(ஏ.ஆர்.பரீல்)
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கட்டித்தின் வெற்றிடமாகவுள்ள மாடிகளுக்கு காதிகள் சபை, வக்பு ட்ரிபியுனல், அஹதியா பாடசாலைகள் தலைமையகம் மற்றும் முஸ்லிம் அரச நிறுவனங்களை இடம் மாற்றுமாறு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதியை உடனடியாக சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இக்கட்டிடத்துக்கு கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினை இடம் மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கையில்; தற்போது காதிகள் சபை வக்பு ட்ரிபியுனல், அஹதியா போன்ற முஸ்லிம் நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் செயற்பட்டு வருகின்றன. திணைக்களத்தின் வெற்றிடமாகவுள்ள மாடிகளுக்கு இவற்றை இடம் மாற்றுவது பொருத்தமானதாகும்.
முஸ்லிம் சமூகத்தின் அனைத்து விடயங்களையும் ஒரே குடையின் கீழ் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அண்மையில் பாராளுமன்றத்தில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருடன் இவ்விவகாரம் தொடர்பில் கலந்துரையாடினேன். ஆனால் அவர் ஒரு உறுதியான பதில் தரவில்லை. இது பற்றி யோசிக்கலாம் என்றே கூறினார். திணைக்கள கட்டிடத்தின் மாடிகள் வெற்றிடமாகவுள்ளதை சுட்டிக்காட்டினார். எனவே ஜனாதிபதியை உடனடியாக சந்தித்து எமது வேண்டுகோளை முன்வைக்கவுள்ளேன் என்றார்.
இவ்விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜிபுர் ரஹ்மான், எச்.எம்.எம்.ஹரீஸ், இசாக் ரஹ்மான் மற்றும் எம்.எச்.எம்.ஹலீம் ஆகியோரும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இயங்கிவரும் கட்டிடத்தின் ஒரு மாடியில் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினை இடம்மாற்றிக் கொள்வதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இம்மாத இறுதிக்குள் இப்பணிகள் முடிவுறுத்தப்பட்டு அடுத்த மாதம் முதல் கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம் இங்கு இயங்கவுள்ளது. இந்து சமய அலுவல்கள் திணைக்களமும் வெகுவிரைவில் கட்டிடத்தின் ஒரு மாடிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது. இந்து சமய அலுவல்கள் திணைக்களம் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இக்கட்டிடத்துக்கு வழங்கப்படும் வாடகையை நிறுத்திக்கொள்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது. – Vidivelli