நன்றி: த ஐலண்ட் ஆசிரியர் தலையங்கம்
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்
பிரபல பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரான் எனப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான் பிணையில் விடுவிக்கப்பட்ட மறுதினம் இந்திய ஊடகங்களின் தகவல்களின்படி இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். அதாவது பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் தப்பியோடியுள்ளார்.
கஞ்சிபானை இம்ரான் இவ்வாறு இந்தியாவுக்குள் தப்பியோடியுள்ளமை ஓர் அதிர்ச்சியான தகவல் அல்ல. அவர் இலங்கையில் தங்கியிருந்து தனக்கெதிரான வழக்கினை எதிர்கொள்வாரென எவரும் எதிர்பார்க்கவில்லை. நாட்டில் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் ‘பாடசாலை பிள்ளைகளை போதைப்பொருளிலிருந்தும் காப்பாற்றுவதற்காக அரசு மும்முரமாக செயலில் இறங்கியுள்ள நிலையில் கஞ்சிபானை இம்ரானின் தப்பியோட்டம் நிகழ்ந்துள்ளது.
இலங்கை பொலிஸாரும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொலிஸாரும் இணைந்து கஞ்சிபானை இம்ரானையும், மற்றொரு போதைப்பொருள் குற்றவாளியான மாகந்துர மதுஷையும் கைது செய்வதற்கு மும்முரமாக செயற்பட்டார்கள். மாகந்துர மதுஷ் குற்றச்செயல்களின் இலங்கை நெப்போலியின் என அழைக்கப்பட்டவனாவான். அவர்கள் இருவரும் 2019 ஆண்டு டுபாயில் கைது செய்யப்பட்டடார்கள். டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட அவர்கள் இலங்கையில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்கள்.
அக்காலத்தில் இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன இலங்கையில் போதைப்பொருளுக்கு எதிரான யுத்தத்திற்கு தலைமைத்துவம் வழங்கினார். என்றாலும் எதிர்பாராதவிதமாக இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நாட்டின் போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாடுகளை ஸ்தம்பிதமடையச் செய்தது.
நாட்டிலிருந்தும் சூட்சுமமாக தப்பியோடிச் சென்றுள்ள கஞ்சிபானை இம்ரான், வெளிநாடுகளில் பல போதைப்பொருள் மன்னர்கள் செயற்படுவது போன்று தனது போதைப்பொருள் விநியோக செயற்பாடுகளையும் முன்னெடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.
குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கஞ்சிபானை இம்ரானைக் கைது செய்வதற்கு டுபாயில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் இந்தியாவிலும் முன்னெடுக்கப்படவேண்டும்.
பாதாள உலக கோஷ்டியுடன் தொடர்புபட்டவர்கள் அரசியல் பின்புலத்தின் மூலமே தொடர்ந்தும் சட்டத்தின்பிடியில் சிக்காது தப்பித்து வருகின்றனர். அவ்வாறு சட்டத்தின்பிடியில் சிக்குண்டாலும் ஏதோவொரு வகையில் தப்பித்துக் கொள்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ‘குடுலால்’ என அறியப்படும் போதைப்பொருள் மன்னன் இலங்கையில் வெளியேறுவதற்கும் அனுமதிக்கப்பட்டார். குடுலால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அப்போதிருந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரின் உதவியுடன் வெளியேறினார். குடுலால் களனியவை இலங்கையின் போதைப்பொருள் தலைநகரமாக மாற்றியிருந்தவராவார். சம்பந்தப்பட்ட அமைச்சர் குடுலாலை விமான நிலையத்தில் பயணிகள் விமானமேறும் வழி வரை அழைத்துச் சென்றார்.
எமது நாட்டில் அரசியலும் குற்றச் செயல்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. ஆட்சியதிகாரத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் இந்நிலைமையே தொடர்கிறது. 2015 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது கஞ்சிபானை இம்ரான் பலம் வாய்ந்தவராக இருந்தார். பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உட்பட அரசியல்வாதிகள் தங்களது பதவிநிலைகளை மறந்து கஞ்சிபானை இம்ரானின் போதைப்பொருள் பணத்தை செலாவணியாக மாற்றிக்கொள்வதற்கு உதவியாக இருந்தார்கள். கஞ்சிபானை இம்ரான் ஒரு ‘கெப்’ சேவை உட்பட மேலும் பல வர்த்தகங்களில் முதலீடுகளைச் செய்வதற்கு உதவியாக இருந்தார்கள். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சில முன்னணி தலைவர்கள் இம்ரானின் வியாபார நிலைய திறப்பு நிகழ்வுகளில் விசேட அதிதிகளாகக் கலந்து கொண்டார்கள். இவர்களில் சிலர் தற்போது ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் அங்கம் வகிக்கின்றனர்.
தற்போது கஞ்சிபானை இம்ரான் இலகுவாக தப்பியோடியுள்ளார். இம்ரானின் அரசியல் நண்பர்கள் இதற்கு ஒத்துழைத்துள்ளார்கள். வழக்கு விசாரணை இடம்பெற்றால், சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் இனங்காணப்படுவார்கள். இந்நிலைமையே இம்ரானை தப்பியோடச் செய்திருக்கிறது என ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
இம்ரான் ஒரு வகையில் அதிஷ்டசாலி, அவர் அவரது பாதாள உலக நண்பர் மாகந்துரமதுஷைப் போன்று மடிந்துவிடவில்லை. கொல்லப்பட்டுவிடவில்லை. மாகந்துர மதுஷ் பொலிஸாரின் துப்பாக்கிப்பிரயோகத்துக்கு இலக்காகி மரணித்தார்.
மாகந்துர மதுஷை போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த இடத்துக்கு அழைத்துச் சென்ற சந்தர்ப்பத்திலே பாதாள உலகக்கோஷ்டிக்கும், பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சமரில் அவர் கொல்லப்பட்டார்.
பல அரசியல்வாதிகள் மதுஷிடமிருந்து அவர்களது சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் அரசியல் செலவுகளுக்கும் பெருமளவு உதவிகளையும் நிதியினையும் பெற்று வந்தனர். மதுஷ் மூலம் தங்களது மோசமான செயற்பாடுகள் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பதனாலேயே அவர் இந்நிலைக்கு ஆளாக்கப்பட்டார்.
அரசியல்வாதிகளுக்காக செயற்படும், பணிபுரியும் அனைத்து பாதாள உலக கோஷ்டி மன்னர்களும் அரசியல் வாதிகளால் ‘கருவேப்பிலை’ போன்றே கருதப்பட்டார்கள். தங்கள் தேவைக்குப் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியப்பட்டார்கள்.
கோணவல–சுனில் ஒரு கொலைகாரன். கற்பழிப்பவன். இவன் ஐக்கிய தேசியக்கட்சியின் இழிவான வேலைகளையே செய்து கொண்டிருந்தான். அவன் தனது அரசியல் தலைவர்களுக்கெதிராக மாறியதால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஒப்பந்தக்காரனும், கொள்ளை மற்றும் பலாத்கார செயல்களில் ஈடுபட்டவனுமான பெந்ேதகன சஞ்ஜீவ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசுக்கு விசுவாசமாக செயற்பட்டவன். என்றாலும் அவன் தனது எல்லையை மீறி செயற்பட்டதனால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
மேலும் வம்பொட்டா, பிரின்ஸ் கொலொம் என்போரும் வன்முறை சாவுகளையே எதிர்கொண்டனர். இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு அரசாங்கத்துடன் நெருங்கி செயற்பட்டவர்களாவர்.
இது போன்று பல பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் அரசியலுடன் தொடர்பு பட்டவர்களாக இன்றும் இருக்கின்றனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடாத்தப்படும் கால கட்டத்தில் இவர்கள் விழிப்படைவார்கள், சுறுசுறுப்பாக செயற்படுவார்கள்.
சில குற்றவாளிகள் எவ்வாறேனும் தப்பித்துக் கொள்கிறார்கள், தப்பியோடிவிடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளே. அவர்களுக்கு சாதகமான பொய்யான காரணங்கள் சிருஷ்டிக்கப்படுகிறது. மோசடி அரசியல்வாதிகள் இவ்வாறான குற்றவாளிகளுக்கு உதவி செய்கிறார்கள். இதனால் பொலிஸாரினால் குற்றச்செயல்களுக்கு எதிராக செயற்படுவதில் சிக்கல்கள் உருவாகின்றன. – Vidivelli