ஏ.ஆர்.ஏ. பரீல்
நுவரெலியாவில் ஏழு உயிர்களைக் காவுகொண்ட கோர விபத்து இடம்பெற்று இரு வாரங்களாகியும் அந்தச் சோகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் மாறாது தொடர்ந்தும் குடி கொண்டிருக்கிறது. குடும்பத்தவர்கள் ஆறாத் துயரில் ஆழ்ந்திருக்கிறார்கள். அவர்களை ஆற்றுப்படுத்த முடியாதிருக்கிறது.
பிரபலமான நுவரெலியா புலியாவத்தை பேக்கரி உரிமையாளரான சேக் தாவூதின் புதல்வர்கள் அப்துல் ரஹீம் மற்றும் அன்வர் காதரின் குடும்பத்தினர் நோயுற்றிருந்த தங்களது சகோதரியின் கணவரை சுகம் விசாரிப்பதற்காக திக்கோயாவிலிருந்து நுவரெலியாவுக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த பஸ் – வேன்– முச்சக்கரவண்டி விபத்து நிகழ்ந்தது.
நுவரெலியா பிரதான வீதி ரதல்ல பிரதேசத்தில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. கல்விச் சுற்றுலா சென்றுகொண்டிருந்த கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் சாரதியின் கட்டுப்பாட்டினை இழந்து வேன் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
அரசின் மீது அதிருப்தி
நுவரெலியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஏழு உயிர்கள் காவு கொள்ளப்பட்ட போதும் உயிரிழந்தவர்கள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக அவதானம் செலுத்தாமை தொடர்பில் பல்வேறு தரப்புகளும் அதிருப்தி வெளியிட்டன. இவ்விபத்தில் காயமடைந்த கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியின் மாணவர்கள் தொடர்பிலே அதிகம் அவதானம் செலுத்தப்பட்டது. அவர்களது நிலை தொடர்பிலே ஆராயப்பட்டது. விபத்துக்குள்ளான பஸ் வண்டியில் 41 மாணவர்கள் இருந்தனர்.
நாட்டின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூட பக்கசார்பாக செயற்பட்டதாக சமூக ஊடகங்களில் குற்றம் சுமத்தப்பட்டது.
இவ்விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும், தேவை ஏற்படின் விமானம் மூலம் அவர்களை கொழும்புக்கு அழைத்து வருமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதேவேளை விபத்தில் காவு கொள்ளப்பட்ட ஏழு உயிர்கள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியிருக்கவில்லை.
இந்நிலையில் விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கியுள்ள நெல்லிகல வத்துகும்புரே தம்மரதன தேரரை நாம் பாராட்ட வேண்டும்.
கடந்த காலங்களில் கூரகல ஜெய்லானி பள்ளிவாசல் விவகாரங்களில் இவரது செயற்பாடுகள் சர்ச்சைக்குரியதாக இருந்தது. என்றாலும் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மனிதாபிமான ரீதியில் சந்தித்து ஆறுதல் கூறி அன்பளிப்புகளை வழங்கிய தேரரை பாராட்டாமல் இருக்க முடியாது.
விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளுக்கு
நெல்லிகல தேரர் நேரடி விஜயம்
அண்மையில் நுவரெலியா ரதல்ல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகவும், காயமடைந்தவர்களின் விரைவான நலத்துக்கு பிரார்த்திப்பதற்காகவும் நாங்கள் இப்பகுதிக்கு வருகை தந்தோம். குடும்பங்களுக்கு எம்மாலான உதவிகளை வழங்கியுள்ளோம் என கூரகல நெல்லிகல வத்துகும்புரே தம்மரதன தேரர் தெரிவித்தார்.
அவரும் குழுவினரும் விபத்து இடம்பெற்ற ரதல்ல பகுதிக்கும் விஜயம் செய்து பார்வையிட்டனர். வத்துகும்புரே தம்மரதன தேரர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், இந்த விபத்து இடம்பெற்ற போது விபத்தில் சிக்கிய தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் தொடர்பிலேயே முழு நாடும் ஆட்சியாளர்களும் தேடிப்பார்த்தார்கள். கவலை கொண்டார்கள். ஆனால் அன்று முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலர் விபத்தில் பலியாகியிருந்தார்கள்.தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் எமது சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் பலியாகியிருந்தார்கள். இவர்கள் பற்றி ஆட்சியாளர்களும் பெரும்பான்மை சமூகமும் தேடிப்பார்க்கவில்லை. பெரும்பான்மைச் சமூகம் சிறுபான்மைச் சமூகத்தினரைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நாம் இருக்கிறோம்.
நாங்கள் இளைஞர்கள் குழுவொன்றுடன் அவர்களது பகுதிக்கும் அவர்களது வீட்டுக்கும் நேரடி விஜயம் செய்து உதவிகள் வழங்கினோம்.
சமூகத்தில் வசதி வாய்ப்புள்ள அனைவரிடத்திலும் நான் வேண்டுகோளொன்றினை விடுக்கிறேன். நானுஓயாவிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்துக்கும், ஹட்டனிலுள்ள பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பத்துக்கும் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். உண்மையில் அவர்களே வேதனையில் ஆழ்ந்துள்ளார்கள். பாடசாலை செல்லும் மாணவர்கள் பலியாகியுள்ளார்கள். குருமார்களுக்கும் பெரும்பான்மை சமூகத்துக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.
இந்த விபத்தின் போது எம்மவர்கள் நடந்துகொண்ட விதம் தவறு. கொழும்பிலிருந்து கல்விச் சுற்றுலா வந்த மாணவர்கள் தொடர்பிலே எல்லோரும் தேடிப்பார்த்தார்கள். கவலையடைந்தார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட ஏழை தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களைப் பற்றி நாம் தேடிப்பார்க்கவில்லை.
இந்த விபத்தில் பெரும்பான்மை சமூகம் நடந்து கொண்ட விதம் தொடர்பில் நான் திருப்தியடையவில்லை. இது மனிதாபிமான முறைமைக்கு மாறுபட்டதாகும். இதனால் நான் மிகவும் வேதனையடைந்தேன். அதனாலே நான் இங்கு விஜயம் செய்தேன்.
வர்த்தக சமூகத்துக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். பலியான 25 வயது தமிழ் இளைஞர் தான் அவரது குடும்பத்தைப் பராமரித்து வந்தவர். அவர் விபத்தில் பலியாகிவிட்டார். அந்த இளைஞரின் பெற்றோர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு மன உறுதி கிட்டவேண்டுமென நாம் பிரார்த்திக்கிறோம்.
இந்த விபத்து நடந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் நடந்துகொண்ட விதம் எமக்கு வேதனையளிக்கிறது. இந்நாட்டில் கொழும்பிலாக இருக்கலாம். ஹட்டனிலாக இருக்கலாம். நானு ஓயாவிலாக இருக்கலாம். யாழ்ப்பாணத்திலாக இருக்கலாம். நாம் அனைவரும் மனிதர்களே. அதனால் நாம் ஒருவருக்கொருவர் உதவிகள் புரிய வேண்டும்.
நான் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அங்கத்தவர்களைச் சந்தியுங்கள். உதவிகள் வழங்குங்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள். ஏனென்றால் மரணித்தவர்களை விட மரணித்தவர்களின் குடும்பத்தினரே இன்று மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளார்கள். மரணித்தவர்கள் மரணித்து விட்டார்கள். அவர்களது குடும்பத்தினருக்கு வார்த்தைகள் மூலமாவது ஆறுதல் அளியுங்கள்’ என்று தெரிவித்தார்.
விபத்தில் பலியான வேன் சாரதியின்
குடும்பத்துக்கு உதவி
நெல்லிகல வத்துகும்புரே தம்மரதன தலைமையிலான குழுவினர் விபத்தில் பலியான வேன் சாரதியின் இல்லத்துக்கு விஜயம் செய்து அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். அவர்களுக்கு தம்மரதன தேரரினால் ஒரு இலட்சம் ரூபா உதவியும் வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பத்துடன் சந்திப்பு
வத்துகும்புரே தம்மரதன தேரரின் தலைமையிலான குழுவினர் விபத்தில் ஐந்து உயிர்கள் காவு கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பத்தின் வீட்டுக்கும் நேரடி விஜயத்தினை மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் குடும்பத்தினர் தேரர் தலைமையிலான குழுவினரின் விஜயத்துக்கு நன்றி தெரிவித்தனர். விபத்து நடந்து ஒருவார காலமாகியும் எந்தவோர் அரசியல்வாதியும் எங்கள் தொடர்பில் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை என்பதை கவலையுடன் தெரிவித்தனர்.
விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் குடும்பத்துக்கு தேரர் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார். எங்களுக்குள் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற பேதம் இருக்கக் கூடாது. பெரும்பான்மை சமூகம் என்ற வகையில் சிறுபான்மையினரின் நலன்களை நாம் கவனிக்க வேண்டும். காயங்களுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் தாய் தந்தையர் இல்லை. சகோதரர்கள் இல்லை. எல்லோரும் பலியாகிவிட்டார்கள். பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு உதவிகள் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கிறோம். முதல் கட்டமாக நாம் இன்று ஒரு இலட்சம் ரூபா வழங்குகிறோம் என்றார்.
காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் சிறுவனையும் தேரர் பார்வையிட்டு அறுதல் கூறினார்.
முச்சக்கரவண்டி சாரதியின் வீட்டுக்கும் விஜயம்
வத்துக்கும்புரே தம்மரதன தேரரின் தலைமையிலான குழுவினர் விபத்தில் பலியான முச்சக்கர வண்டி சாரதியின் இல்லத்துக்கும் விஜயம் செய்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். அத்தோடு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவினையும் வழங்கினார்கள்.
தேரரும் சிங்கள இளைஞர்களும் முன்வந்து மேற்கொண்ட இச் செயல் பாராட்டுக்குரியதாகும். விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்வதில் நாமும் முன்நிற்போம். அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களின் துயரத்தில் பங்கு கொள்வோம்.- Vidivelli