15.01.2023 அன்று காத்தான்குடி பிஸ்மி கலாசாலையின் வருடாந்த பரிசளிப்பு
விழாவில் இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழக முதுநிலை
விரிவுரையாளர் கலாநிதி எம்.சீ.ரஸ்மின் ஆற்றிய உரையின் தொகுப்பு
கல்வி பற்றிய பெரும்பாலான உரையாடல்கள் அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகவே அமைகின்றன. புனித அல்குர்ஆனின் முதலாவது வசனமே ‘இக்ரஹ்’ – என்பதானது கல்வியை ஊக்குவிப்பதாக அமைகின்றது என்பதை அனேகமானவர்கள் அறிவோம். அத்தோடு, கல்வியைக் கற்பது ஆண், பெண் இருபாலார் மீதும் கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது என்பதும் அனேகர் அறிந்தது. அறிவைத் தேடிச்செல்லும் ஒருவருக்கு மலக்குகள் பிரார்த்தனை புரிகின்றனர் என்பதும் அவ்வாறே. இவை யாவும் கல்வியின் சிறப்பை எடுத்துக் கூறுவதாகும். இதனோடு அவதானிக்கக்கூடிய மற்றுமொரு போக்கு முஸ்லிம்களின் அறிவியல் பொற்காலத்தில் (8-13 நூற்றாண்டு வரை) அவர்கள் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஆற்றிய அதீத பங்களிப்பினை மெச்சிப்பேசுவதாகும். உணர்வுபூர்வமாகவும் ஓரளவு பெருமிதத்தோடும் அவ்வாறு பேசப்படும் விடயங்களில் பல அம்சங்கள் உள்ளடங்குகின்றன. குறிப்பாக பாத்திமா பிஹ்ரி என்பவர் முதன் முதலில் பல்கலைக்கழகம் கட்டியது, இப்னு ஹைதம் கமராவைக் கண்டுபிடித்தது, அல் இத்ரீஸ் உலக வரைபடத்தைக் கண்டு பிடித்தது, அப்பாஸ் பின் பர்னாஸ் பறக்கும் விமானத்தின் முன்னோடிக் கண்டுபிடிப்பை மேற்கொண்டது என்பனவற்றோடு இன்னும் பலவும் அடங்கும். இவை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், கல்வி வளர்ச்சியில் குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் மேலே குறிப்பிட்ட விஞ்ஞானத்துறைப் பங்களிப்பின் செல்வாக்கும் தாக்கமும் வீச்சும் எவ்வாறு உள்ளது என்பதே எம்முன்னுள்ள கேள்வியாகும்.
பாடசாலைக் கல்வித்திட்டத்திற்குள் முஸ்லிம்களின் அடைவு மட்டம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். ஆனால் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் வளர்ந்து, உலக மயமாக்கத்தின் தாக்கம் தேச எல்லை கடந்து வியாபித்து, விஞ்ஞான வளர்ச்சி சிகரம் தொட்டு முஸ்லிம்களின் அரசியல்– பொருளாதார– சமூக இருப்பு தேசிய- சர்வதேச மட்டத்தில் சவாலுக்கு முகங்கொடுக்கும் யுகமொன்றில் சமகாலக்கல்வி முறை தெளிவான போதாமைகளைக் கண்டுள்ளது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
அத்தோடு, பல தசாப்தங்களாக ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் வளர்ந்து வரும் மத்ரசாக்கல்வி முறையும் பல போதனைகளைக் கொண்டுள்ளது. ஒரு சில மத்ரசாக்களைத்தவிர பெரும்பாலானவை காலத்திற்குத் தேவையான முஸ்லிம் ஆளுமைகளை உருவாக்கும் ஆற்றல் இல்லாதிருக்கின்றன. மத்ரசாக்களின் குறைபாடுகளை விபரிப்பது எனது நோக்கமல்ல. ஆனால், இவ்விரு கல்வி முறைகளும் வெறுமனே மனப்பாடம் செய்து ஒப்புவிக்க வழிகாட்டுகின்றன. பரீட்சைகள் வெறுமனே மாணவர்களின் கிரகித்தலையும் அறிவு மட்டத்தையும் சோதிப்பதாக உள்ளன. சவால்மிக்க உலகத்தில் மாணவர்களின் தர்க்கரீதியான சிந்தனை, புத்தாக்க இயலுமை, நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வுகளை பிரயோக ரீதியாக முன்வைக்கும் ஆற்றல், பிரச்சினைகளை ஆக்கபூர்வமாகவும் வாய்ப்பாகவும் எதிர்கொள்ளும் இயலுமைகள் என்பன பெரும்பாலும் சோதிக்கப்படுவதில்லை. இத்தகைய ஆற்றல்களை போதியளவு பெற்றுக்கொள்ளும் அவகாசமும் மேற்சொன்ன இரு கல்வி முறையிலும் கிடைப்பதில்லை. இக்கல்வி முறை பரீட்சையில் அதிகப்புள்ளிகளைப் பெறும் மாணவனையே ‘புத்திசாலி’ எனக் கட்டமைக்கின்றது. இது ஒரு பாரிய துரதிர்ஷ்டம்.
இந்த இடத்தில் ஒரு குட்டிக்கதையை – உண்மையாக நடந்த சம்பவம் ஒன்றைப் பதிவு செய்வது முக்கியமாகும். 2015 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலை ஒன்றில் அரங்க நாடக நிகழ்ச்சியொன்றிற்காக சென்றிருந்தோம். அப்போது நாடகக் குழுவில் உள்ளவர்களை அதிபர் இன்முகத்துடன் வரவேற்றார்.
ஆனால், அன்றைய தினம் பாடசாலையில் மற்றுமொரு நிகழ்ச்சி இடம்பெற்றுக்கொண்டிருந்ததால் அதிபரும் ஏனைய ஆசிரியர்களும் மிக வேலைப் பளுவோடு இருந்தனர்.
நாடகக்குழுவினர் எந்த அறையில் தங்குவது, எங்கே தண்ணீர் எடுப்பது, மலசலகூடம் எங்குள்ளது, மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும்போது நாடகக்குழு உறுப்பினர்கள் எவ்வாறு வெளியில் செல்வது, எங்கே நாடகத்திற்கான ஆடைகளை மாற்றிக்கொள்வது என்பது தெரியாமலிருந்தது.
அப்போது, ஒரு சிறுவர் உள்ளே வந்தார். தண்ணீர் கொண்டு வந்து தந்தார். மலசலகூடத்திற்கான வழியைக் காட்டினார். பகலுணவு பற்றி விசாரித்தார். ஒரு அறைக்குள் அதனை மூடியபடி நாடகத்திற்குரிய ஆடைகளை மாற்றிக்கொள்ள உதவினார். அதற்காக மேசை விரிப்பு ஒன்றை பயன்படுத்தினார். இடையிடையே நாடகக் கலைஞர்களின் பொருட்களைக் கையிலெடுத்துப் பார்த்தார். அருகிலிருந்த தப்லாவை இரண்டு தட்டுதட்டினார். சாப்பிட்ட பின் எஞ்சிய குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்தார்.
இந்தப் பையன் பாடசாலை அதிபரின் மகனாக அல்லது சொந்தக்காரப் பிள்ளையாக இருக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
நாடகம் அரங்கேறியது. மக்கள் அரங்கத்தில் நடிகர்களின் நடிப்பை பாத்திரத்தை மாற்றி ரசிகர்கள் நடித்துக்காட்ட வேண்டும். அது மக்கள் அரங்கத்தின் பண்பு. அப்போது அதே சிறுவன் அடிக்கடி மேடையேறி பாத்திரமேற்று நடித்தார். மாற்றப்பட வேண்டிய சந்தர்ப்பங்களை விபரித்தார். நாடகம் நன்றாகவே நடந்து முடிந்தது.
நாம் பாடசாலை அதிபரின் அறைக்குச் சென்றோம். அவருக்கு மிகவும் சந்தோஷம். ஆசிரியர்களும் அவ்வாறே. அப்போது எமக்கு உதவியாக இருந்து, நாடக அரங்கத்தின்போது அடிக்கடி மேடையேறி திறமைகளை வெளிக்காட்டிய சிறுவன் பற்றி நான் கேட்டேன்.
அதிபர் அந்தப் பையன் யார் என உங்களால் சொல்ல முடியுமா? என்றார். நிச்சயமாக அவர் உங்களது மகனாக இருக்க வேண்டும் அல்லது ஆசிரியருடைய மகனாக இருக்க வேண்டும் என்றேன். அப்போது அதிபர் சொன்ன விடயம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
“அவன் ஒரு மாட்டு யாவாரியின் மகன். அவனை நாம் பாடசாலையிலிருந்து விலக்கி வைத்திருக்கின்றோம். அவனின் அட்டகாசம் தாங்க முடியாது. எல்லோருடனும் சண்டை போடுவான். ஒரு இடத்தில் இருக்கமாட்டான். புத்திமதி சொல்லவும் பயம். ஒழுக்கமில்லாத பிள்ளை என்பதால் ஸ்கூலுக்கு வரவேணாம் என்று சொல்லியிருக்கிறோம்” என்ற அதிபர் சிறிது நேரம் என்னைப் பார்த்துவிட்டு “34 வருட ஆசிரிய சேவையில் இருக்கும் நான் இவனுக்குள் மறைந்திருந்த ஆற்றலையும் இயலுமையையும் புரிந்து கொள்ள முடியாமல் போய்விட்டேன்” என வருந்தினார். இது சமகால கல்வித் திட்டம் எங்கே செல்கின்றது என்பதை எடுத்துக்காட்டும் ஒரு சிறிய சம்பவம் மாத்திரமே. இக்கல்வி முறையில் சிலபோது சமுக ஆளுமை கொண்ட தலைவர்கள் உருவாக்கப்படுவதில்லை. மாறாக, அழிக்கப்படுகின்றனர் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
அதிக புள்ளிகளை எடுக்க வேண்டும் என்பது பல மாணவர்களின் வாழ்வில் ஒரு போராட்டமாக மாறிவிட்டது. குறைந்த புள்ளிகளை எடுக்கும் மாணவர்கள் வீட்டிலும் பாடசாலையிலும் அவமதிப்பு, குத்திக்காட்டுதல், ஒப்பிட்டுப் பேசுதல் போன்ற செயற்பாடுகளால் உளம் பாதிக்கப்படுகின்றனர். கல்வி ஒருவரின் ஞாபக சக்தியையும் வெளிப்பாட்டுத்திறனையும் மாத்திரம் மதிப்பிடுவதால் சமூகத்திற்கு பிரயோசனமான இயலுமைகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்ட மாணவர்கள் காலந்தோறும் இலைமறை காய்களாக வாழ்கின்றனர்.
குறைந்த புள்ளிகளை எடுத்தால் வீட்டில் ‘அடி விழும்’ என்பதால் வகுப்பாசிரியரின் பரீட்சை புள்ளிகள் பதிவு செய்திருந்த தாளில் இரகசியமாக மாற்றங்களைச் செய்து தனது புள்ளியை அதிகரித்துக்கொண்ட மாணவன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
குறைந்த புள்ளிகளை எடுத்து அவமானப்பட வேண்டும் என அஞ்சி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் பலவற்றை படித்திருக்கிறோம். டியுசன் பெக்டரிகளால் மன உளைச்சல்களுக்கு ஆளாகி ஓய்வே இல்லாமல் மனநிலை பாதிக்கப்பட்ட பல மாணவர்களது சம்பவங்களை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆசிரியர் தனக்குத் தெரிந்ததை மாணவனுக்குச் சொல்லிக்கொடுக்கின்றார். சொல்லிக்கொடுத்ததை மாணவன் கிரகித்துக் கொண்டாரா என்பதையும் சோதித்துப் பார்க்கின்றார். இத்தகைய கல்வி முறை சமூகத்தில் மறைந்திருக்கும் ஆளுமைகளை புடம்போட்டு வளர்ப்பதில் மிகக்குறைவாகவே பங்களிப்புச் செய்கின்றது.
பாடசாலை மற்றும் மத்ரசாக்களின் கல்வி முறை மாணவர்கள் திறன் விருத்தி, ஆளுமை விருத்தி, நுண்ணறிவு விருத்தி போன்றவற்றில் கரிசனை காட்டும்போது நாம் எத்தகைய உலகமொன்றுக்கு மாணவர்களை அனுப்பிவைக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
முன்னர் குறிப்பிட்டது போல அதிதீவிரமாக வளர்ந்து வரும் விஞ்ஞான தொழில்நுட்ப உலகில் சிறுவர்களும் நாமும் தனித்து வாழவோ, மறைந்து வாழவோ முடியாது. உலகில் பல நாடுகளின் அரசியல் தலைவிதியை ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களும், இராணுவப் போராட்டக்குழுக்களும் தீர்மானிக்கின்றன. முழு உலகும் முஸ்லிம்களுக்கு எதிரான போட்டியில் பகிரங்கமாக ஈடுபடுகின்றன. பொருளாதாரப் பலமே உலகின் இயக்கத்தை தீர்மானிக்கின்றது. மேற்குலக மற்றும் பூகோள அரசியல் சக்திகள் சாதாரண மக்களின் வாழ்க்கையை கஷ்டத்திற்கு உள்ளாக்கி வருகின்றன.
அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் (9/11) இலங்கையில் இடம் பெற்ற (2019/ ஏப்ரல்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பன சர்வதேச ரீதியிலும் தேசிய மட்டத்திலும் முஸ்லிம்களை ‘ஆபத்தான சமூகமாக’ கட்டமைத்துவிட்டன. முஸ்லிம் சமூகத்தில் இளைஞர்கள் என்றுமில்லாதவாறான உளவியல் போராட்டத்தை எதிர்கொள்கின்றனர். “உலகம் கொசுவின் இறக்கைக்கும் மதிப்பற்றது” எனக்கருதி எதிர்க்க வரும் உலகத்திலிருந்து பதுங்கியோ, மறைந்தோ, விலகியோ வாழ முடியாது. முறையான கல்வி மூலம் இத்தகைய உலகை சாதுரியமாக எதிர்கொண்டு தம்மையும் சமூகத்தையும் பலமாக முன்னிறுத்திக் கொள்வது சகல சிறுபான்மை மக்களுக்கும் கட்டாயமானது.
பாடசாலை மற்றும் மத்ரசாக்கல்வி முறைகளை மாற்ற வேண்டியது கட்டாயமானது. பல பாடசாலைகள் மரம் நடுகை, சிரமதானம், விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள், மாணவர் மன்றம் மற்றும் பல இணைப் பாடவிதானங்களில் கரிசனை காட்டுகின்றன. எனினும் ஒப்பீட்டு ரீதியில் பார்க்கின்றபோது அதிகம் புள்ளி எடுக்கிற மாணவர்களை வளர்த்துவிடுவதிலேயே அதிக நேரத்தைப் பாடசாலைகள் செலவழிக்கின்றன.
சமகால உலகத்தை எதிர்கொள்ள மாணவர்கள் தொழில்நுட்பத்தைக் கையிலெடுக்க வேண்டும். தொழில்நுட்பத்தை துறந்து அதிகம் சாதிக்க முடியாது. ஒவ்வொரு மாணவரும் பதின்ம வயதை அடைகின்ற போது தமது பொருளாதாரப்பாதை எது என்பதை தீர்மானித்து அதற்குண்டான திறன்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தொழிநுட்ப அறிவு பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் இணைந்து வளரும்போது அதன் சக்தி அலாதியானது.
இவற்றோடு பன்மைத்துவ நுண்ணறிவு, சமூக, உளவியல், சூழலியல் நுண்ணறிவுகளும் இன்றியமையாதன.
முஸ்லிம் மாணவர்களைப் பொறுத்தவரை பன்மைத்துவ ஆளுமை, ஆய்வுத்திறன், இலங்கை முஸ்லிம் வரலாறு, கலாசார மற்றும் பண்பாட்டு ஈடுபாட்டுத்திறன் என்பன திட்டமிட்ட அடிப்படையில் வழங்கப்படல் கட்டாயமாகும்.
இத்தகைய எந்தவொரு அறிவும் சமயக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இறைவனின் பொருத்தத்தை பெற்றுத்தருவதாக அமைவது எல்லாவற்றையும்விடவும் முக்கியமானது. வைத்தியராகவோ, பொறியியலாளராகவோ, ஆசிரியராகவோ வர வேண்டும் என்ற சிறிய இலக்குகளுடன் சேர்ந்த புத்தாக்கங்களை துணிவுடன் மேற்கொண்டு சமூக ஆளுமை மிக்கவர்களாக வளரும் கனவுக்கான களமாக பாடசாலைகளும் மத்ரசாக்களும் மாற வேண்டும்.
வீடுகள் நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் பெற்றுக்கொடுக்காதவரை, ஆசிரியர்கள் மாணவர்களின் மனங்களை வென்று, அவர்களின் கனவுகளை நிஜப்படுத்தி, அவர்களது இலட்சியத்தில் பங்காளிகளாக வராதவரை, எம்மை நோக்கிவரும் சிக்கலான உலகம் எம்மிடம் எதனை எதிர்பார்க்கின்றது என்பதை புரிந்துகொள்ளாதவரை, இஸ்லாமியக் கல்வியின் நோக்கம் இறைவனை நெருங்குவது என்பதை விளங்கிக்கொள்ளாதவரை மாணவர்கள் எதிர்காலத்தை கையிலெடுக்க முடியாது.- Vidivelli