(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சிரேஷ்ட அரசியல்வாதியான ஏ.எச்.எம்.பெளசி மீண்டும் பாராளுமன்ற அங்கத்தவராக எதிர்வரும் 8 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட ஏ.எச்.எம்.பௌஸி 8 ஆவது அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். அக்கட்சியிலிருந்து ஏழு உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த நிலையில், கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராக களமிறங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து முஜிபுர் ரஹ்மான் விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு முன்னாளர் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸியின் பெயர் வர்த்தமானியில் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது.
1937 இல் பிறந்த ஏ.எச்.எம்.பெளசி 1956 இல் அரசியலுக்கு வந்தார். கொழும்பு மாநகர சபை தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக மாளிகாவத்தை வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர் நீண்டகாலம் மாநகர சபை உறுப்பினராகவும் பின்னர் மேயராகவும் பதவி வகித்தார்.
பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து மேல் மாகாண சபைக்கு தெரிவாகி அமைச்சு பதவியையும் வகித்த நிலையில் அக்கட்சி ஊடாக 1994 ஆம் ஆண்டு பாராளுமன்றம் பிரவேசித்தார். 2018 ஆம் ஆண்டு வரை சுதந்திரக் கட்சி உறுப்பினராக பதவி வகித்த அவர், 52 நாள் அரசியல் சூழ்ச்சியின்போது சு.க.விலிருந்து விலகி மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். இவர் சுகாதார அமைச்சு, மகாவலி அபிவிருத்தி அமைச்சு, பெற்றோலியம் அமைச்சு, போக்குவரத்து அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்தவ அமைச்சு பொறுப்புகளை ஏற்று தனது கடமையினை திறன்பட ஆற்றியுள்ளார்.
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இவர் இரண்டரை வருடத்திற்கு பின்னர் மீண்டும் எம்.பி.யாக எதிர்வரும் 8 ஆம் திகதி பதவி ஏற்கவுள்ளார்.
இவர், சிரேஷ்ட அமைச்சராகவும், ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பாக ஹஜ் தலைவராகவும் பதவியில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli