முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம்: சட்ட வரைபு தயாராகிறது
திருத்தங்களுக்கு முஸ்லிம் எம்.பி.க்களும் ஒப்புதல் என்கிறார் நீதியமைச்சர்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷவினால் சட்ட வரைபுக்காக சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷவுக்கும் இடையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்களை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக நீதியமைச்சர் இது தொடர்பில் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த திருத்த ஆலோசனைக்குழுவை நீதிமைச்சுக்கு அழைத்திருந்தார்.
குறிப்பிட்ட சட்ட திருத்த ஆலோசனைக்குழு முன்னாள் நீதியமைச்சர் அலிசப்ரியினால் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையில் நியமிக்கப்பட்டதாகும். 9 பேரடங்கிய குறிப்பிட்ட குழுவின் அங்கத்தவர்களில் தலைவர் உட்பட 6 பேர் நீதியமைச்சருடனான சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீனின் தலைமையிலான சட்டத்திருத்த ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள திருத்த சிபாரிசுகள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ விளக்கியதுடன் சட்டவரைபு திணைக்களத்துக்கு திருத்தங்களை சட்ட வரைபுக்காக அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.
காதிநீதிபதிகளின் கல்வித்தராதரங்கள் மற்றும் தகுதிகளை நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானிக்கும் என்றும் கூறினார்.
பலதாரமணம் நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு பெண்கள் காதிநீதிபதிகளாக நியமிக்கப்படுவதும் உறுதிப்படுத்தப்படவுள்ளது.
பெண்காதிகள் நியமிக்கப்படும்போது ‘வொலி’ அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டால் விசேட காதிநீதிபதி மூலம் அவ்வனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் உள்ளடக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சட்டத்திருத்தங்களுக்கான வரைபு சட்ட வரைஞர் திணைக்களத்தினால் நீதியமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டதும் அது அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு பின்பு பாராளுமன்றத்தில் அங்கீகாரம் பெறப்பட்டதன் பின்பு அமுலுக்கு வரவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நீதியமைச்சர் விரைபு படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் சட்டத்திருத்த ஆலோசனைக் குழுவின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீனைத் தொடர்பு கொண்டபோது குழு முன்வைத்த சிபாரிசுகளுக்கு நீதியமைச்சர் அங்கீகாரமளித்துள்ளதாகத் தெரிவித்தார். முஸ்லிம் பாராளுமன்ற அங்கத்தவர்களின் விருப்பத்துடனே திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.- Vidivelli