கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
இலங்கை முஸ்லிம்களின் இன்றைய தலைமைத்துவத்தைப்பற்றியும் முஸ்லிம் சமூகத்தைப்பற்றியும் அவை இரண்டுக்குமுள்ள உறவுபற்றியும் இதற்கு முன்னரும் இப்பத்திரிகையிற் சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன. எனினும் இன்று நாடு போகின்ற போக்கினையும் அதனால் ஏற்படப்போகும் ஒரு தவிர்க்கமுடியாத மாற்றத்தின் தேவைபற்றியும் அது சம்பந்தமான முஸ்லிம் சமூகத்தினதும் அதன் தலைமைத்துவத்தினதும் நிலைப்பாடு பற்றியும் எழுந்த ஓர் எண்ணக்கருத்தினை வாசகர்களுடன் இக்கட்டுரை பகிர்ந்துகொள்ள விரும்புகிறது.
தலைவர்கள் இருவகை
ஒரு சமூகத்தின் தலைவர்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம். ஒரு வகையினர் சமூகத்தின் பொதுஜன அபிப்பிராயம் எதை விரும்புகிறதோ அதையே எவ்வழியிலேனும் நிறைவேற்றிக் கொடுத்து சமூகத்தின் பாராட்டுக்களைப் பெறுபவர்கள். அடுத்த வகையினர் சமூகத்தின் எதிர்கால நிலையென்ன, அதற்கான அதன் தேவைகளென்ன என்பதை உணர்ந்து அவற்றை அடைவதற்காக இன்றைய நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி எதிர்கால முன்னேற்றத்துக்கு வழிவகுத்துக் பொடுப்பப்பவர்கள். இவ்வாறான தலைவர்களுக்கு சென்ற கால வரலாற்றைச் சரியாகப் புரிந்துகொண்டு நிகழ்காலச் சம்பவங்களை அவதானித்து வருங்காலம் பற்றிய தெளிவான சிந்தனை அவசியம். கம்பனின் இராமாயணத்திலே தசரதனின் அமைச்சர்களைப்பற்றி அவன் வருணிக்கையில் “மும்மையும் உணரவல்லார்” என்று கூறியது நினைவுக்கு வருகிறது. இவர்களை பொது ஜனங்கள் பாராட்டாவிட்டாலும் வரலாறு நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.
உலக முஸ்லிம்களின் நவீனகால வரலாற்றில் மூன்று தலைவர்களை இரண்டாவது வகையினருக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். துருக்கியின் தந்தை முஸ்தபா கமால், எகிப்தின் அப்துல் நாசர், மலேசியாவின் முகம்மது மஹாதிர் ஆகியோரே அம்மூவருமாவார். உதுமானியரின் இஸ்லாமிய கிலாபத்தின் வரலாற்றையும் அதனால் துருக்கி அடைந்த இழப்புக்களையும் உணர்ந்த கமால் அதனையும் அதுவளர்த்த அரபுமொழியையும் தூக்கிவீசி எறிந்துவிட்டு Nசியம் என்ற அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் துருக்கிமொழியை அரச மொழியாக்கி ஐரோப்பிய அரசியல் விழுமியங்களைத் தழுவி நாட்டைக் கட்டியெழுப்பியவர் கமால் அத்தாதுர்க். அவரை இன்று வரலாறு புகழ்கின்றது.
நெப்போலியனின் படைகளால் முற்றுகையிடப்பட்டு பின்னர் பிரித்தானியரின் குடியேற்ற நாடாக மாறி அவர்களின் கைப்பொம்மையாக ஆடிய மன்னர் பாருக்கின் ஆட்சியில் இன்றைய இலங்கையைப் போன்று கடனாளியாக மாறிக்கிடந்த எகிப்தை அரபு மக்களின் எழுச்சிக் கீதம்பாடி ஒரு பலமான நாடாக மாற்றி உலக அரங்கில் அழியாத்தடம்பதித்த ஜமால் அப்துல் நாசரை வரலாறு மறுக்குமா? அவரைப்போன்றே வளமுள்ள சுதந்திர நாடாக இருந்தும் இஸ்லாம் என்ற போர்வைக்குள் வறுமையின் அடையாளமாகக் கிடந்த மலேசிய மலாய் மக்களை நவீன வளர்ச்சிப்பாதையில் திருப்ப நினைத்து அவர்களின் சிந்தனையையே மாற்றியமைத்த மகாதிர் முகம்மது அடுத்த ஓரு சிறந்த எடுத்துக்காட்டு. ஆனாலும் இவர்களெல்லாருமே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளின் தலைவர்கன். ஏன்றாலும் முக்காலத்தையும் உணரும் திறன் அவர்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று நினைப்பது தவறு.
இலங்கையில் இருவர்
முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இலங்கையிலும் அவ்வாறான தலைவர்கள் உருவாகித்தான் இருக்கிறார்கள், இன்னும் உருவாகவேண்டும் என்பதைத்தான் இக்கட்டுரை தொடர்ந்து அலசப் போகின்றது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலே ஒருவர், இருபதாம் நூற்றாண்டின் மூன்றாம் கால்வாசியில் மற்றொருவர் என்றவாறு முக்காலமும் உணர்ந்து வழிகாட்டிய இரு தலைவர்களை இலங்கை முஸ்லிம்கள் பெற்றிருந்தனர். ஒருவர் அறிஞர் சித்தி லெப்பை, மற்றவர் பதியுத்தின் மஹ்மூத் ஆவர். முதலாமவர் இல்லையென்றால் முஸ்லிம்களின் கல்வி ஆலிம்களை மட்டும்தான் உருவாக்கிக் கொண்டிருந்திருக்கும். கொழும்பு சாஹிராக்கல்லூரியே உருவாகி இருக்காது. அக்கல்லூரி இல்லையென்றால் இக்கட்டுரையாளனே உருவாகி இருக்கவும் மாட்டான். அதேபோன்று இரண்டாமவர் இல்லையென்றால் இன்றைய உயர் உத்தியோகத்தோர்களும் புத்திஜீவிகள் பரம்பரை ஒன்றும் முஸ்லிம்களிடையே வளர்ந்திருக்காது.
இந்த இருவருள் இரண்டாமவர் எவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் அன்றைய நிலையைச் சரியாகப் புரிந்துகொண்டு அந்த நிலையே தொடருமானால் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம் கையேந்திப் பிச்சையெடுக்கும் ஒரு சமூகமாகவே மாறும் என்பதை உணர்ந்து அவர் எடுத்த சில துணிகரமான நடவடிக்கைகள் பலவற்றை இக்கட்டுரையாளன் நேரிலே கண்டறிந்தவன். அது மட்டுமல்ல. அதைப்பற்றி அவர் என்னுடன் நேரிலே கலந்துரையாடியதையும் இங்கே நினைவுகூர வேண்டியுள்ளது. அவ்வாறு அவர் எடுத்த ஒரு நடவடிக்கையைமட்டும் இங்கே உதாரணத்துக்காக விளக்குவோம்.
அது இலங்கையின் இடதுசாரிகள் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைத்த காலம். அந்த அரசாங்கத்தில் பதியுத்தீன் மஹ்மூத் கல்வி அமைச்சராகக் கடமையாற்றினார். அந்த அரசாங்கத்தினால் பல பொருளாதாரத்துறைகள் அரச உடைமைகளாக மாறின. அவற்றுள் வர்த்தகமும் ஒன்று. வர்த்தகத்துடனேயே இலங்கையில் குடியேறிய முஸ்லிம்கள் அதனையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டு பரம்பரை பரம்பரையாக வழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களின் ஜீவனோபாயத்துக்கு இடி விழுந்ததுபோல் அமைந்தன அரசின் சில நடவடிக்கைகள். முஸ்லிம்கள் கொதிப்படைந்தனர். அந்தச் சூழலிலேதான் 1972ல் ஒரு நாள் பின்னேரம் கொழும்பு முஸ்லிம் தலைவர்களை ஒரு சிற்றுண்டிக்கு வருமாறு அமைச்சர் தனது இல்லத்துக்கு அழைத்தார். அங்கே அவர்களைப்பார்த்து அமைச்சர் கூறிய அனைத்தையும் ஒரே வரியிலே சுருக்கினால், “எதிர் நீச்சல் போடவேண்டாம், எதிர்காலத்தை உணர்ந்து உங்கள் பாதையை மாற்றிக் கொள்ளுங்கள்”என்பதாகும். அந்தப்பாதை எது என்பதை தனது அமைச்சின்மூலம் எடுத்துக்காட்டியவர் அப்பெருந்தலைவர். சலுகைகளால் வளர்ந்த ஒரு சமுதாயத்தை மற்றைய இனங்களுடன் போட்டிபோட்டு முன்னேறும் சமுதாயமாக மாற்ற விளைந்தவரே பதியுத்தீன். இந்தப் பின்னணியிலேதான் இன்றைய முஸ்லிம் தலைமைத்துவத்தைப்பற்றிய ஒரு கருத்தினை வாசகர்களின் சிந்தனைக்கு முன்வைக்கிறது இக்கட்டுரை. இது ஒரு தூரத்துப்பார்வையாளனின் கருத்தென்றாலும் இலங்கையின் தினசரி நிகழ்வுகளை கூர்ந்து அவதானிக்கும் ஒரு சமூகநேசனின் பார்வை என்பதையும் நினைவிற் கொள்ளுதல் நல்லது.
மாறிவிட்ட சூழல்
அறிஞர் சித்தி லெப்பையின் தலைமைத்துவமும் வழிகாட்டலும் பிரித்தானியரின் குடியேற்ற நாடாகக் கிடந்த இலங்கையில் சகோதர சமூகங்களிடையே ஏற்பட்ட கலாசார விழிப்புணர்வின் எதிர்காலத் தாக்கங்களைச் சரியாகப் புரிந்துகொண்டதால் ஏற்பட்டவை. அதேபோன்று பதியுத்தீனின் வழிகாட்டல் சுதந்திர இலங்கை அரசியலில் மட்டுமல்லாது பொருளாதாரத் தன்னிறைவுடன் சமதர்மக் கொள்கையின் அடிப்படையில் நடைபோடும் ஒரு எதிர்காலத்தை உணர்ந்து அதற்கேற்ப தனது சமூகத்தைத் தயார்படுத்தும் நோக்கில் அமைந்த ஒன்று. அவரின் அமைச்சில் கல்விப் பொதுத்தராதரப் பரீட்சையில் ஐந்து பாடங்களில் மட்டும் சித்தியடைந்த முஸ்லிம் பெண்களுக்கு ஆசிரியத் தொழில் வழங்கியதை கண்டித்து அது முஸ்லிம்களின் கல்வித்தராதரத்தை எதிர்காலத்தில் குறைக்கும் என்று கருதி அவரிடம் இக்கட்டுரையாளன் சென்று முறையிட்டபோது, “நான் இன்று அவளுக்கு உத்தியோகம் வழங்கினால் நாளைக்கு அவள் தனது பிள்ளையை கடைச் சிப்பந்தியாக்க மாட்டாள், கல்வியிலே முன்னேற வழிகாட்டுவாள்” என்று அவர் கூறிய வார்த்தைகள் என் காதுகளில் இன்னும் ரீங்காரம் செய்கின்றன. ஆனால் இன்றையச் சூழலோ வேறு.
சுதந்திர இலங்கை ஒரு சமதர்ம ஜனநாயக நாடென்ற நிலை கைவிடப்பட்டு அது சிங்கள பௌத்த இனவாதத்தின் கோட்டையாக மாறி இந்த நாடு சிங்கள மக்களுக்கு மட்டுமே சொந்தம், ஆதலால் மற்றைய இனங்கள் சிங்களவர்களின் நீண்டகாலக் குத்தகைக் குடிகள் என்ற கொள்கையால் எந்த வழியிலும் முஸ்லிம்கள் முன்னேற முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வர்த்தகம் செய்யவும் தடை, விவசாயம் செய்யவும் தடை, உத்தியோகம் பார்க்கவும் தடை என்றவாறு முஸ்லிம்களுக்கு அடிமை விலங்கு பூட்டப்பட்டுள்ளது. அது சட்டத்தினால் பூட்டப்பட்ட விலங்கல்ல. பெரும்பான்மை இயக்கங்களின் பலாத்காரத்தினாலும் திரைமறைவில் அவைகளுக்கிருக்கும் அரசியல் ஆதரவினாலுமே பூட்டப்பட்ட ஒன்று. எனவே இது ஒரு புதிய சூழல்.
இதனை இன்றைய முஸ்லிம் தலைமைத்துவங்கள் உணராமலில்லை. ஆனால் அந்தக் கோட்டையைத் தகர்த்தெறியச் சக்தியில்லாமலும் அதற்கான வழிவகையையேனும் அறிய முடியாமலும் அதே சமயத்தில் அந்தக் கோட்டைக்குள்ளே எப்படியாகிலும் ஒரு மூலையிலே குந்திக்கொண்டு முஸ்லிம்களின் உரிமைக்காகப் போராடுவோம் என்று மேடைப்பேச்சுப் பேசும் தலைமைகளின் ஒரு வெட்கக்கேடான நிலைப்பாட்டில் முஸ்லிம் சமூகம் சிக்கித் தவிக்கிறது. இந்தக் குற்றச்சாட்டை எத்தனையோ உதாரணங்களைக்கொண்டு உறுதிப்படுத்த முடியும். ஆனால் இரண்டைமட்டும் இக்கட்டுரை இங்கே சுட்டிக்காட்டுகினறது.
முதலாவது, .கெொவிட் கொள்ளைநோய் பரவியபோது அதனால் மரணித்தவர்களை தகனம்செய்ய வேண்டுமென எடுக்கப்பட்ட அன்றைய ஜனாதிபதியின் முடிவு சிங்கள பௌத்த பேரினவாதத்தின் முடிவேயன்றி வேறில்லை. அப்பேரினவாதத்தின் பாதுகாவலனாக இயங்கியவர் அந்த ஜனாதிபதி. அம்முடிவினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களே. ஓட்டமாவடியின் மஜ்மா நகர் அதற்கோர் அழியாச் சின்னம். அந்த முடிவினை எதிர்ப்பதற்காக நாலு வர்த்தைகளை பட்டும் படாமலும் நாடாளுமன்றத்தில் பேசிவிட்டு அத்துடன் அமைதி கண்ட முஸ்லிம் தலைமைகளின் கோழைத்தனத்தை என்னென்று வார்த்தைகளால் விபரிப்பதோ? அது மட்டுமா, ஒரு வருடத்தின் பின்னர் உலக அரங்கு அந்த முடிவை கண்டிக்கும் வரை முஸ்லிம் தலைமைகள் மௌனிகளாய் இருந்தமை ஒருபுறமிருக்க, அந்த முடிவை எடுத்த ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் அதிகரிகரிப்பதற்குக் கைதூக்கிய அவமானத்தை எந்த அளவுகோலால் அளப்பதோ?
இரண்டாவதாக, மஹர சிறைச்சாலை வளாகத்துக்குள் அமைந்திருந்த பள்ளிவாசலை அபகரித்தவர்கள் சிறைச்சாலை அதிகாரிகளல்ல அவர்களுக்குள் புதைந்துகிடந்த சிங்கள பௌத்த பேரினவாதம். அதை எதிர்த்து ஒரு கடிதம் சமர்ப்பித்தோம், அதற்கென்ன நடந்தது என்று ஒரு முஸ்லிம் தலைமை இரண்டொரு நாட்களுக்கு முன் ஞாபகப்படுத்தியது ஞாபகம் வருகிறது. ஐயோ பரிதாபமே! இது காலம்; கடந்துவிட்ட கதறல் ஐயா. அப்பள்ளிவாசல் பறிபோன ஒரு சில நாட்களுக்குள் அன்றைய அமைச்சர் ஒருவர், (அவர் இப்போதும் அமைச்சராக இருக்கும் பாக்கியசாலி) நாடாளுமன்றத்தில் எழுந்துநின்று அப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துவைப்போம் என்று அறைகூவினார். அத்தேர்டு நமது முஸ்லிம் தலைமைகளும் அமைதியடைந்தன. இன்று ஒரு கடிதத்தை ஞாபகப்படுத்துவது எதனைச் சாதிப்பதற்காகவோ?
ஒன்றை மட்டும் இத்தலைமைகள் உணரவேண்டும். அதாவது சிங்கள பௌத்த பேரினவாதக் கோட்டை தகர்த்தெறியப்படாமல் உங்களால் உங்களின் சமூகத்துக்காக எதையும் சாதிக்க முடியாது. வேண்டுமானால் அந்தக் கோட்டைக்குள் அமர்ந்துகொண்டு அமைச்சர் பதவிகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். அந்தப் பதவிகளால் நீங்களும் உங்களின் உறவுகளும் உங்களின் கைக்கூலிகளும் சம்பாதிக்கலாமே ஒழிய சமூகம் நன்மை அடையப் போவதில்லை. இது சுமார் நாற்பது வருடத்துக்கும் மேலான ஒரு கதை.
எங்கள் மக்களின் விவசாயக் காணிகள் பறிக்கப்படுகிறதே பள்ளிவாசல்களின் முன் புத்தர் சிலைகள் எழுகிறதே என்று நாடாளுமன்றத்துக்குள் இப்போது எழுந்து நின்று ஒப்பாரி வைப்பதால் எந்தப் பயனும் இல்லை சீமான்களே. உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் கிடைத்தபோது அதனையும் நழுவ விட்ட பெருந்தகையீர் நீங்கள். அது எப்படி எப்போது வந்ததென்று தெரியுமா?
இந்த வருடத்தின் புனித நோன்பு மாத காலத்தில் காலிமுகத்திடலிலே பௌத்த சிங்கள இளைஞர்கள் அந்தச் சந்தர்ப்பத்தை உங்களுக்கு வழங்கினார்கள். உங்களின் தலைமைத்துவத்தை நாடி அல்ல. உங்கள் மக்களின் நலனுக்காக அவ்விளைஞர்களின் ஒரே கோரிக்கையான அமைப்பு மாற்றம் வேண்டும் என்பதை நாடாளுமன்றத்துக்குள் குரலெழுப்பி அதற்காக உங்களைப் போராடச்செய்யவும் அதே சமயம் அந்தக் கோரிக்கைக்குப்பின்னால் உங்கள் மக்களை கிளர்ந்தெழச் செய்யவுமே. நீங்களோ வேடிக்கை பார்த்து நின்றீர்கள் ஐயா. காரணம் அந்த அமைப்பிலே உங்களின் சுயநயம் தங்கி இருக்கிறது. இதனை மறுப்பீர்களா?
அந்த இளைஞர்கள் உணர்ந்த ஒரு மகத்தான உண்மையை உங்களால் விளங்கவும் முடியாமல் போனதே என்பதை நினைக்க வருத்தமாக இருக்கிறது. அவர்கள் சுட்டிக்காட்டிய அந்த அமைப்புக்குள் அடங்கி இருந்ததையா சிங்கள பௌத்த போரினவாதம். அந்தக் கோட்டைக்குத் தீவைத்து ஒரு புதிய இலங்கையையே கட்டியெழுப்பவென்று புறப்பட்ட ஒரு புனிதப் படைதான் அந்த இளைஞர்கள். இப்போது அந்தப் படையினரால் நன்மையடைந்தபின்னர் அதற்குத் துரோகியாக மாறி, அந்தப் படையையே ஒடுக்கியடக்கி, அதன் தலைவர்களையும் சிறைக்குள் தள்ளி, இனிமேலும் அப்படியொரு கோரிக்கை எழாதவண்ணம் வழிவகுத்திருக்கும் புதிய ஜனாபதிக்குக் குடை பிடிக்கிறீர்களே, உங்களின் தலைமைச் சிறப்புக்கு எந்தக் கவிதான் காப்பியம் படைக்குமோ தெரியாது.
முஸ்லிம் சமூகம்
எடுக்கவேண்டிய ஒரு முடிவு
புதியதொரு சமுதாயம் இலங்கையில் உருவாக வேண்டுமென சிங்கள பௌத்த இளைஞர்கள் விழித்தெழுந்துள்ளனர். அதற்குப் புதியதொரு தலைமைத்துவமும் உருவாக வேண்டும் அல்லது உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் அவர்களின் “225 வேண்டாம்” என்ற சுலோகம் வெளிக்காட்டியது.
அதற்கமைய முஸ்லிம் சமூகமும் மாறவேண்டும். நூறு பச்சோந்திகளைத் தெரிந்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதைவிட தேசப்பற்றுடன் காலத்தையும் சூழலையும் விளங்கிக்கொண்டு வளர்ந்துவரும் இளம் சமுதாயத்துடன் கைகோர்த்து ஏனைய இனங்களையும் அணைத்து நாட்டையே வழிநடத்தக்கூடிய வல்லமையும் புத்திசாதுரியமும் உள்ள ஓர் ஆணையோ அல்லது ஒரு பெண்ணையோ தெரிந்து அனுப்புவது எவ்வளவோ உயர்வானது. அதனைத் தெரிவதற்கு முஸ்லிம் கட்சியென்ற ஒன்று அவசியமில்லை. எந்தக் கட்சியிலும் அவ்வாறான ஒரு தலைமையை தெரிவுசெய்யலாம். அது முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பு. அந்தத் தேடலுக்குத் தலைமை தாங்குவது புத்திஜீவிகளின் கடமை. அந்த உணர்வும் அதற்கான தேடலும் இன்னும்தான் முஸ்லிம்களிடையே இடம்பெறவில்லை என்பதே ஏமாற்றத்தைத் தருகிறது. –Vidivelli