ஏ.ஆர்.ஏ. பரீல்
முஸ்லிம் சன்மார்க்க அறிஞர்களின் அமைப்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தனது நூற்றாண்டு சேவையின் நிறைவினை கொழும்பு மாநகரில் விமரிசையாகக் கொண்டாடியது. இதுவொரு வரலாற்று நிகழ்வாகும்.
பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நாட்டின் அதிபர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகவும் பிரதமர் திணேஷ் குணவர்தன விசேட அதிதியாகவும் பங்கேற்ற இவ் வைபவம் தேசிய ரீதியாக கவனயீர்ப்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாடெங்குமிருந்து வந்த ஆயிரக்கணக்கான உலமாக்கள் மண்டபத்தில் குழுமியிருந்தனர். வெளிநாட்டு தூதுவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், முன்னாள் அமைச்சர்கள், நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள் என மண்டபம் நிறைந்திருந்தது.
பெளத்த மத தேரர்கள், கிறிஸ்தவ மத போதகர்கள், இந்து குருமார்கள் என சமயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர்கள் உலமா சபையின் நூற்றாண்டு விழாவினை கெளரவப்படுத்தியிருந்தனர்.
இதே வேளை தென்னாபிரிக்க ஜம்மிய்யத்துல் உலமா சபையின் செயலாளர் மெளலானா இப்றாஹிம் இஸ்மாயில் பஹம் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாதுகாப்பு செயலாளர் ஓய்வு நிலை ஜெனரல் கமல் குணரத்ன, முப்படைகளின் முன்னாள் பிரதானி சவேந்திர சில்வா, முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.
ஜம்இய்யாவின் நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு விசேட முத்திரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோர் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
மேலும் இலங்கையில் பல ஆலிம்களை உருவாக்கியவர் என்ற அடிப்படையில் ஷெய்குர் ரஹ்மானி ஏ.ஜே.எம்.ஜிப்ரி ஹழ்ரத், தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் ஜம் இய்யத்துல் உலமா சபைக்கும், சமூகத்துக்கும் பங்களிப்புச் செய்கின்ற பரோபகாரிகள் என்ற அடிப்படையில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மற்றும் ஜம் இய்யாவுக்கு பெரும் நன்கொடைகள் வழங்கிவரும் இல்யாஸ் அப்துல் கரீம், ஜம் இய்யாவின் அலுவலகம் இயங்கிவரும் தற்போதைய கட்டிடத்தைப் பெற்றுக்கொள்வதற்கு பாரிய ஒத்துழைப்புகளை வழங்கியவர் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் ஆகியோரும் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
அத்தோடு ஜம் இய்யாவின் அறிமுகம், வரலாறு, பதவி தாங்குனர்கள் அதன் உட்கட்டமைப்பு மற்றும் சமய, சமூகப் பங்களிப்புகள் என்பனவற்றை உள்ளடக்கி தொகுக்கப்பட்ட ‘ஸவ்த்துல் உலமா’ எனும் நூற்றாண்டு சிறப்பு மலரை ஜம் இய்யாவின் உப தலைவர்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.ரிழா வெளியிட்டு வைத்தார்.
இதனைத் தொடர்ந்து ஜம் இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், அதன் உலமாக்கள் விவகார செயலாளருமான அஷ்ஷெய்க் எஸ்.எல்.நெளபர் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் நூற்றாண்டு நிகழ்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை உள்ளடக்கிய பிரகடனத்தை நிகழ்வில் முன்வைத்தார்.
இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வகையில் கலை நிகழ்ச்சிகளும் நிகழ்வை அலங்கரித்தன.திஹாரிய தன்வீர் அகடமியின் பட்டதாரியான அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.அய்யாஷ் சிங்கள மொழியில் ‘விரிது’ கவிபாடினார். கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க மற்றும் மவாஹிபுல் உலூம் கல்லூரி மாணவர்களால் கஸீதா பாடப்பட்டது.
ஜம் இய்யாவின் பொருளாளர் அஷ்ஷெய்க் கலாநிதி ஏ.ஏ.அஸ்வர் நன்றியுரை வழங்கினார். உப தலைவர்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் எச்.உமர்தீனின் துஆவுடனும், ஸலவாத்துடனும் நூற்றாண்டு நிகழ்வு நிறைவெய்தியது.
ஸவ்த்துல் உலமா
நூற்றாண்டு சிறப்பு மலர்
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை தனது நூற்றாண்டு விழாவில் வெளியிட்ட ஸவ்த்துல் உலமா நூற்றாண்டு சிறப்புமலர் நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளின் போது உலமா சபை முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விளக்குவதாக அமைந்துள்ளது.
அளுத்கம கலவரம்
2014 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதலொன்று நடாத்தப்பட இருப்பதாக செய்திகள் கசியத் தொடங்கின. இவை ஊர்ஜிதம் செய்யப்படாது இருந்த போதிலும் நிலைமையை கருத்திற் கொண்டு ஜம் இய்யா உடனடியாக பல தரப்பினருடனும் கலந்தாலோசித்து ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் என்போருக்கு தகவல் தொடர்பில் அறிவித்தது. முஸ்லிம்கள் அச்சத்தில் இருப்பதாவும் உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் கோரி சம்பந்தப்பட்டவர்களுக்கு 2014.05.07 ஆம் திகதி கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது. என்றலும் ஜூன் மாதத்தில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் நாட்டில் இல்லாதபோது இந்தக் கலவரம் நடந்தேறியது.
இதனையடுத்து கலவரம் நடந்த மறுதினம் ஜூன் 16 ஆம் திகதி உலமா சபை கனேடிய மற்றும் பாகிஸ்தான் தூதுவர்களை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியது. ஜூன் 17 ஆம் திகதி அமெரிக்க தூதுவருடனான சந்திப்பும் இடம் பெற்றது. ஜுன்17 ஆம் திகதி உலமா சபை அளுத்கமைக்கு கள விஜயமொன்றினை மேற்கொண்டது. கலவரத்தினால் மரணித்தவர்களின் வீடுகளுக்கும் விஜயம் மேற்கொள்ளப்பட்டது. அளுத்கம பெளத்த மதகுருமார்களுடனான சந்திப்பும் இடம் பெற்றது. அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார். ஜம்இய்யா கலவரம் தொடர்பில் பல கோரிக்கைகளையும் முன்வைத்தது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜூன்17 ஆம் திகதி சுமார் ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஜூன்19 ஆம் திகதி ஒரு கோடி 75 இலட்சம் பெறுமதியான பொருட்கள் அளுத்கமவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன என ‘ஸவ்த்துல் உலமா’ சிறப்பு மலரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திகன கலவரம்
திகன கலவரம் நாட்டின் வரலாற்றில் கண்டி மாவட்டத்தின் திகனயில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான பாரிய இன வன்முறையாகும்.
திகன கலவரம் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதி உருவானது. இக்கலவரம் மார்ச் 08 ஆம் திகதிவரை தொடர்ந்தது.
இக்கலவரத்தில் 24 பள்ளிவாசல்கள், 445 வீடுகள், கடைகள் மற்றும் 65 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. 28 முஸ்லிம்கள் தாக்கப்பட்டு காயங்களுக்குள்ளானார்கள். ஒருவர் பலியானார்.
தாக்குதல் ஆரம்பமான மார்ச் 05 ஆம் திகதி உலமாசபை உடனடியாக செயலில் இறங்கியது.அன்று இரவே அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு வேண்டிக்கொண்டது.
உலமா சபை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்தது. அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்தித்து கலவரத்தை கட்டுப்படுத்துமாறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் உலமா சபையினால் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க சட்டத்தரணிகளின் உதவியோடு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. கலவரங்களைத் தொடர்ந்து சமூகங்களுக்கிடையே பாரிய விரிசல்கள் ஏற்பட்டன. இந்நிலையில் மாற்றுமத சகோதரர்கள், பாதுகாப்பு துறையினர், உயர்மட்ட அதிகாரிகள் எனப்பலருக்கும் இஸ்லாம் பற்றிய தெளிவுகளை ஜம் இய்யா வழங்கியது. சகவாழ்வினைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டது.
மேலும் சுனாமி அனர்த்தம்,மூதூர் வெளியேற்றம், ஹலால் விவகாரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், முஸ்லிம் தனியார் சட்ட திருத்த விவகாரம் போன்றவற்றில் உலமா சபை முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் குறித்தும் இம் மலரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலமா சபையின் சேவைகள் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பில் அதன் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் நிகழ்வில் தெளிவுபடுத்தினார். உலமா சபை தனது பணியினை மேலும் விரிவுபடுத்தி பயணிப்பதற்கு சமூகத்தின் ஒத்துழைப்பினையும் கோரினார்.
உலமா சபை மீது பல்வேறு விமர்சனக் கணைகள் தொடுக்கப்படுகின்ற போதிலும் இந்த நூற்றாண்டு விழா அதன் வரலாற்றில் மிக முக்கிய மைல் கல்லாகும். விமர்சனங்களை உள்வாங்கி மேலும் பல நூற்றாண்டுகள் உலமா சபை பயணிக்க வேண்டும் என வாழ்த்துவோம்.- Vidivelli