உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை முதல் 21ஆம் திகதி சனிக்கிழமை வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த ஆணைக்குழு உத்தேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு கோரப்பட்டுள்ள போதிலும் நாட்டின் பொருளாதார நிலைமை, ஆட்சியிலுள்ள தரப்பினரின் விருப்பு வெறுப்புகளைத் தாண்டி இத் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகமும் நிலவுகிறது.
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் கடந்த வருடம் முடிவுக்கு வந்த நிலையில் ஒரு வருடம் நீடிப்பு வழங்கப்பட்டது. அதுவும் நிறைவுக்கு வருகின்ற நிலையிலேயே தேர்தலை நடாத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனினும் நாட்டு நிலைமைகளை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைத்தால் அது தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இதனிடையே தேர்தலை நடத்தக் கூடாது என்றும் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக சிக்கல்களுக்கு மத்தியிலேயே வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு இன்னும் இரண்டு வார காலங்களே மீதமிருக்கின்ற நிலையில் அரசியல் கட்சிகளும் அதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. கட்சிகளுக்கு உள்ளேயும் கட்சிகளுக்கு இடையேயும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில்தால் முஸ்லிம் கட்சிகளும் இது குறித்த பேச்சுக்களிலும் வேட்பாளர் தெரிவுகளிலும் தமது கவனத்தைச் செலுத்தியுள்ளன. கடந்த முறை சுமார் 9000 பேர் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டனர். இதனால் இவர்களுக்காக மாதாந்தம் பெருந்தொகைப் பணத்தை சம்பளமாக வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. இதனைக் கருத்திற்கொண்டு நடைபெறவுள்ள தேர்தலில் 4000 பேரே உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர். இதற்கமைய எல்லை நிர்ணயமும் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் மீளமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் முஸ்லிம் பிரதேசங்களிலும் இறுதியாக பதவி வகித்தவர்களில் அரைவாசித் தொகையினரே தெரிவு செய்யப்படுவர். எண்ணிக்கையில் குறைவு ஏற்படுவது ஒரு பிரச்சினையல்ல. ஆனால் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே நமது கரிசனையாகும்.
குறிப்பாக உள்ளூராட்சித் தேர்தல்களில் பிரதேசத்தில் சமூகப் பணிகளில் ஈடுபடுபவர்கள், ஆசிரியர்கள், அரசியல் கட்சிகளின் தீவிர ஆதரவாளர்கள், வியாபாரிகள், உலமாக்கள் என பலதரப்பட்டோரும் போட்டியிடுவது வழக்கம். இவர்களில் மக்களுக்காக தம்மை அர்ப்பணித்து சேவையாற்றக் கூடிய, ஊழலற்ற, நேர்மையானவர்களை வேட்பாளர்களாக களமிறக்க வேண்டியது அரசியல் கட்சிகளினதும் சுயேட்சைக் குழுக்களினதும் பொறுப்பாகும்.
கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக பதவி வகித்தவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. ஊழல் மோசடிகள், போதைப் பொருள் வர்த்தகம், குற்றச் செயல்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடைய பலர் ஒவ்வொரு பிரதேசத்திலும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறானவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்படக் கூடாது. அவர்களுக்குப் பதிலாக பிரதேசத்தில் மக்களின் நன்மதிப்பை வென்ற, நேர்மையான மனிதர்கள் வேட்பாளராக களமிறக்கப்பட வேண்டும்.
பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்குரியதாகும். அப் பொறுப்பை சரிவர நிறைவேற்றக் கூடிய, அதே பகுதியில் மக்களோடு மக்களாக வசிக்கின்ற, சபை அமர்வுகளில் தொடர்ச்சியாக பங்கேற்று மக்களது பிரச்சினைகளைப் பேசுகின்றவர்களுக்கே உரிய இடம் வழங்கப்பட வேண்டும். அதேபோன்று இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கும் கணிசமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
இதனை மேலும் வலியுறுத்தும் வகையில் முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பங்குபற்றுதலுடன் வேட்பாளர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான பிரகடனம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அவை இன்றைய விடிவெள்ளியில் பிரசுரமாகியுள்ளன. குறித்த பிரகடனத்தில் உள்ள வழிகாட்டல்களையும் அரசியல் கட்சிகள் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டியது வரவேற்கத்தக்கதாகும்.
எனவேதான் முஸ்லிம் பிரதேசங்களில் சிறந்த வேட்பாளர்களை களமிறக்குவதற்கான அழுத்தங்களை அவ்வப்பகுதி சிவில் சமூகம் வழங்க முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli