ஏ.எச்.ஏ. ஹுஸைன்
எந்தவொரு விடயத்திலும் ஆர்வத்தைத் தந்து நின்று நிதானித்து உற்றுப் பார்க்கக் கூடியவற்றைப் பதிவு செய்வது சிறப்பானதாகும். அந்த வகையில் நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டெர்னின் பதவி விலகல் முக்கியத்துவம் பெறுகிறது.
குறைந்த வயதில் ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பை அடைந்தவர் என்றும் உறுதியான உலகத் தலைவர்களின் வரிசையில் இடம்பிடித்தவர் நியூசிலாந்துப் பிரதமர் ஜெஸிந்தா ஆர்டெர்ன் வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதிக்கு முன்பதாக தான் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்த விடயம் உலக அரங்கில் சிலாகித்துப் பேசுமளவுக்கு இப்பொழுது இடம்பிடித்துள்ளது. பிபிசி உட்பட உலக ஊடகங்களும் இந்த விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன.
அவர் அங்கத்துவம் வகித்து வழிநடத்திய தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகிக் கொள்ளும்பொழுது நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து அவர் விலகிக் கொண்டதாகிவிடும்.
நியூசிலாந்தில் வரும் ஒக்ரோபர் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
42 வயதான ஜெஸிந்தா தான் பதவி விலகிக் கொள்ளும் அறிவிப்பின்போது “இதற்குமேல் தன்னிடம் தலைமைப் பொறுப்புக்கான ஆற்றல் இல்லை’’ என்றும் அவர் பவ்வியமாகத் தெரிவித்துள்ளார்.
ஜெஸிந்தா 2017ஆம் ஆண்டு தனது 37வது வயதில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது உயரிய பதவியைப் பெற்ற உலகின் இளைய பெண் தலைவர் என்று அறியப்பட்டார். அதன் பின்னரும் பல நிகழ்வகளால் ஜெஸிந்தா உலகின் கவனத்தை ஈர்த்துக் கொண்டார்.
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் அதன் பின்னான மந்தநிலை, கிறிஸ்ட்சர்ச் மசூதி துப்பாக்கிச் சூடு மற்றும் வைற் ஐலண்ட் எரிமலை வெடிப்பு என கடுமையான சூழல்களுக்கு மத்தியில் ஜெஸிந்தா நியூசிலாந்தை வழி நடத்தினார்.
பிரதமர் ஜெஸிந்தாவின் குறைபாடற்ற தலைமைத்துவமும், கிறிஸ்ற் சர்ச் மசூதி படுகொலைகளுக்குப் பிறகு ஒவ்வொரு நியூசிலாந்தரின் கூட்டுப் பிரதிபலிப்பும் முஸ்லிம் உலகையும் வியப்பில் ஆழ்த்தத் தவறவில்லை.
நியுஸிலாந்து பள்ளிவாசலில் 50 பேரைக் கொன்ற முஸ்லிம்கள் மீதான இனவெறிப் படுகொலையின் பின்னர் ஜெஸிந்தா நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் “அவர்கள் நாமே” என்று முஸ்லிம்களைக் குறிப்பிட்டு தனது உரையில் முஸ்லிம் சமூகத்துடனான நேர்மையையும் இரக்கத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தியிருந்தார்.
இது மனிதகுல வரலாற்றில் அமைதியை நோக்கிய பாதையில் திருப்புமுனையாக என்றென்றும் நினைவுகூரப்படும்.
இது போன்றதொரு இனவெறிச் சங்காரமும் கொடூரமும் மீண்டும் நிகழாமல் தடுக்க அவர் உடனடி நடவடிக்கைகளை உறுதியுடன் தொடர்ந்தார்;. அத்துடன் நிற்கவில்லை முஸ்லிம் சகோதரத்துவத்தைக் காட்ட முஸ்லிம் பெண்கள் போன்றே ஆடை அணிந்து பாதிக்கப்பட்ட சமூகத்திற்கும் நாட்டு மக்களுக்கும் சகோதரத்துவத்தின் மகிமையையும் கூட்டுறவையும் வெளிப்படுத்தினார்.
எந்த அரசியல் தலைவரும் விரும்பாத செய்திராத ஒரு பணியை படுகொலையின் பின்னர் அவர் செய்தார். அது உலகெங்கிலும் பாராட்டுகளைப் பெறும் விதத்தில் அமைந்திருந்தது. இந்த முஸ்லிம்கள் “சகோதரர்கள், மகள்கள், தந்தைகள் மற்றும் குழந்தைகள்… நியூசிலாந்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நாங்கள்தான்.” வலியுறுத்தினார்.
அம்மட்டுமா அவர் பாராளுமன்றத்தில் புனிதமான குர்ஆனை வாசித்தார்.
ஜெஸிந்தா உண்மையிலேயே அவரது மக்களின் பிரதிபலிப்பாகும், ஏனெனில் முஸ்லிம்களுடன் இணைந்து கருணை மற்றும் ஒற்றுமைக்கான செயல்கள் நியூசிலாந்து மக்களால் எங்கும் செய்யப்பட்டதற்கு அவரே முன்னுதாரணமாய்த் திகழ்ந்தார்.
வன்முறை தீவிரவாதத்தை எவ்வாறு கையாள்வது, தங்கள் தேசத்தை எவ்வாறு ஒன்றிணைப்பது மற்றும் துன்பங்களை எதிர்கொள்வது மற்றும் பலவற்றைச் சமாளிப்பது போன்றவற்றில் உலகத் தலைவர்களுக்கு ஒரு புதிய அளவுகோலை அமைத்த அவர்களின் தலைவரைப் பற்றி நியூசிலாந்து மக்கள் பெருமைப்பட வேண்டும்.
கிறிஸ்ட்சர்ச் படுகொலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக ஜெஸிந்தா மௌன அஞ்சலி செலுத்தினார்.
கருணைதான் உண்மையில் பலம் என்ற கருத்தை வெளிப்படுத்த ஜெஸிந்தா ஒரு மொழியைக் கண்டுபிடித்திருப்பதாகத்தான் அவரது போக்குகளுக்கு அர்த்தம் கொள்ள வேண்டும்.
நியூஸிலாந்தை ஆளுகை செய்த ஜெஸிந்தாவின் நெகிழ்வுத் தன்மை இவ்வாறென்றால் அவரால் ஆளப்பட்ட மக்களும் உருக்கமும் உணர்வும் நெகிழ்ச்சியும் நிறைந்தவர்கள்தான் என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன.
ஜெஸிந்தாவினால் ஈர்க்கப்பட்ட நியூசிலாந்தின் பெண்கள் மார்ச் 22ஆம் திகதியை தேசிய ஹிஜாப் தினமாக அறிவித்தனர், நியூசிலாந்து முழுவதும் இஸ்லாமியரால்லாத பெண்கள் இஸ்லாமியரோடு தங்களுக்குள்ள சகோதரத்துவத்தையும் நெகிழ்வுத் தன்மையையும் காட்ட ஹிஜாப் அணிந்தனர்.
இவ்வாறு ஒரு நாட்டை அழகுறப் பரிபாலனம் செய்த ஜெஸிந்தாவை வன்முறைக்கும் வெறுப்புக்கும் எதிராகப் போராடிய ஒரு வீரமங்கை என இனி வரும் வரலாறு வாழ்த்துப்பாடும்.– Vidivelli