2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டயீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை பலரும் வரவேற்றுள்ளனர். இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு, பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நஷ்டயீடும் நீதியும் கிடைப்பததை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பல்வேறு வழக்குகள் நாட்டின் பல நீதிமன்றங்களிலும் இடம்பெற்று வருகின்றன. இவற்றில் எவரும் இதுவரை குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு தீர்ப்பளிக்கப்படவில்லை. இருந்த போதிலும் இத் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான போதுமான உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தும் அதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமை தொடர்பிலேயே தற்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னர் தேசிய உளவுச் சேவையின் பணிப்பாளராக இருந்த தற்போதைய பொலிஸ் நிர்வாக பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, தேசிய உளவுச் சேவை பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ் ஆகியோருக்கு எதிராக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமது பொறுப்பை சரிவர நிறைவேற்றத் தவறியதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகளை மீறியுள்ளதாகக் கருதியே நீதிமன்றம் இத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இத் தாக்குதல் நடந்த போது ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவி வகித்திருந்தார். இதன் காரணமாக அவரும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என இதே அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கில் அவருக்கு எதிராகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி என்ற சிறப்புரிமை காரணமாக அவர் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். இல்லாதுவிடின் அவருக்கு எதிராகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கக் கூடும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
இத் தீர்ப்பை வரவேற்றுள்ள கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித், நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாகவிருந்தாலும் சரி, எந்தவிதமான உயர் பதவிகளிலும் இருந்தாலும்சரி குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது என்பதை இந்த உயர் நீதிமன்றத்தின் பிரசித்தி பெற்ற தீர்ப்பு உணர்த்தியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இதனை தற்போதைய ஆட்சியாளர்களும், எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரவுள்ளவர்களும், அரச அதிகாரிகளும் நன்றாக நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“மக்களின் வரிப்பணத்தினால் சம்பளம் பெறுகின்ற மற்றும் பல்வேறு வரப்பிரசாதங்களை அனுபவிக்கின்றவர்களாலேயே இந்த குற்றசசெயல்கள் நடைபெற்றுள்ளமை தற்போது சட்டத்திற்கு முன் ஊர்ஜிதமாகியுள்ளது. இந்த உண்மைத் தன்மையை கண்டறிந்து வெளிப்படுத்தி, அவர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வரும் வரையில் நாம் எமது செயல்பாடுகளை கைவிடப்போவதில்லை” என்றும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் பேராயரும் சுட்டிக்காட்டியுள்ளது போல, பாதிக்கப்பட்ட மக்களின் நீதியைத் தேடும் போராட்டத்தில் இத் தீர்ப்பானது ஒரு முக்கிய மைல் கல் என்றே கூறலாம். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள வழக்கு விசாரணைகளிலும் இத் தீர்ப்பு முக்கிய தாக்கத்தைச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போதுமான உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தும், சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளைக் கைது செய்வதற்கான பல சந்தர்ப்பங்கள் வாய்த்திருந்தும் வேண்டுமென்றே இத் தாக்குதல் நடப்பதற்கு வழிவிட்டதன் மூலம் மேற்படி அனைவருக்கும் நஷ்டயீட்டுக்கும் அப்பாலான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது. நஷ்டயீடுகளால் மாத்திரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கிவிட முடியாது. அத்துடன் மொத்த நஷ்டயீட்டுத் தொகையையும் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும்போது அவர்களுக்கு மிகச் சிறியதொரு தொகையே கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவேதான் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளையும் அவர்களது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டு நியாயமானதொரு நஷ்டயீடு கிடைப்பதையும் அவர்கள் எதிர்பார்க்கும் நீதி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.- Vidivelli