எச்.எம்.எம்.பர்ஸான்
நாட்டில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனைகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன. இந்த ஆபத்து கல்குடா தொகுதியையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நாசகார தொழில் நாட்டில் பல பாகங்களிலும் இடம்பெற்று வருகின்ற போதும், கல்குடா தொகுதியில் உள்ள பிறைந்துறைச்சேனை பகுதி தேசிய ரீதியில் பேசப்படும் ஒரு பிரதேசமாக காணப்படுகிறது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை எனும் பகுதில் பல்லாண்டு காலமாக இந்த போதைப்பொருள் விற்பனை இடம்பெற்றுவருவதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
கஞ்சா, அபின், ஹெரோயின், ஐஸ், போதை மாத்திரைகள் என்று பல்வேறு வகையான போதைப்பொருள்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
அந்த பிரதேசத்தைப் பற்றி மாவட்ட செயலகங்களிலும் பாராளுமன்ற அமர்வுகளிலும் பேசப்பட்டும், விழிப்புணர்வுகள் மேற்கொண்டும் போதைப்பொருள் வியாபாரிகள் அதனை விடாமல் தொடர்ந்தும் செய்து வருவது இந்த நாட்டுக்கு ஒரு சாபக்கேடாகவே அமைந்துள்ளது.
அந்தப் பகுதியில் விற்பனை செய்யப்படும் போதைப்பொருட்களை பெற்றுக் கொள்ள உள்ளூர் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த போதை பாவனையாளர்கள் வருகை தருகின்றனர். அதுமாத்திரமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் நபர்கள் இதனை பெற்றுக்கொள்ள வருகை தந்த போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இப்போது போதைப்பொருள் விற்பனை பிறைந்துறைச்சேனை பகுதியில் மாத்திரமல்லாமல் அது வியாபித்து ஓட்டமாவடி, மீராவோடை, செம்மண்ணோடை, கொண்டையங்கேணி, நாவலடி போன்ற பகுதிகளிலும் புற்றுநோய் போன்று பரவியுள்ளமை அனைவரதும் மனங்களிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் சிறார்களையும், பாடசாலை மாணவர்களையும் பெற்றோர்கள் பெரிதும் போராட்டத்துக்கு மத்தியில் வளர்க்க வேண்டிய ஒரு சூழல் காணப்படுகிறது.
இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் என பலதரப்பட்டோரும் இதற்குள் சிக்கித்தவிக்கின்றனர்.சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள நபர்களின் பிள்ளைகளும் இந்த தீய செயலுக்கு அடிமைப்பட்டு தங்களது வாழ்வை சீரழித்து, குடும்ப கௌரவத்தையும் இழக்கச் செய்து வருவதை காணமுடிகிறது.
இவ்வாறு போதைப்பொருள் விற்பனை செய்யப்படும் நபர்கள் கைது செய்யப்படுவதும் சிறிது நாட்களில் விடுதலையாவதும் வழக்கமாகியுள்ளது.
அதேபோன்றுதான் கடந்த வெள்ளிக்கிழமை இரவு போதைப்பொருள் பாவித்து விட்டு அதனை விநியோகம் செய்யவிருந்த ஐந்து இளைஞர்களை இளைஞர் குழுவொன்று பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தபோது அவர்களிடம் தகுந்த ஆதாரங்கள் இல்லையென்று அன்றைய தினமே விடுவிக்கப்பட்டனர்.
அவ்வாறு விடுதலையாகி வரும் நபர்கள் எந்தவித பயமுமின்றி தொடர்ந்தும் அதே வியாபாரத்தை செய்து இளம் சமூகத்தை சீரழித்து வருகின்றனர்.
இந்த போதைப்பொருள் விற்பனையை தடுக்க கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதும் அது கை கூடவில்லை என்றே அனைவரும் ஆதங்கப்படுகின்றனர்.
இந் நிலையில் புற்றுநோய் போன்று பரவி வரும் இந்த போதைப்பொருள் பாவனையை இல்லாமல் செய்து இளம் தலைமுறையினரை பாதுகாக்க பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் விழித்துக்கொண்டுள்ளனர்.
அந்தவகையில், போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் பாவிப்பவர்களின் திருமண நிகழ்வுகள், மரணச் சடங்குளை பள்ளிவாசல்கள் முன்னின்று நடத்தாது என்றும் குடும்ப, பொருளாதார உறவுகளை முற்றாக துண்டிப்பது போன்ற பல்வேறு தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று, கடந்த மாதம் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகி வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவந்த மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த நபரொருவர் மரணித்திருந்தார். அவரது ஜனாஸாவை அப் பகுதி பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பொறுப்பேற்க மறுத்தனர்.
இந்நிலையில் அந்த ஜனாஸாவை அவரது குடும்பத்தினர் காணியொன்றில் தொழுகை நடாத்தி பள்ளிவாசல் மையவாடியில் ஒரு பகுதியில் நல்லடக்கம் செய்தனர்.
அதேபோன்று ஏராளமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைககளுக்கும், புனர்வாழ்வு நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் குறித்த பிரதேசத்தில் போதையை ஒழிப்பதற்கான போராட்டம் வீரியம் பெற்று வருகிறது.
இளைஞர் குழுக்கள் ஒன்றிணைந்து இந்த விழிப்புணர்வு போராட்டத்தை இரவு, பகலாக மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப்பொருள் விற்பனை செய்யப்படும் இடங்களை கண்காணித்து அங்கு போதைப்பொருள்களை பெற்றுக்கொள்ள வரும் நபர்களை மடக்கிப் பிடித்து பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கின்றனர்.
இவ்வாறு தொடர்ந்தும் அந்த பகுதியில் இளைஞர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதனால் சில போதைப்பொருள் வியாபாரிகள் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் வியாபாரிகளுக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் இந்த விழிப்புணர்வு போராட்டத்தை மேற்கொண்டு வரும் இளைஞர்கள் மீது போதைப்பொருள் வியாபாரிகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதுடன், அவர்களுக்கு எதிராக வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளனர்.
எனினும் இவ்வாறான முறைப்பாடுகளுக்கும், வழக்கு தாக்கலுக்கும் தாம் அஞ்சப் போவதில்லை என்று தெரிவித்துள்ள விழிப்புணர்வு குழுவினர், தாம் சட்டத்தை ஒருபோதும் கையில் எடுக்காமல் வன்முறைகளில் ஈடுபடாமல் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து இளம் சமூகத்தை பாதுகாக்க இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்வோம் என்று தெரிவித்தனர்.
இவ்வாறான விழிப்புணர்வு திட்டத்தின் தொடரில் கடந்த வெள்ளிக்கிழமை (27) செம்மண்ணோடை பள்ளிவாசல்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் சம்மேளனம் ஜும்ஆ தொழுகையின் பின்னர் மாபெரும் விழிப்புணர்வு ேபாராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு நிகழ்வில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இந் நிகழ்வில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.டி.டி.நிலங்க, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எல்.ஆர். பண்டார ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அதில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.டி.டி.நிலங்க உரை நிகழ்த்துகையில்,
ஐஸ் போதைப்பொருளை பாவிக்கக்கூடியவர்கள் மிகக்குறுகிய காலத்துக்குள் மரணித்துப் போகக்கூடிய ஒரு மோசமான நிலை காணப்படுகிறது.
தற்போது அதிகளவிலான பெண்களும் ஐஸ் போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர். இதனை நாம் மிக விரைவாக இல்லாமலாக்குவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
பெண்கள் அதிகம் வீட்டுக்குள் இருப்பதனால் அவர்கள் எங்கே சென்று பயன்படுத்துகிறார்கள் என்று தேடித்திரிய தேவையில்லை. வீட்டுக்குள் இருந்தே அவர்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் பதார்த்தங்களினால் செய்யப்படுகின்ற லொலிபொப் மாத்திரைகள் வடிவிலான இந்த போதைப் பழக்கத்தை உங்களுடைய சிறார்களுக்கு இவர்கள் அறிமுகப்படுத்தலாம்.கட்டாயமாக உங்களது பிள்ளைகள் விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும்.
இவ்வாறான போதைப்பொருள் தடுப்பு வேலைகளை நீங்கள் கடந்த காலங்களில் ஆரம்பித்திருக்க வேண்டும்
இப்போதாவது நீங்கள் ஆரம்பித்து இருப்பது நல்லது. இது நிச்சயமாக உங்களுடைய எதிர்கால சந்ததியை பாதுகாக்கும்.
இந்த போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து உங்களுடைய சமூகத்தை பாதுகாப்பதற்காக, அத்தோடு தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க நாங்கள் முழுமையான பங்களிப்பை செய்வோம் என்றார்.
அதேபோன்று, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எல்.ஆர். பண்டார பேசுகையில்,
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஒரு வருடத்துக்குள் மாத்திரம் போதைப்பொருளுக்கு எதிராக அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருள் விற்பனைகளில் ஈடுபடும் நபர்களுக்கு நாங்கள் எந்தவித கருணைகளும் காட்டமாட்டோம். அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த அத்தனை விடயங்களையும் மேற்கொள்வோம்.
வாழைச்சேனை – நாவலடி பகுதியில் 8 மாத குழந்தையின் தாய் ஒருவரை போதைப்பொருள்களுடன் கைது செய்துள்ளோம். அந்த பெண்ணை விடுவிக்கக் கோரி பல்வேறுபட்ட நபர்கள் எங்களுக்கு அழுத்தங்களை தந்தார்கள். ஆனால் நாங்கள் அவர் மீது எந்தவித அனுதாபங்களும் காட்டாமல் குழந்தையுடன் சிறையில் வைத்துள்ளோம்.
ஆரம்பத்தில் எங்களால் மட்டும்தான் இந்த பணிகளை செய்யவேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது நீங்கள் எல்லாம் சமூகத்தோடு சேர்ந்து இதற்கு எதிராக வந்திருப்பது எங்களுக்கு பெரியதொரு பலத்தை தந்திருக்கிறது.
இந்த போதைப்பொருள் பாவனையில் இருந்து உங்களது சமூகத்தை பாதுகாக்க நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள முயற்சிக்கு நான் மிகவும் தலைவணங்குகிறேன்.
பள்ளிவாசல்கள், சமய நிறுவனங்கள் எங்களுக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர். இதுபோலவே தொடர்ந்தும் இந்த விழிப்புணர்வு திட்டங்களை நீங்கள் ஏற்படுத்துங்கள்.
நாங்கள் அவர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைகளை எந்தவிதமான தயவுதாட்சணம் இல்லாமல் ஏற்படுத்தி தருவோம் என்றார்.
இவ்விழிப்புணர்வு நிகழ்வில் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம்.எம்.ராசிக், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர், மற்றும் பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.- Vidivelli