அமைப்பை மாற்றாமல் ஆட்சியாளர்களை மாற்றுவதில் பயனில்லை

0 424

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

பய­னற்ற முயற்சி
எதிர்­வரும் தேர்­தல்­க­ளுக்கு தகு­தி­வாய்ந்த வேட்­பா­ளர்­களை கள­மி­றக்க வேண்டும் என்ற தேடலில் முஸ்லிம் சமூக ஆர்­வ­லர்கள் ஈடு­பட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்­கதே. ஆனால் அதற்­குமுன் ஒரு முக்­கிய உண்­மையை அனை­வரும் உணர்தல் நல்­லது. அதா­வது, பண மூடை, பொரு­ளா­தாரச் சீர­ழிவு, அர­சியல் தில்­லு­முல்­லுகள், சமூகச் சீர்­கே­டுகள் என்­ற­வாறு இந்த நாட்டைப் பீடித்­துள்ள பிணி­களை ஒவ்­வொன்­றாகப் பட்­டி­ய­லிட்டு விப­ரிக்­கலாம். அவை ஒவ்­வொன்­றுக்­கு­முள்ள தீர்­வுகள் எவை என்­பன பற்­றியும் ஆய்­வா­ளர்­களும் விமர்­ச­கர்­களும் முன்­மொ­ழிந்­து­கொண்டும் தர்க்­கித்­துக்­கொண்டும் இருக்­கலாம். ஆனால் அப்­பி­ணி­க­ளுக்­கெல்லாம் அடிப்­ப­டை­யாக ஒரு நாச­காரக் கிருமி இந்­நாட்டை கரு­வ­றுத்துக் கொண்­டிருக்­கி­றது என்­ப­தையும் அந்தக் கிரு­மியை அடை­யா­ளங்­கண்டு அதனை ஒழிக்­காமல் ஆட்­சி­யா­ளர்­களை மாற்­று­வ­திலே எந்­தப் ­ப­யனும் இல்லை என்­ப­தையும் எல்லாச் சமூ­கங்­களும் உணர்தல் வேண்டும். அந்த அழிவு ஏற்­ப­டாமல் வேட்­பாளர் தேடல் ஒரு பய­னற்ற முயற்­சி­யாகும்.

இளந்­த­லை­மு­றைக்கு ஓர் அஞ்­சலி
சுமார் ஏழரை தசாப்­தங்­க­ளுக்குப் பிறகு அந்தக் கிரு­மியை இனங்­கண்டு அதனை அழிக்­கு­மாறு ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு வலி­யு­றுத்­திய பெருமை இந்த நாட்டின் இளம் தலை­மு­றை­யி­ன­ரையே சாரும். அந்தத் தலை­மு­றையின் பிர­தி­நி­தி­கள்தான் கடந்த வருடம் பங்­குனி மாதம் காலி­மு­கத்­தி­ட­லிலே குழு­மி­நின்று ஒரே குரலில் “அமைப்­பையே மாற்று” என்று கோஷம் எழுப்­பினர். அந்த அமைப்பே அவர்­களின் பார்­வையில் நாட்டைக் கரு­வ­றுக்கும் ஒரே கிருமி எனத் தெரிந்­தது. ஆனால் அதனை மாற்றும் திறனும் அதற்­கான உடன்­பாடும் நாடா­ளு­மன்­றத்தில் வீற்­றி­ருந்த 225 பிர­தி­நி­தி­க­ளுக்கும் இல்­லை­யென அவர்கள் உணர்ந்­த­த­னா­லேதான் “225 வேண்டாம்” என்ற இன்­னொரு கோஷத்­தையும் முன்­வைத்­தனர். அந்த இளை­ஞர்­க­ளுக்கு முதலில் அஞ்­சலி செலுத்­தி­ய­பின்னர், அந்த அமைப்­புத்தான் என்ன என்­பதை விளக்­குவோம்.

தோற்றம் வேறு உள்­ள­டக்கம் வேறு
அந்த அமைப்பின் பன்­முக வடி­வங்­களுள் அர­சியல், பொரு­ளா­தாரம், நிர்­வாகம், சமூக கலா­சாரப் பன்­மைத்­துவம் என்­பன பிர­தா­ன­மாக அடங்கும். ஆனால் அவை ஒவ்­வொன்­றி­னதும் தோற்றம் வேறு, உள்­ள­டக்கம் வேறு. தோற்­றத்­திலே அர­சியல் என்­பது ஜன­நா­யக ஆட்­சி­யாக இருந்­தா­லும் அதன் உள்­ள­டக்­கத்தில் அது பெரும்­பான்மை இனத்தின் ஆதிக்க ஆட்­சி­யா­கவே இருக்­கி­றது. பொரு­ளா­தாரம் தோற்­றத்தில் சந்தைச் சக்­தி­களின் உரு­வாக்கம் என்­றாலும் உள்­ள­டக்­கத்தில் அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும், பண முத­லை­க­ளி­னதும், மாபி­யாக்­க­ளி­னதும் சிருஷ்­டி­யாகத் திகழ்­கி­றது. நிர்­வா­கத்­துறை அனைத்தும் நீதித்­துறை உட்­பட தோற்­றத்­திலே திற­மைக்கும் தகை­மைக்கும் முத­லிடம் வழங்கி சுயா­தீ­ன­மாகச் செயற்­ப­டு­வ­துபோல் தெரிந்­தாலும் உள்­ள­டக்­கத்தில் அது அர­சி­யல்­வா­தி­களின் கைப்­பொம்­மை­யாக மாறி­யுள்­ளது. இறு­தி­யாக, பார்­வைக்கு இலங்கை ஒரு பன்மைச் சமூ­க­மாகத் தெரிந்­தாலும் திரை­ம­றைவில் அந்தப் பன்­மையை ஒழித்து, பெரும்­பான்மை இனத்தின் தனிச்­ச­மூ­க­மாக மாற்றும் திட்­டங்கள் பெரு­கிக்­கொண்டு வரு­கின்­றன. இத்­த­னைக்கும் அடிப்­ப­டை­யாக நாட்டின் அர­சியல் யாப்பு அமைந்­துள்­ளது. அந்த யாப்பின் ஒரே அர­சியல் தத்­துவம் சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம். இத்­த­னை­யையும் உள்­ள­டக்­கிய ஓர் அமைப்­புத்தான் இலங்கை சுதந்­திரம் பெற்ற நாள் தொடங்கி இற்­றை­வரை இந்தப் புண்­ணிய பூமியை தினந்­தினம் சீர்­கு­லைத்து வந்­துள்­ளது. அதன் கைங்­க­ரி­யங்­களுள் சில­வற்றை மட்டும் கீழே பட்­டி­ய­லி­டுவோம்.

இன­நா­ய­கத்தின்
திரு­வி­ளை­யா­டல்கள்
ஒரு நூற்­றாண்­டுக்கும் மேலாக இந்­தி­யா­வி­லி­ருந்து கூலி­க­ளாக வெள்­ளைக்­காரத் தோட்ட முத­லா­ளி­களால் வர­வ­ழைக்­கப்­பட்டு அந்தக் கூலி­களின் உழைப்­பாலும் வியர்­வை­யாலும் ஏன் உதி­ரத்­தாலும் பெருந்­தோட்­டங்­களை உரு­வாக்கி வளர்த்து இந்த நாட்டின் அன்­னியச் செலா­வ­ணியைப் பெருக்­கிக்­கொ­டுத்த ஒரு சமூ­கத்தை சுதந்­திரம் கிடைத்­த­வு­ட­னேயே கள்­ளத்­தோ­ணி­க­ளெனப் பட்­டஞ்­கூட்டி அவர்­களை பிர­ஜா­வு­ரி­மை­யற்ற குடி­க­ளாக்கி விலா­சமே இல்­லாத ஒரு வெறும் மக்கள் கூட்­டாக மாற்­றிய இந்த ஆட்சி அமைப்பை ஜன­நா­யகம் என்­பதா இன­நா­யகம் என்­பதா?

அதே இன­நா­யகம்­தானே அடுக்­க­டுக்­காக தமிழ் மக்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றை­களைத் தூண்­டி­விட்டு 1983ல் ஓர் இன­ஒ­ழிப்பு இயக்­கத்­தையே உண்­டு­பண்ணி அது கடை­சி­யாக உள்­நாட்டுப் போர்­வரை சென்று இன்று பொரு­ளா­தா­ரத்­தையே வங்­கு­ரோத்­தாக்­கி­யுள்­ளது? அதே இன­நா­ய­கம்­தானே 2009க்குப் பின்னர் முஸ்­லிம்­க­ளையும் அன்­னி­ய­ரெனப் பட்­டஞ்­சூட்டி அவர்­க­ளுக்­கெ­தி­ரான கல­வ­ரங்­க­ளையும் திட்­ட­மிட்டு நடத்தி அந்த இனத்­தையும் நாட்­டை­விட்டே துரத்­து­வ­தற்குத் தூபம் போட்டது? இந்த இன­நா­ய­கத்தால் நாடு இழந்­த­வற்றை தொகை­வா­ரி­யாகக் கணக்­கி­டு­வது இய­லாத காரியம். ஆனால் அந்த இழப்பை இன்­றைய பொரு­ளா­தார நெருக்­கடி உல­குக்கே விளம்­ப­ரப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றதே. அது மட்டும் போதாதா?

இவை­மட்­டுமா? இன­நா­ய­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் நடை­பெற்ற பண­மோ­ச­டி­களும் பதுக்­கல்­களும் ஊழல்­களும் அனந்தம். உதா­ர­ணத்­துக்கு, அவற்றுள் சுமார் 53 பில்லியன் டொலர் பணத்தை உள்­நாட்டுப் பண­மு­த­லைகள் வெளி­நாட்டு வங்­கி­க­ளிலும் வரி­கட்டாத் துறை­மு­கங்­க­ளிலும் ஒழித்து வைத்­துள்­ளனர் என்று ஓர் அமைச்சர் அண்­மையில் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். இந்த நிலையில் அதே அள­வான ஒரு தொகைக்கு நாடு அன்­னி­ய­ரிடம் கடன்­பட்டு இன்று பிச்­சைப்­பாத்­தி­ர­மேந்தி யாச­க­னாகத் திரி­கி­றது என்­பதை எவ்­வாறு சரி காண்­பதோ?

இவ்­வாறு இன­நா­ய­கத்தின் திரு­வி­ளை­யா­டல்­களை ஒவ்­வொன்­றாக அடுக்­கிக்­கொண்டே செல்­லலாம். ஆனால் அந்த இன­நா­ய­கம்தான் இலங்­கையின் ஜன­நா­யகம் என்ற வடி­வத்தில் சுமார் எழு­பத்­தைந்து ஆண்­டு­க­ளாக இந்த நாட்டின் பொரு­ளா­தா­ரத்தைச் சீர்குலைத்து, இன அமை­தி­யையும் கெடுத்து, நாட்­டையே கட­னா­ளி­யாக்கி இன்று அன்­னிய சக்­தி­களின் கெடு­பி­டிக்குள் சிக்­க­வைத்­துள்­ளது. ஆட்­சி­யா­ளர்கள் மாறினர். ஆனால் ஆட்­சியின் உள்­ள­டக்கம் மாறவே இல்லை. அந்த அமைப்­பையே மாற்­றி­னா­லன்றி இந்த நாட்­டுக்கு விடி­வில்லை என்­பதை உணர்ந்த ஓர் இளம் சமு­தாயம் இப்­போது உரு­வா­கி­யுள்­ளது. அதன் தோற்­றத்­தைத்தான் காலி­மு­கத்­திடல் கடந்த ஆண்டு விளம்­ப­ரப்­ப­டுத்­தி­யது. அதன் விளை­வென்ன?

அமைப்­புக்குள் ஓர் அர­சியல் புரளி
2022 பங்­குனி மாதம் காலி­மு­கத்­தி­டலில் ஆரம்­ப­மான சுமார் ஆறு மாத கால இளைஞர் எழுச்சி 2011இல் கைரோ நகரின் தஹ்ரிர் சதுக்கம் கண்ட இளைஞர் எழுச்­சியின் ஒரு சிறு வடி­வமே. ஆனாலும் அவை இரண்­டி­னதும் கோஷங்­களின் ஒரே தத்­துவம் ஆட்சி அமைப்பு மாறி அனைத்து மக்­களும் கௌர­வத்­து­டனும் சுதந்­தி­ரத்­து­டனும் வாழ வழி வகுக்­கப்­படல் வேண்டும் என்­பதே. பழைய அமைப்பை மாற்­றாமல் அந்த வாழ்வு அமை­யாது என்­பதை அவ்­வி­ளை­ஞர்­களின் எழுச்சித் தாகம் உல­குக்கு எடுத்துக் கூறி­யது. ஆனால் நடந்­த­தென்ன? பழைய அமைப்­புக்­குள்­ளேயே ஓர் அர­சியல் புர­ளியை உண்­டு­பண்­ணி­யபின் அதே அமைப்பு அதன் கோர­வ­டி­வத்தை வெளிக்­காட்­டி­யபின் இன்னும் தொடர்­கி­றது.

இலங்­கையின் அமைப்­புக்குள் ஏற்­பட்ட அர­சியல் புரளி ஒரு ஜனா­தி­ப­தியை நாட்­டை­விட்டு விரட்­டி­யபின் இன்­னொரு பழைய முகத்­தைக்­கொண்டு அந்த வெற்­றி­டத்தை நிரப்­பி­யுள்­ளது. கோத்­தா­பய ராஜ­பக்­சவின் ஆச­னத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்ஹ. இந்தப் பழைய முகம் பழைய அமைப்­பையே பாது­காக்க எடுத்த முதல் நட­வ­டிக்கை மாற்றம் வேண்டும் என்­ற­வர்­களை பாது­காப்­புப்­படை கொண்டு அடக்கி அவர்­களின் தலை­வர்­க­ளையும் சிறைக்குள் தள்­ளி­ய­தாகும்.

கைரோ­விலே எகிப்தின் ஜனா­தி­பதி 800 உயிர்­களை கொன்று குவித்­தபின் பழ­மையை அரங்­கேற்­றினார். இலங்­கை­யிலோ அப்­ப­டி­யான ஒரு கொடு­மையைச் செய்­வ­தற்குத் தயங்­க­மாட்டேன் என்ற உறு­தி­யுடன் பழைய நாட­கத்­தையே புதிய கவர்ச்­சி­யுடன் விக்­கி­ர­ம­சிங்ஹ அரங்­கேற்­றி­யுள்ளார். உதா­ர­ண­மாக, பொரு­ளா­தாரப் பிணி அகல சர்­வ­தேச நாணய நிதியின் ஆத­ரவு வேண்­டு­மென்றார். உள்­நாட்டு வரி­களை உயர்த்தி அர­சாங்கச் செல­வு­களில் சிக்­கனம் காண­வேண்­டு­மென்றார். பொரு­ளா­தா­ரப்­பிணி ஒழிப்புப் போராட்­டத்­துக்கு இளை­ஞர்­களின் உதவி இன்­றி­ய­மை­யா­தது எனக் கூறி அவர்­க­ளுக்குப் பச்சைக் கொடி காட்­டினார். இப்­போ­ராட்­டத்­துக்கு நாடே ஒன்­று­பட வேண்­டு­மெனப் பறை­சாற்றி எல்லா இனங்­க­ளையும் ஒன்­று­படச் சொன்னார். தமி­ழர்­களின் தேசியப் பிரச்­சி­னையைத் தீர்க்­க­வென்று அதற்­கான ஆலோ­ச­னை­க­ளைப் ­பெற அனைத்துக் கட்­சி­களின் நாடா­ளு­மன்றப் பிர­தி­நி­தி­க­ளுக்கும் அழைப்பு விடுத்தார். இவை எல்லாம் நாட­கத்தின் கவர்ச்­சி­க­ர­மான வடி­வங்கள். ஆனால் அதன் கதா­பாத்­தி­ரங்­களும் கதையின் இன­நா­யக்­க­ருவும் பழை­ய­வையே. தோற்­றத்தில் மாற்றம். உள்­ள­டக்­கத்தில் எந்த மாற்­றமும் இல்லை. வரி­களை உயர்த்­தி­யவர் அந்த வரி­களை எவ்­வாறு ஊழ­லற்ற முறையில் திரட்­டு­வது என்­ப­து­பற்றி ஏதா­வது கூறி­னாரா? இந்த நாட­கத்தின் வெற்­றிக்­காக இளைஞர் சமு­தா­யத்­துக்குப் பச்சைக் கொடி காட்­டிய ஜனா­தி­பதி இள­வல்­களின் அமைப்பு மாற்றக் கோரிக்­கையை வார்த்தை ஜாலங்­களால் மட்டும் சரி­கண்­டு­விட்டு அதனை செயற்­ப­டுத்தத் தயங்­கு­வதேன்? இளை­ஞர்­களை விலை கொடுத்து வாங்­கவா? அமைப்பை மாற்­றாமல் இலங்­கையை, அதுவும் 2048இல், ஏற்­று­மதி வளம் கண்ட முதலாம் உலக நாடாக மாற்­றுவேன் என்று தனது 73ஆவது வயதில் கூறி­யது யாரை ஏமாற்­றவோ? சிலரை எக்­கா­லமும் ஏமாற்­றலாம், எல்­லா­ரையும் சில காலம் ஏமாற்­றலாம், ஆனால் எல்­லா­ரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடி­யாது. அதிலும் இந்த இளை­ஞர்கள் நிச்­சயம் ஏமாறப் போவ­தில்லை.

முஸ்லிம் தலை­மைத்­து­வத்தின்
உப நாடகம்
இன­நா­ய­கத்தின் சூழி­க­ளுடன் இணைந்து நீந்தி அர­சியல் அந்­தஸ்­து­டனும் சுய­பொ­ரு­ளா­தார வள­மு­டனும் கரை­யேற முனை­ப­வர்­களே முஸ்லிம் தலை­வர்கள். சிங்­கள பௌத்த, தமிழர் இன­நா­ய­கத்­துக்குப் பதில் முஸ்லிம் இன­நா­ய­க­மே­யன்றி இன­நா­ய­கத்­தையே ஒழித்தல் அல்ல என்ற மந்­தி­ரத்தை சதா உச்­ச­ரித்­துக்­கொண்டு அதற்­காகத் தனி­யா­கவோ கூட்­டா­கவோ தேர்தல் களங்­க­ளுக்குள் குதிக்க ஆயத்­த­மா­கின்­றனர் முஸ்லிம் பிர­ப­லங்கள். கடந்த வருடம் அமைப்­பையே மாற்று என்ற கோஷத்­துடன் முஸ்லிம் இளைஞர் உட்­பட அத்­தனை இள­வல்­களும் காலி­மு­கத்­தி­டலில் குவிந்­த­போது எந்த ஒரு முஸ்லிம் அர­சியல் பிர­பலம் அங்கு சென்று அவ்­வி­ள­வல்­களைச் சந்­தித்து உரை­யாடி சில ஆறுதல் வார்த்­தை­க­ளை­யேனும் கூறி­யது? அதுதான் போகட்டும், நாடா­ளு­மன்­றத்­தி­லேயும் ஒரு சில வார்த்­தை­க­ளை­யேனும் அவ்­வி­ள­வல்­களின் கோரிக்­கைக்கு ஆத­ர­வாக எந்த முஸ்லிம் தலைவன் பேசினான்? அவர்­களின் மௌனத்­துக்குக் காரணம் அவர்கள் எல்­லா­ருமே மதில் பூனைகள் அல்­லது காற்­றிலே பறக்கும் கட­தா­சிகள். மதில் பூனை இரை­காணும் பக்கம் பாயும். கட­தாசி காற்­றிலே பறந்து எங்­கே­யும்போய் எத­னு­டனும் ஒட்­டிக்­கொள்ளும். இதுதான் முஸ்லிம் தலை­மை­களின் உப நாடகம். இப்­போது பள்­ளி­வாசற் சம்­மே­ள­னங்கள் என்ற ஒரு புதிய அணி உரு­வாகி அதன் ஆத­ர­வில்­லாமல் எந்த அர­சியல் முடி­வு­க­ளுக்கும் முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் தலை சாய்க்கக் கூடா­தென்ற ஒரு நிபந்­தனை உல­வு­வ­தாக அறி­கிறோம். ஆனால் அமைப்­பையே மாற்ற வேண்­டு­மென்ற ஓர் இளைஞர் அணி­யுடன் இந்தச் சம்­மே­ள­னங்கள் இணை­யுமா?

அமைப்பை மாற்றும் பேரணி
இன்று வளரும் இளந் தலை­மு­றையை சரி­யாகப் புரிந்­து­கொள்­வது மூத்த தலை­மு­றையின் முக்­கிய பணி. நீண்ட தலை­மு­டியை வளர்த்து, தாடி­யுடன் கிழிந்த காற்­சட்­டையும் அணிந்து, உடம்­பெல்லாம் பச்சை குத்­திக்­கொண்ட ஆண் இள­வல்­களும், ஜீன்ஸ் கால் சட்­டை­யு­டனும் ரீசேட்­டு­டனும் பச்சையும் குத்திக் கொண்டு நடமாடும் பெண் குமரிகளும் முதியோர் பார்வைக்கு அலங்கோலங்களாகத் தோன்றினாலும் அந்த இளந் தலைமுறையின் அபிலாஷைகளும் கனவுகளும் சமூக ஈடேற்றங்காணத் துடிப்பன என்பதைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். உலக அரங்கிலே அவர்களின் கோரிக்கைகளின் தாக்கங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இயற்கையின் காலநிலை மாற்றங்கள் பற்­றிய புரிந்­து­ணர்­வுக்கும், சாதி, இன, மத, நிற பேத­மற்ற அர­சியல் அமைப்­புக்கும், பெண்­ணி­னத்தின் உயர்­வுக்கும், பொரு­ளா­தார ஏற்­றத்­தாழ்­வற்ற ஒரு சமு­தா­யத்­துக்கும் ஓயாது குரல் கொடுக்கும் ஒரு பேர­ணி­யாக இந்தத் தலை­முறை மாறி­யுள்­ளதை வாழ்க்­கையின் பின்­னே­ரத்தை அனு­ப­விக்கும் சந்­த­தி­யினர் உணர்தல் வேண்டும்.

அந்த இளம் சமுதாயத்தின் புதிய உலக காவியமொன்றின் இலங்கை அத்தியாயத்தையே காலிமுகத்திடல் இளைஞர்கள் அன்று எழுதத் தொடங்கினர். அவர்களின் பேனாவை பழமைவாதிகள் பிடுங்கி வீசினாலும் அவர்களின் சிந்தனையும் கை விரல்களும் மடிக்கணினியோடும் கையடக்கத் தொலைபேசியோடும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கின்றன. அவர்களின் பேரணியின் புதிய அத்தியாயத்தை இப்புதிய வருடம் வெளிப்படுத்தும். அமைப்பை மாற்றாமல் ஆட்சியாளர்களை மாற்றுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதை விரைவில் நாடே உணரும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.