(எம்.எப்.எம்.பஸீர்)
பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கில், அரச தரப்பின் பிரதான சாட்சியாளராக அடையாளப்படுத்தப்படும் புத்தளம், அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையின் முன்னாள் மாணவன் எனக் கூறப்படும் மொஹம்மட் நசார் மொஹம்மட் மலிக்கின் சாட்சியம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை ( 23) இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், 2 ஆம் பிரதிவாதி சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரளவின் குறுக்கு விசாரணைகள் இடம்பெற்றன. அதன் பின்னர் வழக்குத் தொடுநர் தரப்பின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன சில்வா மீண்டும் கேள்விகளைத் தொடுத்து, சாட்சிகளை பெற்ற பின்னர் அவரது சாட்சியம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதன்போது விஷேடமாக, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் தொடர்புபட்டதாக பரவலாக நம்பப்படும் லதீபா எனும் பெண் மற்றும் சாய்ந்தமருது வெடிப்பின் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படும் சாரா ஜெஸ்மின் அல்லது புலஸ்தினி மகேந்ரன் ஆகியோர் , தாக்குதல்களுக்கு முன்னர் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸாவுக்கு சென்று வந்துள்ளதாக அளிக்கப்பட்டுள்ள சாட்சியம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் தேவைக்காக, அவ்விருவரின் பெயரையும் இந்த விவகாரத்தில் முதல் சாட்சியாளர் கூறுவதாக இதன்போது பரிந்துரைக்கப்பட்டது. எனினும் சாட்சியாளர் அதனை நிராகரித்தார்.
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு கடந்த 23 ஆம் திகதி திகதி நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட முன்னிலையில் புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கினை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விஷேடமாக மேற்பார்வை செய்யும் நிலையில் அதற்காக பிரத்தியேக சட்டத்தரணிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி திங்களன்று நடந்த வழக்கு விசாரணைகளை மேற்பார்வை செய்ய, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அடுத்த தலைவராக செயற்படவுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி கெளஷல்ய நவரட்ன நேரடியாக மன்றில் ஆஜராகியிருந்தார்.
இது தொடர்பிலான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 24 வரை ஒத்தி வைத்த நீதிமன்றம், 2,46,51,52 ஆம் இலக்க சாட்சியாளர்களுக்கு மன்றில் ஆஜராக அறிவித்தல் அனுப்பியது.- Vidivelli