(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹஷீமின் மனைவியான பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவிப்பதா இல்லையா என்ற தீர்மானம் எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொக்ஸிஒ இது தொடர்பில் கடந்த திங்களன்று (ஜன.30) அறிவித்தார். அத்துடன் ஹாதியாவுக்கு எதிரான வழக்கை மிக விரைவாக விசாரித்து முடிக்கவும் நீதிபதி தீர்மானித்ததுடன் அதர்காக ஒவ்வொரு மாதமும் 3 ஆம் வாரம் விசாரணைகளை முன்னெடுப்பது குறித்தும் அவதானம் செலுத்தியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதிக்கும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சாரா ஜஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் என்பவர் வெடிபொருட்களை தயாரித்தமை மற்றும் அவற்றை சேகரித்து வைத்திருந்தமை தொடர்பில் நிந்தவூரில் வைத்து அறிந்திருந்தும் (சாரா ஜெஸ்மின் தெரிவித்தன் ஊடாக), அந்த தகவலை பொலிஸாருக்கு அறிவிக்காமை குறித்து பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் 5 ஆம் அத்தியாயத்தின் அ, ஆ பிரிவுகளின் கீழ் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எச்.சி. 653/ 21 எனும் குறித்த குற்றப் பகிர்வுப் பத்திரம் கடந்த 2021 நவம்பர் 12 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த குற்றப் பகிர்வுப் பத்திரத்தில், கோட்டை முன்னாள் நீதிவான் ரங்க திஸாநாயக்க, சி.ஐ.டி. அதிகாரிகள், ஒரு இராணுவ வீரர் உள்ளடங்கலாக 30 சாட்சியாளர்கள் பட்டியலிடப்பட்டுள்ளதுடன், சான்றாவணமாக ஒரே ஒரு ஒப்புதல் வாக்கு மூலம் மட்டும் நிரலிடப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு, கல்முனை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் கடந்த ஜனவரி 30 ஆம் திகதி மேலதிக முன் விளக்க மாநாட்டுக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே பிரதிவாதி ஹாதியாவுக்காக சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸுடன் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆஜரானார்.
கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் திகதி முன் விளக்க மாநாட்டின் போது, வழக்குத் தொடுநரால் முன்மொழியப்பட்ட ஏற்புகள் தொடர்பில் கடந்த 2022 நவம்பர் 30 ஆம் திகதி கலந்துரையாடப்பட்டது. இதன்போது வழக்குத் தொடுநரால் 24 ஏற்புகள் முன் மொழியப்பட்ட போதும் அதில் பெரும்பாலானவையை ஏற்க பிரதிவாதி தரப்பு இணங்கவில்லை. இந் நிலையில் அந்த நிலைப்பாட்டிலேயே பிரதிவாதி இருப்பதாக கடந்த திங்களன்று (ஜன.30) நீதிமன்றுக்கு சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீபினால் அறிவிக்கப்பட்டது.
பிரதிவாதி ஹாதியாவுக்காக ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீபால் கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி நடந்த வழக்கின் முன் விளக்க மாநாட்டின் போது, பிரதிவாதி தரப்பினரால் நியாயமான வழக்கு விசாரணைகளை முன்னெடுக்கும் பொருட்டு 5 முக்கிய சான்றாவணங்கள் வழக்குத் தொடுநரிடம் கோரப்பட்டது.
அதில் 4 ஆவது ஆவணமாக கோரப்பட்ட பிரதிவாதி பாத்திமா ஹாதியா, குண்டு வெடிப்பில் காயமடைந்து அம்பாறை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகலில் அனுமதிக்கப்பட்டமை, அங்கிருந்து சிகிச்சைகளை முடித்துக்கொண்டமை தொடர்பிலான ஆவணங்கள் வழக்குத் தொடுநருக்காக மன்றில் அரச சட்டவாதி லாபிருடன் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் பிரதிவாதி தரப்புக்கும், மன்றுக்கும் கையளித்தார்.
இதனிடையே, பிரதிவாதி பாத்திமா ஹாதியா சார்பில் பிணை கோரிக்கை ஏற்கனவே முன் வைக்கப்பட்டு அது குறித்து எழுத்து மூல சமர்ப்பணங்களும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அதனை மையப்படுத்தி பிணை குறித்த உத்தரவு கடந்த திங்களன்று (30) அளிக்கப்பட இருந்தது. எனினும் நீதிமன்றம் அது குறித்த உத்தரவை அன்றைய தினம் வழங்க தயாரில்லை என அறிவித்தது.
பாத்திமா ஹாதியா, நீண்டகாலமாக (மூன்று வருடங்கள் 8 மாதங்கள்) தடுப்புக் காவல் அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை, விஷேட காரணிகளை மையப்படுத்தி இந்த பிணை கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்த நிலையில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியும் வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்படாமையை மையப்படுத்தியும் பிணை குறித்த தீர்மானத்தை எடுக்க முன் பரிசீலிக்குமாறு ஹாதியாவின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் கோரினார்.
அத்துடன் ஹாதியாவின் உடல் நிலை தொடர்பிலும் மன்றில் விடயங்கலை முன் வைத்த அவர், இரு முறை கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், தனியார் வைத்தியசாலை ஒன்றிலும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்த மருத்துவ ஆவணங்களை பிரதிவாதிக்கு வழங்க உத்தரவிடுமாறும் கோரினார்.
அக்கோரிக்கை பிரகாரம் மருத்துவ சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை நீதிமன்றுக்கு பிரதியிட்டு பிரதிவாதிக்கும் ஒப்படைக்குமாறு கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சருக்கு கல்முனை நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும் பிணை தொடர்பில் தீர்மானிக்கும் போது, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளமை தொடர்பில் பரிசீலனை செய்ய வேண்டும் என்ற விடயத்துக்கு வழக்குத் தொடுநர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் ஆட்சேபனை வெளியிட்டார்.
இதனையடுத்து, இது குறித்த வழக்கு பிணை தொடர்பிலான தீர்மானத்துக்காகவும், விசாரணைக்காகவும் எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் தலைமையில், அரச சட்டவாதி லாபிரும் பிரதிவாதிக்காக சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையிலான சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸ் உள்ளிட்ட குழுவினரும் மன்றில் ஆஜராகினர்.– Vidivelli