முஸ்லிம் சமூகம் காலத்­துக்­கேற்ற நவீன சிந்­த­னை­களை உள்­வாங்க வேண்டும்

உலமா சபையின் நூற்­றாண்டு நிகழ்வில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க

0 403

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தனது சேவையின் நூற்றாண்டு நிறைவினை கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கொண்டாடியது. நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஆற்­றிய உரை

­இந்த அமைப்­பி­னு­டைய தலை­வ­ரது முழு­மை­யான பேச்சை நான் செவி­ம­டுத்­த­துடன் அதில் அவர் முன்­வைத்த யோச­னைகள் தொடர்பில் விசே­ட­மாக கருத்­துக்­கூற விரும்­பு­கின்றேன்.

உலமா சபை இன்று தனது 100வது ஆண்டு நிறைவைக் கொண்­டா­டு­கின்­றது. இது அவர்­க­ளது நூற்­றாண்டு விழா­வாகும். இச்­சந்­தர்ப்­பத்தில் நாம் ஆரம்­பத்தை நினை­வுக்­கூற வேண்டும். முத­லா­வது உலக மகா யுத்­தத்­துக்குப் பின்னர் உலகம் மிகப் பெரிய மாற்­றத்­துக்கு முகம்­கொ­டுத்து வந்த கால­கட்­டமே1922 ஆம் ஆண்­டாகும். இக்­கா­லப்­ப­கு­தியில் கிலா­பத் ஆட்சி முறையை ஒழிக்கும் நடை­மு­றையும் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தது. கிலா­பத் ஆட்­சி­மு­றையை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு இந்­தியா மிகப் பெரிய இயக்­க­மொன்றைக் கொண்­டி­ருந்­தது. ஆனால் இலங்­கையில் அதே காலப்­ப­கு­தியில் தான் முஸ்­லிம்­களின் எண்­ணங்­க­ளதும் சிந்­தாந்­தத்­தி­னதும் மைய­மாகச் செயற்­படும் உலமா சபை எனும் அமைப்பு ஸ்தாபிக்­கப்­பட்­டது. எனினும் அப்­போ­தி­ருந்த சில பிரச்­சி­னை­க­ளுக்கு நாம் இன்றும் முகம்­கொ­டுக்க நேரிட்­டுள்­ளது.

நாம் இப்­போது வித்­தி­யா­ச­மா­ன­தொரு உல­கத்தில் வசிக்­கின்றோம். 1922 ஆம் ஆண்டில் 150 நாடு­களும் அப்­போது இருக்­க­வில்லை. நாம் புதிய நூற்­றாண்டில் வசிக்­கின்றோம். விஞ்­ஞான தொழில்­நுட்ப அபி­வி­ருத்தி, அர­சியல் உரி­மை­களின் முன்­னேற்றம் என்ற இந்தப் பின்­ன­ணியில் நாம் இலங்கை முஸ்­லிம்­களின் எதிர்­கா­லத்தைப் பார்க்க வேண்டும்.

இஸ்லாம் மட்­டு­மன்றி அனைத்து சம­யங்­க­ளுமே தமது சம­யத்தின் அடிப்­ப­டை­க­ளையே பார்க்­கின்­றன. சமயம் கூறும் தூய்­மை­யான அர்த்­தங்கள் எவை? அவற்றை எவ்­வாறு நவீன உல­கத்­துடன் இணைப்­பது? சம­யத்தின் அடிப்­ப­டையை நீங்கள் கடந்த காலம், நிகழ்­காலம் மற்றும் எதிர்­கா­லத்­திற்கு பயன்­ப­டுத்த வேண்டும். இதற்கு மிகச் சிறந்த உதா­ரணம் பௌத்தம். புத்த பெருமான் கங்கைக் கரை­களில் இருந்து பௌத்த மதத்தைப் போதிக்­கும்­போது கரை­யோர நாக­ரி­கமே இருந்­தது. எனினும் அது இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது பௌத்த சம­யத்தில் ஓர­ளவு அடிப்­ப­டையைக் கொண்­டி­ருந்த கரை­யோர நாக­ரீ­கத்தை கட்­டி­யெ­ழுப்ப எம்மால் முடிந்­தது. அது கௌதம புத்­த­ரு­டைய காலத்தில் இல்லை என்­ப­தற்­காக நாம் இந்த நாக­ரீ­கத்தை நிரா­க­ரிக்­க­வில்லை. எனினும் எம்மால் அந்த நாக­ரீ­கத்தை ஏற்­றுக்­கொள்ள முடிந்­தது.

அது­போன்றே, நாம் அனை­வரும் நிகழ்­கா­லத்தில் வாழ்ந்து கொண்டே எதிர்­கா­லத்தைப் பார்க்க வேண்டும். எமது சம­யத்தின் அடிப்­ப­டையைப் பார்ப்­ப­தற்கு கடந்த காலம் எமக்கு உத­வி­யாக அமையும். எந்­த­வொரு சம­யமும் வெறுப்பை போதிக்கும் சமயம் அல்ல. அது வெறுப்புச் சம­ய­மாக இருக்­கவும் முடி­யாது. அது நிச்­ச­ய­மாக இரக்­க­மா­ன­தா­கவே இருக்க வேண்டும்.

மோச­ஸுக்கு அங்­கீ­காரம் வழங்­கிய, கிறிஸ்­து­வுக்கு அங்­கீ­காரம் வழங்­கிய, நபிகள் நாய­கத்­துக்கு அங்­கீ­காரம் வழங்­கிய சமயம் வெறுப்புச் சமயம் என்ற அர்த்­தத்தைக் கொள்­ளாது. இது அன்பை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தொரு சம­ய­மாகும். இஸ்­லாமும் முஹம்­மது நபியும் அத­னையே தொடர்ந்தும் முன்­னெ­டுத்துச் சென்­றனர்.

எனவே நாம் எந்­த­வொரு சம­யத்­தையும் வெறுப்புச் சம­ய­மாக மாற்றக் கூடாது.எனினும் அதன் அடிப்­ப­டையைப் பாருங்கள். நாம் எவ்­வாறு ஒன்­றாக வாழ்­வது? நாம் எவ்­வாறு பிறசமயத்­தையும் பிற­ரையும் பார்ப்­பது?

ஒவ்­வொரு சம­யமும் தனது சம­யத்தைப் பற்றி அனை­வ­ருக்கும் போதிக்க வேண்டும். ஆஸ்­தி­க­னுக்கும் நாஸ்­தி­க­னுக்கும் போதிக்க வேண்டும். நாஸ்­தி­க­னுக்குப் போதிப்­பதால் அவர்கள் எந்­த­வொரு சம­யத்­தி­னதும் எதி­ரிகள் ஆகி­விடமாட்­டார்கள்.

சம­யங்­களும் பாரிய பிணக்­கு­க­ளுக்கு முகம் கொடுத்துச் செல்­கின்­றன. இஸ்­லாத்தில் மட்­டு­மல்ல. எதிர்­காலம் என்றால் என்ன என்­பது தொடர்பில் இஸ்­லாத்­திலும் பாரிய விவா­தங்­களும் கலந்­து­ரை­யா­டல்­களும் இடம்­பெற்று வரு­கின்­றன.

ஏனைய சம­யங்­க­ளிலும் இந்­நி­லைமை காணப்­ப­டு­கி­றது. நீங்கள் கத்­தோ­லிக்க தேவா­ல­யங்­களை எடுத்துப் பார்த்தால் அங்கே அருட் தந்­தையின் போத­னைகள் கத்­தோ­லிக்க தேவா­ல­யத்­தி­லுள்ள பழ­மை­வாத உறுப்­பி­னர்­களால் பெரிதும் சவா­லுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­நேரம் இங்­கி­லாந்­தி­லுள்ள தேவா­ல­யங்­களில் தற்­போது ஆண் ஓரி­னச்­சேர்க்கை திரு­ம­ணங்­களை அங்­கீ­க­ரிப்­பதா அதனை எவ்­வாறு நடத்­து­வது போன்ற விவா­தங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

அனைத்து சம­யங்­க­ளிலும் பிரச்­சி­னைகள் உள்­ளன. அது இந்து சம­ய­மாக இருந்­தாலும் சரி பௌத்த சம­ய­மாக இருந்­தாலும் சரி.அவை என்ன என்­பது பற்­றியே நாம் கலந்­து­ரை­யாடி வரு­கின்றோம். எனவே நாம் அனை­வரும் அதற்கு முகம் கொடுத்­துள்ளோம். எனினும் நாம் எமது அடிப்­படை கொள்­கை­யி­லி­ருந்து வில­கக்­கூ­டாது. எனவே அது வெறுப்­புக்­கு­ரிய சமயம் ஆகாது. அது அன்பு செலுத்த வேண்­டிய சமயம் ஆகும்.
சம­யத்தின் ஆகக்­கூ­டிய நோக்கம் எங்கே முடி­வ­டையும் என்­பதை எவ்­வாறு கண்­ட­றி­வது? எனவே, இஸ்லாம், பௌத்தம், இந்து மற்றும் கிறிஸ்­தவம் ஆகிய சம­யங்­களைச் சேர்ந்த நாம் அனை­வரும் எமது சம­யத்தின் அடிப்­ப­டை­களை தேடும் கொள்­கை­களில் குறி­யாக இருக்க வேண்டும். சமயம் வர்த்­த­க­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக நாம் உண­ரு­கின்றோம். ஆம்! யுத்­­தங்கள் உரு­வா­கவும் சமயம் கார­ண­மாகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இரண்­டா­வ­தாக சமயம் தனக்­குத்­தானே ஏற்றுக் கொள்­வ­துடன் நவீ­னத்­துக்கு வழி­காட்ட வேண்டும். இஸ்­லா­மா­னது நபிகள் பிறந்த அரே­பி­யா­வுக்கே மீண்டும் செல்ல வேண்டும் என கூறு­ப­வர்­க­ளுக்கு நீங்கள் என்ன கூற விரும்­பு­கின்­றீர்கள்? இஸ்­லா­மிய நாக­ரீ­கத்தின் பொற்­காலம் பக்­தாதை தலை­ந­க­ர­மாகக் கொண்­டி­ருந்­தது. அது வானியல், மருத்­துவம் என எம்­மீது ஏற்­ப­டுத்­தி­யுள்ள செல்­வாக்கைப் பாருங்கள். ஸ்பெயினில் உள்ள ஐபீ­ரியன் குடா­நாட்­டி­லுள்ள முஸ்லிம் இராச்­சி­யங்­களைப் பாருங்கள். அவையே இன்று ஐரோப்­பா­வாக வளர்ச்­சி­ய­டைந்­துள்­ளன. நாம் அவற்றைப் பற்றி பேசு­கின்றோம். உஸ்­மா­னிய சாம்­ராச்­சி­யத்தைச் சேர்ந்த சுலைமான் நபியைப் பாருங்கள்.

எமது பிராந்­தி­யத்தில் கூட அக்பர் பேர­ரசர் பிராந்­தி­யங்­களை ஒன்­றி­ணைக்க முயற்சி செய்தார். அவர், இரண்டு சமுத்­தி­ரங்­களின் சங்­கமம் பற்றி பேசிய தனது பேரனின் கருத்­தி­யலைப் பின்­தொ­டர்ந்தார். அத­னையே நாம் இப்­போது இந்­து -­ப­சுபிக் என்­ற­ழைக்­கின்றோம்.எனினும் அவர் அதைப்­பற்றிக் கூற­வில்லை. இள­வ­ரசர் கூறிய இரண்டு சமுத்­தி­ரங்­களின் சங்­கமம் என்­பது அக்­கா­லப்­ப­கு­திக்­கு­ரிய இந்து மற்றும் இஸ்லாம் சம­யங்­களின் சங்­க­மத்­தையே குறிக்­கின்­றது. எனினும் நாள­டைவில் அவர் கூறி­யது புவிசார் அர­சியல் அடிப்­ப­டையில் மாற்­றப்­பட்­ட­துடன் அதுவே மோத­லுக்கும் கார­ண­மாக அமைந்­தது. அதுவே சாராம்சம் என்­ப­தாகும். நீங்கள் நவீ­னத்தை ஏற்­றுக்­கொண்டு முன்­னேறிச் செல்­லப்­போ­கின்­றீர்­களா? சம­யங்கள் அதனைச் செய்ய வேண்டும். அதில் மாற்றம் செய்­வ­தற்கு எதுவும் இல்லை. சம­யத்தில் கூறப்­பட்­டுள்­ளதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இஸ்லாம் அரே­பி­யாவில் ஆரம்­ப­மா­னாலும் பெரும் எண்­ணிக்­கை­யா­ன­வர்கள் தெற்­கா­சியா மற்றும் தென்­கி­ழக்­கா­சி­யா­வி­லேயே உள்­ளனர். இந்­தோ­னே­சியா, பாகிஸ்தான், இந்­தியா மற்றும் பங்­க­ளாதேஷ் மட்­டு­மன்றி சஹா­ராவின் தெற்குப் பகு­தி­யிலும் பெரும் எண்­ணிக்­கை­யா­ன­வர்கள் இருக்­கின்­றனர். அடுத்­த­தாக கிழக்கே அமெ­ரிக்­கா­விலும் அதி­க­மா­ன­வர்கள் இருக்­கின்­றனர். எனினும் தற்­போது அவர்­க­ளி­டையே வேறு­பா­டுகள் மற்று­ம் மோதல்கள் இடம்­பெற்று வரு­வதை என்னால் அவ­தா­னிக்க முடி­கின்­றது.

இந்­திய உப­கண்­டத்தில் வாழும் இந்­துக்கள், பௌத்­தர்கள் மற்றும் முஸ்­லிம்கள் அனை­வரும் தற்­போது மேலைத்­தேய நாக­ரீ­கத்தை ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். இதற்கு மிகச் சிறந்த உதா­ரணம் பிரித்­தா­னிய பிர­த­ம­ராக இந்து சம­யத்தைச் சேர்ந்த ஒரு­வரும் மேய­ராக முஸ்லிம் ஒரு­வ­ருமே உள்­ளனர். அவர்கள் மேற்­கத்­தேய கலா­சா­ரத்தைப் பிர­தி­ப­லிக்­கின்­ற­னரே தவிர இந்து மற்றும் இஸ்­லாம் வளர்த்­தெ­டுத்த கலா­சா­ரத்தை பிர­தி­ப­லிக்­க­வில்லை. அது போன்ற விட­யங்­க­ளையே நாம் இன்று கையாள்­வ­துடன் நவீனம் என்றால் என்ன? நவீன நிலை என்­பது என்ன? நாம் எங்கே செல்­கின்றோம் என்­ப­வற்றை நாம் கவ­னத்திற் கொள்ள வேண்டும்.

எனவே நவீ­ன­ம­ய­மாதல் என்­பது முக்­கியம். இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்­கி­டையே நவீன சிந்­த­னையை ஏற்­ப­டுத்தும் நிலை­யங்­களை உரு­வாக்க வேண்­டு­மென்றே நான் கூறுவேன். அதற்கு மிகச் சிறந்த இடம் தென்­கி­ழக்கே ஸ்தாபிக்­கப்­பட்­டுள்ள பல்­க­லைக்­க­ழகம் ஆகும். இன்று திரு­மதி அஸ்­ரப்­ அ­வ­ரது சாத­னைக்­காக கௌர­விக்­கப்­பட்டார். பெண் என்ற வகையில் அது அவ­ருக்கு உரித்­தா­ன­தாகும். இச்­சந்­தர்ப்­பத்தில் பல்­க­லைக்­க­ழ­கத்தை ஸ்தாபித்­த­மைக்­காக மறைந்த முன்னாள் அமைச்சர் அஷ்ரப் அவர்­க­ளையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இது நவீன சிந்­த­னை­களைக் கொண்ட நவீன பல்­க­லைக்­க­ழ­க­மாக இருக்க வேண்டும். அப்­போது அர­சாங்­கத்தின் ஆத­ரவும் அதற்கு கிடைக்கும். எனினும் இதனை நீங்கள் முஸ்­லிம்­க­ளுக்கு மட்டும் மட்­டுப்­ப­டுத்த நினைத்தால் பௌத்த மற்றும் பாளி பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­கூ­டா­கவும் நீங்கள் இதே விளைவை சந்­திக்க நேரிடும் என்­பதை நினைவில் கொள்­ளுங்கள். எனவே நவீனம் எனும் சாரம்­சத்­தையே நாம் ஏற்றுக் கொண்டு முன்­னோக்கிச் செல்ல வேண்டும். இங்கே கூட முஸ்­லிம்கள் மாற்­றங்­க­ளுக்கு முகம் கொடுத்­தி­ருப்­ப­தையும் அது பற்றி கலந்­து­ரை­யா­டு­வ­தையும் என்னால் பார்க்க முடிந்தது.

அந்த வகையில் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் பிர­தான விட­ய­மாக உள்­ளது. அது மிகவும் நாக­ரீ­க­மான முறையில் முன்­னெ­டுத்துச் செல்­லப்­ப­டு­கின்­றது. அது முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ருடன் சம்­பந்­தப்­பட்ட விடயம் என்­பதால் நான் அதில் தலை­யிட விரும்­ப­வில்லை. எனினும் முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் எந்­த­வொரு விட­யத்­தையும் முன்­னெ­டுக்­கா­தீர்கள் என நான் கேட்­டுக்­கொள்­கின்றேன்.

அன்­றொ­ருநாள் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்­துக்கு எதி­ராக சிறு­வர்கள் ஆர்ப்­பாட்டம் செய்­வதைக் கண்டேன்.அது முறை­யா­ன­தல்ல. அது சிறுவர் பரா­ம­ரிப்பை மீறும் வன்­மு­றை­யாகும். வளர்ந்­த­வர்கள் அதனைச் செய்­வது வேறு விடயம். ஆனால் கண்­டிப்­பாக சிறு­வர்கள் அல்லர். அது முஸ்­லிம்கள் பற்­றிய மறை­மு­க­மான மதிப்­பீட்டைக் கொடுக்கும். எனவே அவர்­களை அனு­ம­திக்­கா­தீர்கள். அது மட்­டுமே எனக்கு கூற­வேண்­டி­யுள்­ளது.

தற்­போது நீங்கள் உங்கள் 100வது ஆண்டை பூர்த்தி செய்­துள்­ளீர்கள். நாமும் 75வது ஆண்டை பூர்த்­தி­ செய்­ய­வுள்ளோம். எமது அதி­கப்­ப­டி­யான நேரம் ஒரு­வ­ருடன் ஒருவர் சண்­டை­யி­டு­வ­தி­லேயே கழிந்­துள்­ளது. எனினும் தற்­போது இது நல்­லி­ணக்­கத்­துக்­கான நேர­மாகும்.

எனவே தான் நாம் தமி­ழர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்த ஆரம்­பித்­துள்ளோம். அதா­வது இலங்கைத் தமி­ழர்­களின் பிரச்­சி­னைகள் மற்றும் அவர்கள் எவ்­வாறு நல்­லி­ணக்­கத்­துக்குப் பங்­க­ளிக்கப் போகின்­றார்கள் என்­பது பற்றி நாம் ஆராய்ந்தோம். முதற்­படி முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. நாம் மீண்டும் கட்சித் தலை­வர்­க­ளையும் சந்­திக்­க­வுள்ளோம். இந்தக் கலந்­து­ரை­யாடல் மூல­மாக நாம் பல முன்­னேற்­ற­க­ர­மான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்ளோம்.

மலை­யகத் தமி­ழர்­களை சமூ­கத்­துடன் ஒன்­றி­ணைப்­பது தொடர்­பிலும் நாம் கவனம் செலுத்­துவோம். அவர்கள் தாம­தித்து வந்­தாலும் அவர்­க­ளையும் சமூ­கத்­துடன் நாம் ஒன்­றி­ணைக்க வேண்டும்.

எமது சமூ­கத்தில் காலம் தாம­தித்து பல இனங்­களும் சம­யங்­களும் ஒன்­றி­ணைக்­கப்­பட்­டாலும் அவர்கள் அதற்­கு­ரிய பலனை அனு­ப­விக்­க­வில்லை. எனவே அவர்­களும் முழு­மை­யாக ஒன்­றி­ணைக்­கப்­பட வேண்டும்.

மூன்­றா­வ­தாக முஸ்லிம் இனத்­த­வர்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் குறித்தும் நாம் கலந்­து­ரை­யாட வேண்டும். 2018 ஆம் ஆண்டின் திகன வன்­மு­றை, 2019 ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் என்­பன தொடர்­பிலும் இங்கு கலந்­து­ரை­யா­டப்­ப­டு­வ­துடன் அதற்கு கார­ண­மாக அமைந்த விட­யங்கள் தொடர்­பிலும் நாம் பேச வேண்டும். கொழும்பு முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­யிலும் முற்­றிலும் வேறு­பட்ட பிரச்­சி­னை­க­ளையே இலங்­கையின் தென் கிழக்குப் பகு­தியில் உள்ள முஸ்­லிம்­களும் மன்னார் முஸ்­லிம்­களும் எதிர்­நோக்­கு­கின்­றனர்.

இலங்கைத் தமி­ழர்கள், மலை­யகத் தமி­ழர்கள் , சிங்­க­ள­வர்கள் போன்று இவர்­க­ளி­டமும் பேச்­சு­வார்த்தை நடத்தி அவர்கள் எதிர்­கொண்­டுள்ள துன்­பங்கள், சமூக பின்­ன­டை­வுகள் உள்­ளிட்ட விட­யங்­களை வெளிக்­கொ­ணர வேண்டும். இது நல்­லி­ணக்கம் தொடர்­பான மூன்றாம் கட்ட நட­வ­டிக்­கை­யாக அமையும்.

அதே­போன்று சிங்­க­ள­வர்­க­ளு­டனும் நாம் பேச்சு நடத்­த­வுள்ளோம். அதிலும் பல குழுக்கள் உள்­ளன. சிலர் சாதி அடிப்­ப­டையில் ஒதுக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் பலரை சமூகம் ஏற்­றுக்­கொள்­வ­தில்லை. இது­போன்ற நீண்­ட­காலப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்­கா­கவே எனக்கு சமூக நீதி ஆணைக்­கு­ழு­வொன்றை ஸ்தாபிக்க வேண்­டிய தேவை­யுள்­ளது. எனவே, ஏனைய முஸ்லிம் குழுக்­க­ளு­டனும் கலந்­து­ரை­யாடி அவர்­க­ளுக்­குள்ள பிரச்­சி­னை­களை எமது மூன்றாம் கட்ட சந்­திப்­பின்­போது எமக்கு அறி­யத்­த­ரு­மாறு நான் அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபையைக் கேட்டுக் கொள்­கின்றேன்.

ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் தனித்­தனி பிரச்­சினை இருப்­பதன் கார­ண­மா­கவே அவர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்கும் நோக்கில் நாம் அனை­வ­ரையும் ஒன்­றாக இணைத்துப் பேச்­சு­வார்த்தை நடத்­த­வில்லை. எனவே பிரச்­சி­னை­களை கட்டம் கட்­ட­மாக தீர்ப்போம். அப்­போதுதான் 75வது ஆண்டு சுதந்­திர தின நிகழ்­வின்­போது நாம் அனை­வரும் ஒரு தாய் மக்­க­ளாக வாழும் நிலை ஏற்­படும்.

அடுத்த 25 வரு­டங்­களில் வர­லாற்­றுக்­கான நிறு­வ­ன­மொன்றை ஸ்தாபிப்போம். அவர்கள் கடந்த காலத்தைப் பற்­றி­ ஆ­ராய்­வார்கள். எனவே நாம் பொது இடங்­களில் இருந்து கொண்டு பழை­யதைப் பற்றி கூச்­ச­லிடத் தேவை­யில்லை. மேலும் புதிய பொரு­ளா­தா­ரத்தை ஸ்தாபிப்­ப­தற்­காக அரச மற்றும் பொதுக் கொள்­கை­க­ளுக்­கான ஏனைய நிறு­வ­னங்­களும் உரு­வாக்­கப்­படும். ஒரு தேச­மாக நாம் உறு­தி­யாக இருப்போம்.சமூக நீதி நில­வட்டும் . இனங்­க­ளுக்­கி­டை­யே­யான ஒற்­றுமை நில­வட்டும். எமக்குள் சௌபாக்­கி­யத்தை ஏற்­ப­டுத்தும் புதிய பொரு­ளா­தா­ரத்தை நாம் கொண்­டி­ருப்போம். என்னை இந்த நிகழ்­விற்கு அழைத்­த­மைக்கு நன்றி.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.