எம்.எம். ஸுஹைர்
(ஜனாதிபதி சட்டத்தரணி)
10.01.2023 செவ்வாய்க்கிழமை ‘த ஐலன்ட்’ பத்திரிகையில் பிரசுரமான ஆங்கிலக்
கட்டுரையின் தமிழாக்கம்
சில அரச நிறுவனங்களுக்கும், நாட்டின் முஸ்லிம் சமூகம் மற்றும் அதன் அங்கமாகத் திகழும் நிறுவனங்களுக்கும் இடையே தொடரும் பகைமை அல்லது பனிப்போர், முஸ்லிம் சமூகத்தில் ஆழமான கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.
இப் பனிப்போரானது, உலகளாவிய கண்டனத்துக்கு உள்ளாகிய, 2019.04.21 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மையமாகக் கொண்டுள்ளது என்பது தெளிவானது. முஸ்லிம் சமூகம் பிரத்தியேகமாக அத்தாக்குதலுக்கு எதிராகத் தமது ஏகோபித்த கண்டனத்தையும் வெளியிட்டுள்ள போதிலும், அத்தாக்குதல் நடந்தேறி நான்கு ஆண்டுகள் நெருங்குகின்ற நிலையிலும் முஸ்லிம் சமூகத்தினதும், அதன் நிறுவனங்களினதும் நலன்கள் தொடர்ச்சியாக மீறப்பட்டே வருகின்றன.
அத்தகைய பகையுணர்வுசார் திணிப்பு பாரபட்சமானதாக உள்ளதோடு, ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் 2012ஆம் ஆண்டு வெறுப்புப் பிரச்சாரமாக ஆரம்பிக்கப்பட்ட சிறுபான்மை விரோதச் செயல்பாடுகளின் ஓர் அங்கமாகவும் காணப்படுகிறது. நாட்டின் முஸ்லிம்களைத் தொடர்ச்சியாக வேற்றுமைப்படுத்துவதிலும், தீவிரமயப்படுத்துவதிலும், போரை ஆதரிக்கும் வெளிநாட்டுக் கரங்களினதும், அவர்களது முகவர்களினதும் வகிபாகம் உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டும்.
நாட்டின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் நிலையில், நாட்டை முரண்பாட்டுக்குள் இட்டுச் செல்லும் வகையில் சமூகங்களுக்கு இடையே அல்லது சமூகங்களுக்கு மத்தியில் பிரிவினைகளைத் தூண்டுவதற்கு எவரையும் அனுமதிக்க முடியாது.
முஸ்லிம்கள் மற்றும் அவர்களது கடந்த கால மற்றும் சமகால சமயப் பிரமுகர்கள், அதன் வரலாற்று நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகியன தொடர்ச்சியாகத் தனிமைப்படுத்தப்பட்டதாக சமூகம் கவலைப்படுகிறது. அத்தகைய செயல்பாடுகள் ஒடுக்குமுறைக்குட்பட்டதாகவும், இலங்கை அரசியலமைப்பு மற்றும் பல சர்வதேச உடன்படிக்கைகளை மீறும் செயலாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கருதப்படலாம். சமூகம் என்பது வேறானது@ தீவிரவாதிகளும், குற்றவாளிகளும் வேறானவர்கள்.
உதாரணமாக, நாட்டில் அமைதி மற்றும் சமூக ஒழுங்கு என்பன பேணப்பட வேண்டும் என்பதற்காக, அரகலய செயல்பாட்டாளர்களைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்த முடியாது. 1971 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் பெரும்பான்மை சமூகத்தினரின் எழுச்சி மற்றும் 1970களில் வட இலங்கையில் இரண்டு முக்கிய சிறுபான்மைச் சமூகங்களாக எல்.டீ.டீ.ஈ.யின் எழுச்சி ஆகியவற்றிலிருந்து தேசிய அரசியல் தலைவர்கள் பாடம் கற்றுக்கொண்டு, வீதியில் இறங்கி ஓர் எளிய போராட்டத்தைக்கூட நடத்தும் திறனைக்கூட கொண்டிராத முஸ்லிம் சமூகத்துடன் இவ்வாறு நடந்து கொள்வது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
அமைதிவாத அரசியல் மற்றும் வணிகத் தலைமைத்துவத்தின் பிடியில் இச்சமூகம் இருக்க, உணர்ச்சிவசப்படக்கூடிய மத மற்றும் கலாச்சாரப் பிரச்சினைகளுக்கு எதிரான ஒடுக்குமுறையான செயல்பாடுகள், வன்முறையைத் தூண்டக்கூடிய புதிய தீவிரமயப்படுத்தும் சக்திகளை உருவாக்கலாம். எவரும் வன்முறையில் ஈடுபடுவதை இந்நாட்டால் அனுமதிக்க முடியாது. ஆகவே, இப்பிரச்சினைகளுக்குத் துரிதமாகத் தீர்வுகாணப்பட வேண்டும்.
நீதியை நிலைநாட்டுவதற்கும், நடுநிலை தவறாமல் செயல்படுவதற்கும், சமூகத்துக்கு மத்தியில் ஐக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கும், நம்பிக்கையை ஊக்குவிப்பதற்கும், அரசாங்கத்தின் உடனடிக் கவனத்தை வேண்டி நிற்கும் பிரச்சினைகள் பல இருப்பினும், அவற்றுள் சிலவற்றைக் கீழே பட்டியலிட முடியும்.
முஸ்லிம் சிவில் சமூகம் மற்றும் மதப் பிரமுகர்கள் வாயடைக்கப்பட்டனர்: எந்தவொரு முறைப்பாடோ, நீதிமன்ற உத்தரவோ அல்லது சட்டரீதியான அதிகாரமோ இன்றி, பல முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களை வெளிப்படையாக சோதனைக்குட்படுத்துவதற்கு அரச பொறிமுறைகள் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இந்தத் தொடர்ச்சியான வருகைகளும், தொலைபேசி அழைப்புக்களும், அத்தகைய முஸ்லிம் அமைப்புக்கள் சமூகத்துக்கும் நாட்டுக்கும் ஆற்றக்கூடிய சேவையை குறைக்கவும், மட்டுப்படுத்தவும் செய்துள்ளன. இவ்விடயத்தில், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் பேச்சுச் சுதந்திரத்தை மீறும் செயல்பாடுகளில் அரச நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மைக் காலத்தில், மதிப்பிற்குரிய முஸ்லிம் புத்திஜீவிகளில் சிலர் அரச நிறுவனங்களால் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். இச்செயல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பிடியாணை பிறப்பிக்கப்படாத துன்புறுத்தலாகக் கருதப்படலாம். ஒரு சில தற்கொலை குண்டுதாரிகளுக்கு சில அரச நிறுவனங்கள் நிதியுதவிகளைச் செய்துள்ளதாக ஒரு குற்றச்சாட்டு நிலவும் இப்பின்னணியில் – அந்தக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவையாக இருப்பினும் – அனைத்து அரச நிறுவனங்களும் பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
முஸ்லிம்களுக்கு எதிராக மாத்திரம் வழக்குத் தொடுத்தல்: பாராளுமன்றத் தெரிவுக்குழு, ஒக்டோபர் 23ஆம் திகதி 2019 எனத் திகதியிடப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தம்முடைய அறிக்கையிலும் (பக்கம் 93லிருந்து), ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, ஜனவரி 31ஆம் திகதி 2021 எனத் திகதியிடப்பட்ட தம்முடைய இறுதி அறிக்கையிலும், ‘முஸ்லிம்களைத் தாக்குவதற்காகப் பெரும்பான்மை இனவாதக் குழுக்களைத் தூண்டிவிட்டமையே, முஸ்லிம் இளைஞர்களைத் தீவிரவாதத்துக்குள் தள்ளி, அதன் விளைவாக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது’ என நாட்டின் பெரும்பான்மை இனவாதத்தைச் சாடியுள்ளது. எனினும், மேற்குறிப்பிட்ட அறிக்கைகளின் படி, தொடரப்பட்ட வழக்கு நடவடிக்கைகள் அனைத்தும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரானதாக மாத்திரமே அமைந்திருந்ததுடன், அளுத்கமை (2014), கின்தொட்டை (2017), அம்பாறை (2018) மற்றும் திகன (2018) ஆகிய இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எந்தவொரு வழக்கும் தொடுக்கப்படவில்லை. பெரும்பான்மை தீவிரவாதத்திடமிருந்து சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அரசினதும் அதன் பாதுகாப்புத் தரப்பினரதும் பொறுப்பாகும். இதுவே சிறுபான்மைத் தீவிரவாதத்தை தடுப்பதற்கான சிறந்த உத்தரவாதமுமாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் என்ற போர்வையில் முஸ்லிம்களுக்கு எதிரான பனிப்போர்: அதே நேரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் பரவலாகவும், நியாயப்படுத்த முடியாத விதமாகவும், இஸ்லாம், புனித அல்குர்ஆன், இஸ்லாமியப் புத்தகங்கள், மதிப்புக்குரிய வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு இஸ்லாமிய அறிஞர்கள், பள்ளிவாயல்கள், மத்ரஸாக்கள், இஸ்லாமியத் திருமணச் சட்டம், முஸ்லிம் சிவில் நிறுவனங்கள் என அனைத்தையும் தாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. மத சகிப்புத்தன்மையின்மை மற்றும் மதங்களுக்கு இடையேயான முறுகலின் மூல காரணியை அடையாளம் காண்பதற்கும், இன மற்றும் மதங்களுக்கு இடையேயான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும், அரசாங்கம் உறுதியான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என மேற்குறித்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது (பக்கம் 372). உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் என்ற போர்வையில், திரைமறைவில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக ஒரு பனிப்போர் இடம்பெறுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராகப் பிரகடனப்படுத்தப்படாத இப்போர், சமூகத்திலுள்ள ஒரு சிலரைத் தீவிரமயப்படுத்தி, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உதவியை நாடுவதற்கு அவர்களை வற்புறுத்தும். அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கான உதவி எமக்குத் தேவைப்படுகிறது.
தாக்குதலைத் தடுப்பதில் காணப்பட்ட குற்றவியல் சார்ந்த அசட்டை: 21/4 உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதற்கு போதிய கால அவகாசம் இருந்தும், பொறுப்பிலிருந்தவர்கள் அத்தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்விதத் தற்காப்பு நடவடிக்கைகளையும் கைகொள்ளாமல் 16 நாட்களுக்கு மேலாக அதனைப் புறக்கணித்து வந்தமை, திருச்சபைத் தலைவர்களால் தொடர்ந்தும் கேள்விக்குட்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கியமான விடயமாகும். பெப்ரவரி 11ஆம் திகதி வெளியான லங்காதீப தினசரி இதழின் பிரதான தலைப்புச் செய்தியின் படி, அப்போதைய ‘குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுப்பதற்கும், தற்கொலைக் குண்டுதாரி ஸஹ்ரான் ஹாஷிமைக் கைது செய்வதற்கும் வாய்ப்புக்கள் இருந்த போதும் அவர்கள் அதனைச் செய்யவில்லை’ என குற்றப் புலனாய்வுப் பிரிவே நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
‘ஏகத்துவம் அல்லது தௌஹீத்’ அல்லது ‘வஹாபிகள்’ மீதான தாக்குதல் இஸ்லாத்தின் மீதான தாக்குதலாகும்: கிறிஸ்தவக் கொள்கையான ‘திரித்துவம்’, அதிலிருந்து வேறுபடுத்திக் காட்டும், ‘தௌஹீத்’ என்றழைக்கப்படுகின்ற, ‘ஓரிறைக் கொள்கையை’ ஒரு தீவிரவாதச் சிந்தாந்தமாகச் சித்தரிப்பதற்கான முயற்சிகள் சமீப காலமாக சில அரச உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், ஓரிறைக் கொள்கையை நம்பிக்கை கொள்வதென்பது – ‘ஸுஃபிகள்’ என அழைக்கப்படுவோர் மற்றும் ‘வஹாபிகள்’ (ஏகத்துவவாதிகள்) என இழிவாக அழைக்கப்படுவோர் உள்ளடங்கலாக – இஸ்லாமியக் கோட்பாட்டின் அடிப்படைசார் அம்சமாகும். இச்செயற்பாடுகள் நாட்டின் அரசியலமைப்பின் உறுப்புரை 10ஐ மீறும் செயலாகும். பிரசித்த பெற்ற சவூதி அரேபிய இஸ்லாமிய அறிஞரான முஹம்மது இப்னு அப்துல் வஹாப் (1703 – 1787) மற்றும் ஏனைய அறிஞர்கள் மற்றும் இலங்கை மற்றும் இந்தியாவைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் இஸ்லாமிய அமைப்புக்கள் தீவிரவாதச் சிந்தாந்தத்தைப் பரப்புவதாக, எவ்வித ஆதாரங்களும் இன்றி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இக்குற்றச்சாட்டுகள், உலகளவில் நன்கு அறியப்பட்ட, போரை ஆதரிக்கும் மேற்கத்திய நாடுகளின் இஸ்லாமிய-முஸ்லிம் வெறுப்புப் பிரசாரங்களை இலங்கையிலுள்ள சில வெறுப்புப் பிரசாரகர்கள் முட்டாள்தனமாகப் பின்பற்றுவதை நியாயப்படுத்தும் வீண் முயற்சிகளாகும். இவை பெரும்பான்மை சமூகத்திலிருந்து சிறுபான்மை சமூகத்தை பிளவுபடுத்தவும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தில் பிரிவினைகளை உண்டாக்கவும் தற்போது கையாளப்படும், ஏற்றுக்கொள்ள முடியாத முயற்சியாகும்.
பாரபட்சமான கட்டுப்பாடுகள்: இஸ்லாமியப் பாடப் புத்தகங்கள் மீது மாத்திரம் விதிக்கப்பட்டுள்ள பாரபட்சமான கட்டுப்பாடுகள் காரணமாக புனித அல்-குர்ஆன் மற்றும் ஏனைய இஸ்லாமிய நூல்களை இறக்குமதி செய்வதில் பாரிய நெருக்கடியை முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்றனர். டாக்டர் ஸாகிர் நாயக் அவர்களின் “PEACE TV” எனும் பிரபல்யமான தொலைக்காட்சி அலைவரிசை தடைசெய்யப்பட்டுள்ளமை முஸ்லிம்களின் தகவலறியும் உரிமையை மீறுவதாக அமைந்துள்ள அதே வேளை, முஸ்லிம்களுக்கு எதிராகப் பல தரப்பட்ட எதிர்ப்புப் பிரச்சாரங்களில் ஈடுபடக்கூடிய இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகள் தடையின்றி ஒளிபரப்புச் செய்யப்படுகின்றன.
இஸ்லாமியப் பாடப் புத்தகங்கள் திருத்தியமைக்கப்பட வேண்டும் என வற்புறுத்தப்படுகின்றமை: பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்கள் பயன்படுத்தும் பாடப் புத்தகங்களைத் திருத்தியமைக்குமாறு, இஸ்லாம் பற்றிய அறிவு இல்லாத அல்லது இஸ்லாத்தை கண்ணியப்படுத்தாத நபர்களைக் கொண்டு அரசியலமைப்புக்கு முரணாக, வற்புறுத்தப்படுகின்றனர். இஸ்லாமிய கல்வியாளர்கள் இப்பாடப்புத்தகங்களைப் புதுப்பிக்கும் தொடர்ச்சியான செயல்முறையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும் கூட, இத்தகைய தடைகள் முஸ்லிம்கள் மீது மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன.
வட கிழக்கு: தமிழ் சமூகம் முகம் கொடுத்து வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்பட வேண்டும். அவ்வாறு செய்வதால், கிழக்குவாழ் முஸ்லிம்களுக்குப் புதிதாகப் பிரச்சினைகள் ஏற்படக்கூடாது. எல்.டீ.டீ.ஈ. காலத்தில் கிழக்குவாழ் முஸ்லிம் விவசாயிகளின் காணிகள் அபகரிக்கப்பட்டமை போன்ற அநீதிகள் தீர்வை வேண்டி நிற்கின்றன.
முஸ்லிம் விவகாரங்களுக்கு என 1990ஆம் ஆண்டு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட கட்டிடம் கைவிடப்பட்டமை: முஸ்லிம் விவகார அமைச்சு வேறாக அமைக்கப்பட வேண்டும் என அப்போதைய கலாச்சார விவகாரங்கள் அமைச்சராக இருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த லக்ஷ்மன் ஜயகொடி அவர்களின் முன்மொழிவுக்கு அமைவாக, ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களின் தலைமையிலான அமைச்சரவை, முன்மொழியப்பட்ட கட்டிடத்துக்கு அங்கீகாரம் வழங்கியது. எனினும், அது புத்தசாசன அமைச்சின் பரிந்துரையின் பெயரில், அரச முஸ்லிம் விவகாரங்களுக்கு வெளியில் உள்ள ஏனைய நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளப்படவுள்ளது.
இது 1999ஆம் ஆண்டின் அமைச்சரவை அனுமதியை மீறுவதாக அமைந்துள்ளது. இக்கட்டிடத்தில் தற்போது முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இயங்கி வருகிறது. முஸ்லிம் விவகாரங்களுடன் தொடர்புடைய, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் பிரிவு 6 மற்றும் 7க்கு உட்பட்டதான காதிகள் சபை, கொழும்பிலுள்ள காதி நீதிமன்றங்கள், ஹஜ் குழுக்கள், மதியுரைச் சபைகள் போன்ற பல அரச நிறுவனங்கள், தமது தொழிற்பாட்டுக்கு முறையான இடவசதியை வேண்டி நிற்கின்றன. வக்பு சபை, வக்பு நியாயசபை மற்றும் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றுக்கும் தமது செயல்பாடுகளுக்காக மேலதிக இடவசதி தேவைப்படுகிறது. உத்தியோகபூர்வ விவகாரங்களுக்காக இந்நிறுவனங்களுக்குச் சமூகமளிப்பதற்கு கொழும்பு நோக்கிப் பயணிப்பவர்களுக்குத் தமது காரியங்களை ஆற்றிக்கொள்ளும் விதமாகப் போதியளவு இடவசதிகள் அங்கு காணப்படுவதில்லை. 2000ஆம் ஆண்டு முஸ்லிம் விவகாரங்களுக்கு என அப்போதைய பிரதமரும், தன்னுடைய தந்தையுமான ரத்னசிரி விக்ரமாநாயக்கவினால் வழங்கப்பட்ட இடத்தை, தற்போது ஏன் புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மீளப் பெற்றுக்கொள்ள முயல்கிறார்? புத்தசாசன அமைச்சு, இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் கலாச்சார மற்றும் மத விவகாரங்களைக் கையாளாது, சிறுபான்மையினருடன் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் ஈடுபடுவதைத் தவிர்ந்துகொள்ள வேண்டும்.
பள்ளிவாயல் விவகாரங்கள் தொடர்பாகப் பரிச்சயமற்ற உத்தியோகத்தரை முஸ்லிம் விவகாரங்களுக்கான மேலதிக பணிப்பாளராக நியமித்தல்: மதிப்பிற்குரிய கிறிஸ்தவப் பெண் உத்தியோகத்தர் ஒருவர், முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்லாமிய மத, முஸ்லிம் கலாசார மற்றும் பள்ளிவாயல் சார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதில் அவருக்குள்ள இயலுமை கேள்விக்குரியதாகும். இவ்விடயங்களைத் திறமையுடன் கையாளக்கூடிய மூன்று முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இப்பதவியை அவர் தற்போது வரை ஏற்கவில்லை.
கைதுசெய்யப்பட்ட முஸ்லிம்கள் 3 ½ வருடங்களுக்கு மேலாகப் பிணை வழங்கப்படாமல் அல்லது நியாயமான விசாரணைகள் நடத்தப்படாமல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்: 21/4 தாக்குதல்கள் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் கைது செய்வதற்கும், அவர்களைப் பல மாதங்கள் தடுத்து வைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டமை யாவரும் அறிந்த உண்மையே. பெருமளவானோருக்கும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கும் இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை என நிரூபிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர். எனினும், பெரும்பாலான வழக்குகளில் பிணை வழங்கப்படுவதற்கான சட்டமா அதிபரின் ஒப்புதல் இல்லாமையால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஒரு நியாயமான விசாரணையைக் கூட நடத்த முடியாமல் உள்ளது.- Vidivelli