சமூக சேவையாளரும் ஊடகத்துறைசார் பிரதிநிதியும் வீரகேசரி மற்றும் விடிவெள்ளி பத்திரிகைகளை வெளியிடும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட்டின் நிர்வாக இயக்குநருமான குமார் நடேசனுக்கு இந்தியாவின் அதி உயர் விருதான பிரவாசி பாரதீய சம்மான் விருது வழங்கப்படவுள்ளது.
பிரவாசி பாரதீய சம்மான் விருது என்பது வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் உயரிய கெளரவமாகும். இந்த விருது வழங்கும் வைபவம் எதிர்வரும் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினத்தின் அங்கமாக மத்தியப் பிரதேசத்திலுள்ள இந்தூரில் இடம்பெறவுள்ளது.
17 ஆவது தடவையாக வழங்கப்படும் இந்த விருதுகள் வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி தனிநபர்கள், இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளி தனிநபர்கள் ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்டு செயற்படுத்தப்படும் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அவர்கள் மேற்கொண்ட சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்திய ஜனாதிபதியால் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான பாரதீய சம்மான் விருதுகள் அந்த விருதுகள் தொடர்பான நடுவர்கள் சபையில் முன்வைக்கப்பட்ட விருது பெறுபவர்கள் பட்டியலைப் பின்பற்றி வழங்கப்படுகின்றன.
உப ஜனாதிபதியை தலைவராகவும் வெளிவிவகார அமைச்சரை உப தலைவராகவும் தமது வாழ்நாளில் பல்வேறு துறைகளில் தடம் பதித்த ஏனைய கீர்த்தி பெற்ற உறுப்பினர்களையும் கொண்ட மேற்படி விருதுகளுக்கான நடுவர் சபையால் இந்த ஆண்டுக்கான பிரவாசி பாரதீய சம்மான் விருதுகளுக்கான நியமனங்கள் பரிசீலிக்கப்பட்டு விருது பெறுவோர் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இம்முறை உலகளாவிய ரீதியில் 27 பேர் இந்த விருதுக்கு தெரிவாகியுள்ளனர். இதில் இலங்கையிலிருந்து சிவகுமார் நடேசன் (குமார் நடேசன்) இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குமார் நடேசன் பிரிட்டிஷ் பேரரசின் ஆணையைப் பெற்ற ஆர்.ஏ. நடேசனின் புதல்வராவார். கொழும்பில் பிறந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை கொழும்பு சென். தோமஸ் கல்லூரியிலும் உயர் கல்வியை சென்னை லோயலா கல்லூரியிலும் சென்னை பல்கலைக்கழகத்திலும் பயின்றார். அத்துடன் தொழில்நிலை பட்டப்படிப்பாகிய பரிஷ்டர் கற்கையை லண்டனில் கற்றார். அதனைத் தொடர்ந்து 15 ஆண்டுகள் இலங்கை உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக கடமையாற்றினார்.
குமார் நடேசன் கடந்த 22 ஆண்டு காலமாக வீரகேசரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக கடமையாற்றிவருகின்றார். அத்துடன் இந்திய வம்சாவளி மக்களின் உலகளாவிய அமைப்பின் (கோபியோ– இலங்கை கிளை) தலைவராக செயற்படுவதுடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் தலைவராக கடந்த 15 வருடகாலமாக பணியாற்றி வருகின்றார்.
இலங்கை, இந்திய நட்புறவு சங்கத்தின் தலைவராகவும் அவர் பணியாற்றியிருந்தார். ரோட்டரி கழகத்தின் கொழும்புக்கிளையின் அங்கத்தவராக திகழும் இவரது சேவையைப் பாராட்டி சர்வதேச ரோட்டரி கழகமானது ‘சுயவேலைக்கு மேல் சேவை’ என்ற பட்டமளித்து கெளரவித்திருந்தது. போதைப்பொருள் துஷ்பிரயோகத்துக்கு எதிரான தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவராகவும் இவர் பதவி வகித்துள்ளார். தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் தன்னார்வ தொண்டு குழுவின் முன்னாள் உறுப்பினராகவும் இவர் திகழ்ந்துள்ளார்.
இவர் சின்மயா மிஷன் நிர்வாக சபை உறுப்பினராக பணியாற்றியிருந்தார். இவ்வாறு பல்வேறு அமைப்புக்களிலும் அங்கத்துவம் வகித்து மக்கள் சேவையாற்றிவரும் குமார் நடேசனுக்கு இந்த விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.– Vidivelli