்கை கடற்பரப்பில் வைத்து தடுத்து நிறுத்தும் பொருட்டு அவுஸ்திரேலியா இலங்கை கடற்படைக்கு விசேட படகுகளை வழங்கியுள்ளது.
“அவுஸ்திரேலியாவில் அரசாங்கம் மாறப் போகிறது. குடியேற்றவாசிகள் தொடர்பான அந்நாட்டின் கொள்கையில் மாற்றம் வரப் போகிறது. எனவே அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறுவது இலகுவானது” என ஆட்கடத்தல்காரர்கள் தம்மிடம் கோரியதாக, அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட பூபாலபிள்ளை சசிக்குமார் தெரிவிக்கிறார். எனினும் அவுஸ்திரேலியாவில் புதிதாக ஆட்சியமைத்துள்ள தொழிலாளர் கட்சி, தனத நாட்டின் எல்லைப் பாதுகாப்புக் கொள்கையில் எந்தவித மாற்றங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளது. அத்துடன் சட்டவிரோத குடியேற்றவாசிகள் இலங்கை உள்ளிட்ட உலகின் எந்தவொரு நாட்டிலிருந்தும் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு தமத அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் அந்தேரின அல்பானிஸ் தெரிவிக்கிறார்.
இலங்கையிலிருந்து கனடா 6943 கடல் மைல் தொலைவில் உள்ளது. கடல் வழியாக இவ்வளவு தூரம் பயணிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை அனைவரும் அறிவார்கள். அவ்வாறிருந்தும் கனடாவை தெரிவு செய்தமைக்கான காரணம் என்ன என வியட்நாம் முகாமில் தங்கியிருந்தவாறு ஊடகங்களுக்கு பேட்டியளித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வினோத்திடம் வினவினோம். “கனடா மக்கள் அரசியல் ரீதியாகவும் மனிதாபிமான ரீதியாகவும் நல்ல பண்பாடுடையவர்கள். அவர்கள் எம்மை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறோம். புலம்பெயர் சமூகமும் அங்குள்ளபடியால் எமக்கு அவர்களது ஆதரவும் கிடைக்கும் என நம்பினோம்.” என வினோத் குறிப்பிடுகிறார்.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கனடாவில் அரசியல் புகலிடம் பெற்றுக் கொள்வது இலகுவானது என்றும் அதற்கு அங்கு வாழும் இலங்கைப் புலம்பெயர் தமிழர்கள் உதவுவார்கள் என்றும் இவர்கள் நம்புகின்றனர். இந்த சட்டவிரோத பயணத்தை ஏற்பாடு செய்தவர்கள் கூட கனடாவிலேயே வசிப்பதாகவும் அவர்களே மியன்மாரிலிருந்து படகில் பயணிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு இலங்கையர்கள் அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அரசியல் தஞ்சம் பெறும் நோக்கில் பயணித்தாலும் அந்நாடுகள் கணிசமானோரைத் திருப்பி அனுப்பும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இவ்வாறான அறிவித்தல்களையும் பொருட்படுத்தாது பயணித்து, அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்த பலர் அண்மையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். 2022 மே முதல் ஆகஸ்ட் வரை 183 இலங்கையர்களை இவ்வாறு திருப்பி அனுப்பியுள்ளதாக அவுஸ்திரேலிய எல்லைப்படைகளின் தெற்காசியாவுக்கான பிராந்தியப் பணிப்பாளர் க்ரிஸ் வோடர்ஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட 46 பேர் கொண்ட ஒரு குழுவினர் கடந்த ஜுலை மாதமும் 32 பேர் கொண்ட குழுவினர் கடந்த ஆகஸ்ட் மாதமும் இலங்கையை வந்தடைந்தனர்.
இதனிடையே பிரான்ஸ் அரசாங்கமும் ஒரு தொகுதி இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை அண்மையில் திருப்பி அனுப்பியது. கடந்த ஜனவரி 25 ஆம் திகதி பிரான்சின் ரீயூனியன் தீவிலிருந்து 38 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள் கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் பிரான்ஸினுள் நுழைய முயன்றபோது கடந்த ஜனவரி 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர். அதேபோன்று கடந்த ஜனவரி 13 ஆம் திகதியும் சுமார் 46 பேர் கொண்ட இலங்கையர்கள் பிரான்சிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
இவ்வாறான சட்டவிரோத பயணங்களைத் தடுத்து நிறுத்துவது தொடர்பில் அவுஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் இலங்கையுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றன. இது தொடர்பில் கடந்த வாரம் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்சிஸ் பெக்டட், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை சந்தித்து பேசியிருந்தார். அதேபோன்று இரு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேசிய இலங்கைக்காக இத்தாலிய தூதுவர் ரிடா மன்னெல்லா, சட்டவிரோத ஆட்கடத்தல்களை முறியடிக்கும் வகையில் இலங்கைக்கு உலங்கு வானூர்தி ஒன்றை வழங்கத் தயார் என அறிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே, ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் இவ்வாறான சட்டவிரோத ஆட்கடத்தல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இலங்கையர்களுக்கு பிரான்ஸ் கடந்த வாரம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. வடக்கு பாரிசிலிருந்து சுமார் 80 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள செரிபொன்டைன் எனும் கிராமத்தில் பலசரக்குக் கடை ஒன்றை நடத்தியவாறே இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் வலையமைப்பை தலைமைதாங்கி நடத்திய நபருக்கு ஒரு வருடம் ஒத்தி வைக்கப்பட்ட நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர், ஐரோப்பாவிலுள்ள அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கி, இலங்கை மற்றும் பங்களாதேசைச் சேர்ந்தவர்களை உக்ரைன் பிராந்தியத்தின் ஊடாக சட்டவிரோதமாக அழைத்துவர பணம் அறவிட்டதுடன் அதற்கான வழிகளையும் ஏற்படுத்தியதாக விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவர்களில் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் நபர் ஒருவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும் ஏனையோருக்கு குறுகிய கால சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
சமீப காலத்தில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்களுக்கு ஐரோப்பிய நாடு ஒன்றில் வழங்கப்பட்ட உச்சபட்ச தண்டனையாக இது கருதப்படுகிறது. இத் தீர்ப்பு எதிர்காலத்தில் இவ்வாறான ஆபத்தான பயணத்தை ஏற்பாடு செய்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. – Vidivelli