எஸ்.என்.எம்.சுஹைல்
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையான தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் கோர விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிந்தனர் என்ற செய்தி கடந்த வெள்ளியன்று மாலை சமூக ஊடகங்களிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் வெளியானதையடுத்து நாடே பரபரப்படைந்தது.
பாடசாலை மாணவர்களுக்கு என்ன ஆனது என்ற பரபரப்பின் நடுவில், நானுஓயா விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும், தேவையேற்படின் விமானம் மூலம் அவர்களை கொழும்புக்கு அழைத்து வருமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இந்த விபத்தின்போது பிரபல பாடசாலை மாணவர்கள் 41 காயமடைந்தமை மாத்திரம் பெரிதுபடுத்திப் பார்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 7 பேர் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக அவதானம் செலுத்தாமை வேதனைக்குரிய விடயமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
நுவரெலியாவில் பிரபலமான புலியாவத்தை பேக்கரி உரிமையாளரான சேக்தாவூதின் புதல்வர்களான அப்துர் ரஹீம் மற்றும் அவரது சகோதரரான அன்வர் சாதாத் ஆகியோரின் குடும்பத்தினர் அடங்கலாக 10 பேர், நோயுற்றிருந்த தமது சகோதரியின் கணவரை சுகம் விசாரிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை மாலை திக்கோயாவிலிருந்து நுவரெலியாவுக்குச் சென்றனர்.
இவ்விரு குடும்பத்தினரும், பிரதேசத்திலுள்ள சாரதியொருவருடன் அவரின் வேனில் இரதல்ல குறுக்கு வீதியூடாக சென்றுகொண்டிருந்தனர். குறித்த வீதியானது பஸ் செல்வதற்கு சிரமமான பாதையாகும். இதற்கான அறிவித்தல் பதாகைகளும் போடப்பட்டிருந்த நிலையில் தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற ஏழு பஸ்களில் ஒரு பஸ் குறித்த பாதையூடாக அத்துமீறி மிக வேகமாக செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த குறித்த பஸ் வண்டியானது அந்த பாதையில் பயணித்த வேனுடன் மோதியதுடன் பின்னால் வந்த முச்சக்கரவண்டி மீதும் மோதியுள்ளது.
இதன்போது வேன் மிக மோசமாக நசுங்கிய நிலையில் அதில் பயணித்தோரில் ஆறு பேர் உயிரிழந்ததாகவும், முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதியும் உயிரிழந்ததாகவும், பின்னர் பஸ் சுமார் 150 அடி தூரம் தேயிலை தோட்டத்திற்குள் கட்டுப்பாட்டை இழந்து சென்றதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறுகிறார்.
விபத்தின்போது 13 வயதுடைய அன்வர் சாதாத் முஹம்மது ஷெய்ன், 6 வயதுடைய அப்துர் ரஹீம் நபீஹா, 12 வயதுடைய அப்துர் ரஹீம் பாத்திமா மர்யம் மற்றும் இவர்களின் பெற்றோர்களான சேக்தாவூத் அப்துர் ரஹீம் மற்றும் 43 வயதுடைய பாத்திமா ஆயிஷா ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருடன் முச்சக்கர வண்டி சாரதி, வேன் சாரதி அடங்கலாக 7 பேர் உயிரிழந்தனர்.
சேக் தாவூத் அன்வர் சாதாத், பாத்திமா சகீலா, முஹம்மது செய்ன் ஆகியோர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இம்முறை உயர்தர பரீட்சை எழுத காத்திருந்த அப்துர் ரஹீம் பாத்திமா ஹம்ரா நுவரெலியா வைத்தியசாலை அதிதீவர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, பஸ்ஸில் பயணித்த 41 மாணவர்கள், 2 ஆசிரியர்கள், 3 பெற்றோர் உள்ளிட்டோருக்கும் காயம் ஏற்பட்டது. இவர்கள் உடனடியாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் மறுநாள் சனிக்கிழமை சிகிச்சைக்கு பின்னர் வெளியேறினர். எனினும், உயிரிழந்தவர்கள் தொடர்பில் வைத்தியசாலை வட்டாசத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படாமை கவலையளிப்பதாக பிரதேச மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் ஐவர் முஸ்லிம்களாவர். இவர்களின் ஜனாஸாக்கள் 24 மணித்தியாலத்துக்குள் அடக்கம் செய்யப்பட வேண்டிருந்த நிலையில் மறுநாள் இரவு 9.30 மணிக்கு பிறகே இறுதி ஜனாஸா குடும்பத்தாருக்கு கையளிக்கட்டது. இதன்பிறகு ஹெட்டன் பள்ளிவாசல் ஜனாஸா வாகனம் உள்ளிட்ட மேலும் குடும்பத்தாரின் ஏற்பாட்டில் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு திக்கோயா ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு ஜனாஸாக்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அதிகமான மக்கள் குறித்த ஜனாஸாவில் கலந்துகொண்டமையால் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக குடும்ப உறுப்பினர் என்.அஸாஹிர் குறிப்பிட்டார்.
ஞாயிறன்று அதிகாலை 3 மணியளவில் ஜனாஸா தொழுகையின் பின்னர் திக்கோயா ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பெருந் திரளான மக்கள் குறித்த ஜனாஸாவில் கலந்து கொண்டனர். அத்தோடு, அரசியல் தலைமைகள் பலரும் இங்கு சென்றிருந்தனர். குறிப்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் பல்வேறு வகைகளிலும் உதவியதாகவும் கூறினார் அஸாஹிர்.
‘விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. பிரதேச செயலாளரினால் விபத்து குறித்த முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நஷ்டஈட்டை வழங்குவதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன்’ என ஜீவன் தொண்டமான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. அத்தோடு, பிரபல பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய முக்கியத்துவத்தை உயிரிழந்த மக்களுக்கு வழங்காமை கவலைக்குரிய செயற்பாடு என்பதில் மாற்றுக்கருத்தில்லை.– Vidivelli